கருப்புக் கொடி, கைது, தாக்குதல் : பாஜக-விசிக இடையே நீளும் மோதல், நவ.3-ல் ஆர்ப்பாட்டம்

பாஜக-விசிக இடையே கருப்புக் கொடி காட்டுதல், கைது, தாக்குதல் என மோதல் நீள்கிறது. நவம்பர் 3-ல் மாநிலம் முழுவதும் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

By: October 28, 2017, 1:36:50 PM

பாஜக-விசிக இடையே கருப்புக் கொடி காட்டுதல், கைது, தாக்குதல் என மோதல் நீள்கிறது. நவம்பர் 3-ல் மாநிலம் முழுவதும் சிறுத்தைகள் ஆர்ப்பாட்டம் நடத்துகிறார்கள்.

பாஜக-விடுதலை சிறுத்தைகள் இடையிலான மோதல் அதிகரித்து வருகிறது. ‘நடிகர் விஜய்-யை மிரட்டி தங்களுக்கு சாதகமாக வளைத்துப்போட பாஜக முயற்சிக்கிறது’ என விடுதலை சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் முன்வைத்த கருத்துதான் இந்த மோதலின் ஆரம்பபுள்ளி.

bjp, vck, thol.thirumavalavan, tamilisai soundararajan, mersal, actor vijay தமிழிசை செளந்தரராஜன்

இதற்கு பதில் தெரிவித்த தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன், ‘வளைத்துப் போடுவது திருமாவளவனுக்கும், சிறுத்தைகளுக்கும் வழக்கமானதுதான். சென்னையில் அவர்களது அலுவலகம் உள்பட பல இடங்கள் கட்டப்பஞ்சாயத்து நடத்தி வளைக்கப்பட்ட இடங்கள்தான்’ என்றார் தமிழிசை செளந்தரராஜன்.

சென்னை அசோக்நகரில் உள்ள விடுதலை சிறுத்தைகள் அலுவலகம் தொடர்பாக சிவில் பிரச்னைகள் எழுந்ததும், பிறகு உச்சநீதிமன்றம் வரை அந்த வழக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிறுத்தைகளுக்கு ஆதரவாக முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. இப்படி உச்சநீதிமன்றமே தங்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்த ஒரு பிரச்னையை கட்டப்பஞ்சாயத்து என தமிழிசை கூறுவதா? எனக் கேட்டபடி, தமிழகத்தில் பல இடங்களில் தமிழிசை உருவப் பொம்மையை எரித்து விடுதலை சிறுத்தைகள் போராட்டம் நடத்தினர்.

bjp, vck, thol.thirumavalavan, tamilisai soundararajan, mersal, actor vijay தொல்.திருமாவளவன்

கரூரில் இரு தினங்களுக்கு முன்பு பாஜக செயற்குழு கூட்டம் நடந்த மண்டபம் முன்பே ஆர்ப்பாட்டம் நடத்த சிறுத்தைகள் வந்தனர். அவர்களை போலீஸ் கைது செய்தது. ஆனாலும் மண்டபத்தில் இருந்த பாஜக-வினர் வெளியே வந்து சிறுத்தைகள் மீது தாக்குதல் நடத்தினர். இதேபோல நேற்று (27-ம் தேதி) மயிலாடுதுறையில் தமிழிசைக்கு கருப்புக் கொடி காட்ட சிறுத்தைகள் முயன்றனர்.

அப்போது தமிழிசையுடன் பயணித்த பாஜக நிர்வாகிகள் கருப்பு முருகானந்தம், அகோரம் உள்ளிட்டவர்கள் தலைமையில் விசிக-வினர் மீது தாக்குதல் நடத்தியதாக தெரிகிறது. அடுத்தடுத்து நடந்த இந்தத் தாக்குதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

இது குறித்து இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் திருமாவளவன் கூறியதாவது : மெர்சல் பிரச்னையில் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விக்கு, ‘நடிகர் விஜய்யை தங்களது கட்சிக்கு ஆதரவாக வளைத்து போட முயற்சிக்கின்றார்களா என்ற சந்தேகம் எழுகிறது’ என நான் குறிப்பிட்டேன். அதற்கு பதிலளித்த தமிழிசை, என் மீது அபாண்டமான அவதூறை பரப்பினார்.

தமிழிசையின் அவதூறுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தொண்டர்கள் ஜனநாயக முறைப்படி எதிர்ப்பை தெரிவித்தனர். காவல்துறை முன்னிலையிலே கரூரில் விடுதலை சிறுத்தைகள் மீது பா.ஜ.கவினர் தாக்குல் நடத்தினர். தமிழக காவல்துறை அதிமுக கட்டுப்பாட்டில் இருக்கின்றதா அல்லது பா.ஜ.க கட்டுப்பாட்டில் இருக்கின்றதா என தெரியவில்லை.

மயிலாடுதுறையிலும், கரூரிலும் விடுதலை சிறுத்தைகள் மீது நடந்த தாக்குதலை பார்த்தாலே யார் ரவுடித்தனம் செய்து இருக்கிறார்கள் என்பது தெரியும். ஆனால் ஹெச்.ராஜாவும், தமிழிசையும் விடுதலை சிறுத்தைகளை ரவுடிகள் என்று சொல்கிறார்கள். இதில் உண்மை மக்களுக்கு தெரியும்.

அரசியல் நாகரீகம் கருதி விடுதலைச் சிறுத்தைகள் அமைதியாக இருக்கின்றோம், பா.ஜ.க வின் இந்த போக்கு விடுதலை சிறுத்தைகளின் கட்டுப்பாடை சீண்டிப் பார்ப்பது போல இருக்கிறது. சமூக வலைதளங்களில் விடுதலைச் சிறுத்தைகள் நாகரீகமாக செயல்பட வேண்டும். சீண்டுவோருக்கும், தூண்டுவோருக்கும் யாரும் பலியாகிவிடக்கூடாது. பாஜக-வின் வன்முறையை கண்டித்து நவம்பர் 3-ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிளும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.’ இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

இதற்கிடையே, பாஜக தலைவர்கள் செல்கிற இடங்களில் வன்முறையைத் தூண்டும் வகையில் விடுதலை சிறுத்தைகள் செயல்படுவதாகவும், இது தொடர்ந்தால் நாங்களும் அமைதியாக இருக்க மாட்டோம் என தமிழிசை கடும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். இரு கட்சிகளின் மோதல் பரபரப்பையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது.

 

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vck protest on november 3 against bjp

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X