இன்று முதல் திறக்கப்படும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்!

வேடந்தாங்கலில் 4,000 பறவைகள் வந்துள்ளன. இதனால் இன்று முதல் மக்கள் பார்வைக்காக இந்த சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது

வேடந்தாங்கலில் 4,000 பறவைகள் வந்துள்ளன. இதனால் இன்று முதல் மக்கள் பார்வைக்காக இந்த சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது

author-image
Anbarasan Gnanamani
புதுப்பிக்கப்பட்டது
New Update
வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம்

வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயம் இன்று முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளன.

Advertisment

நாட்டிலேயே மிகவும் பழமையான பறவைகள் சரணாலயம் மதுராந்தகம் அருகே உள்ள வேடந்தாங்கலில் உள்ளது. தமிழகத்திலேயே பெரிய சரணாலயம் என்ற சிறப்பை பெற்ற வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு, ஆண்டுதோறும் வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கும் அக்டோபர் மாதம் முதல் மொத்தம் 26 வகையான வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கும். இங்கு வேடந்தாங்கல் ஏரி ஒன்று உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பு 40 ஹெக்டேர் ஆகும்.

இந்த ஆண்டும் வேடந்தாங்கலுக்கு வெளிநாட்டு பறவைகள் வரத்தொடங்கியுள்ளன. இதுவரை 4 ஆயிரம் பறவைகள் வருகை தந்துள்ளன. டிசம்பர் மாதத்துக்குள் சுமார் 30 ஆயிரம் பறவைகள் வரை இங்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்குள்ள ஏரியிலும் போதிய அளவு நீர் இருப்பதால், வழக்கம் போலவே இந்த ஆண்டும் சீசன் களைகட்டும் என தெரிகிறது.

இந்த இடம் கடந்த 18-ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்கள் பறவைகளை வேட்டையாடி பொழுதை கழிப்பதற்காக பயன்படுத்தி வந்தனர். இதனால் இந்த ஊருக்கு வேடர்களின் கிராமம் என்ற பெயரும் உண்டு. அதன் பின்னர் கிராம மக்களின் வேண்டுகோளுக்கு இணங்க 1797- ஆம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக இருந்த இலயோனசு பிளெசு என்பவர் வேடந்தாங்கலைப் பறவைகள் சரணாலயம் என்று ஆய்வு செய்து அறிவித்தார்.

Advertisment
Advertisements

இந்த வேடந்தாங்கல் ஏரி இயற்கை எழில் கொஞ்சும் வகையில் உள்ளதால் இங்கு எவ்வித இடையூறும் இன்று முட்டையிட்டு குஞ்சு பொறிப்பதற்காக ஏராளமான பறவைகள் வருகின்றன. கனடா, சைபீரியா, வங்கதேசம், பர்மா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் இருந்து ஏராளமான பறவைகள் வரும்.

வேடந்தாங்கல் ஏரியில் உள்ள மரங்களில் கிளுவை, ஊசிவால் வாத்து, நீலச்சிறகி, வாத்துகள், தட்டவாயன், பச்சைக்காலி, பவளக்காலி, பட்டாணி உள்ளான், உண்ணிக்கொக்கு, சிறுவெண் கொக்கு, சிறிய நீர்க்காகம், கூழைக்கடா, மஞ்சள் மூக்கு நாரை, பாம்புத்தாரா, வெள்ளை அரிவாள் மூக்கன், குருட்டுக்கொக்கு எனப்படும் மடையான், நத்தைகுத்தி நாரை, முக்குளிப்பான், கொண்டை நீர்க்காகம் வக்கா ஆகிய பறவைகள் வரும்.

இந்த பறவைகளின் எச்சம் வயல்வெளிகளுக்கு இயற்கை உரமாக இருக்கும் என மக்கள் கருதுகின்றனர். அதனால் நம் நாட்டுக்கு விருந்தாளியாக வரும் அந்த பறவைகளுக்கு இடையூறு இன்றி பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.

இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்த வேடந்தாங்கலில் 4,000 பறவைகள் வந்துள்ளன. இதனால் இன்று முதல் மக்கள் பார்வைக்காக இந்த சரணாலயம் திறக்கப்பட்டுள்ளது.

இன்று காலை 6.30 மணி முதல் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். குடிநீர் வசதி, கழிப்பிட வசதி, தொலைவில் உள்ள பறவைகளை அருகில் கண்டு ரசிக்க பைனாக்குலர் வசதி போன்றவை செய்யப்பட்டுள்ளன.

பார்வையாளர்கள் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.5-ம், சிறியவர்களுக்கு ரூ.2-ம், வீடியோ கேமராவுக்கு ரூ.150-ம், செல்போன் கேமராவிற்கு ரூ.25-ம் வசூலிக்கப்படுகிறது.

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: