Vellore lok sabha election result 2019: வேலூர் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணிக்கை முடிவில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் அதிமுக வேட்பாளரும் புதிய நீதிக்கட்சி தலைவருமான ஏ.சி.சண்முகத்தைவிட 8290 வாக்குகள் கூதலாக பெற்று வெற்றி பெற்றுள்ளார். இதில் இரு கட்சிகளும் எந்தெந்த சட்டமன்றத் தொகுதிகளில் கூடுதலாக வாக்குகளைப் பெற்றிருக்கிறார்கள் என்பதை காண்போம்.
கடந்த பொதுத் தேர்தலின் போது, தேர்தல் ஆணையம் வேலூர் மக்களவைத் தொகுதியில் பணப்பட்டுவாடா காரணமாக தேர்தலை ரத்து செய்தது. இதையடுத்து, வேலூர் தொகுதிக்கு கடந்த மாதம் தேர்தல் அறிவிக்கப்பட்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. அதன்படி, ஆகஸ்ட் 9 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இந்த தேர்தலில் திமுக சார்பில் கதிர் ஆனந்த் மற்றும் அதிமுகவில் ஏ.சி.சண்முகம் இடையே கடுமையான போட்டி நிலவியது.
காலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதல் 6 சுற்றுகள் வரை அதிமுகவின் ஏ.சி.சண்முகம்தான் முன்னிலை வகித்தார். இதனால், திமுக தொண்டர்கள் சற்று சோர்வாக காணப்பட்டனர். அதிமுக தொண்டர்கள் உற்சாகமாக காணப்பட்டனர். ஆனால், நிலைமை அப்படியே தொடரவில்லை. 7வது சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவில் இருந்து நிலைமை தலைகீழாக மாறத் தொடங்கியது. அதன் பிறகு திமுகவின் கதிர் ஆனந்த் முன்னிலை வகிக்கத் தொடங்கினார்.அடுத்த சில சுற்றுகளில் கதிர் ஆனந்தைவிட ஏ.சி.சண்முக கூடுதலாக வாக்குகள் பெற்றிருந்தாலும், மொத்த வாக்கு வித்தியாசத்தில் கதிர் ஆனந்த்தான் தொடர்ந்து முன்னிலை பெற்றுவந்தார்.
வேலூர் பாராளுமன்ற தொகுதி தேர்தல் முடிவுகள்: சட்டமன்ற தொகுதி வாரியாக
வேலூர்
திமுக - 78901
அதிமுக - 72626
வித்தியாசம் - 6275 (திமுக முன்னிலை)
அணைக்கட்டு
அதிமுக - 88770
திமுக - 79231
வித்தியாசம் - 9549 (அதிமுக முன்னிலை)
குடியாத்தம்
அதிமுக - 94178
திமுக - 82887
வித்தியாசம் - 11291 (அதிமுக முன்னிலை)
கேவி குப்பம்
அதிமுக - 80100
திமுக - 71991
வித்தியாசம் - 8109 (அதிமுக முன்னிலை)
வாணியம்பாடி
திமுக - 92599
அதிமுக - 70248
வித்தியாசம் - 22,351 (திமுக முன்னிலை)
ஆம்பூர்
திமுக - 79371
அதிமுக - 70768
வித்தியாசம் - 8603 (திமுக முன்னிலை)
இப்படி விறுவிறுப்பாக சென்று கொண்டிருந்த வாக்கு எண்ணிக்கை முன்னிலை நிலவரத்தில், ஒருவழியாக 20வது சுற்று முடிவில் கதிர் ஆனந்த்தான் வெற்றிபெறுவார் என்பது உறுதியானது. இதையடுத்து, இறுதி சுற்றான 21வது சுற்று வாக்கு எண்ணிக்கையில், கதிர் ஆனந்த் மொத்தமாக 4,84,980 வாக்குகள் பெற்று ஏ.சி.சண்முகத்தைவிட 8,290 வாக்குக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதிமுகவின் ஏ.சி.சண்முகம் மொத்தமாக 4,76,690 வாக்குகள் பெற்றார். இதில், குறிப்பிடும்படியாக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் தீபலட்சுமி 26,912 வாக்குகள் பெற்றுள்ளார்.
8,290 வாக்கு வித்தியாசம் என்பது மிகப்பெரிய வாக்கு வித்தியாசம் இல்லை. ஏனென்றால், பொதுத் தேர்தலின்போது வெற்றி பெற்ற திமுக வேட்பாளர்களின் வாக்கு வித்தியாசத்தைவிட கதிர் ஆனந்த்தான் மிகக் குறைவான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். திமுக கூட்டணி கட்சி வேட்பாளரும் விசிக தலைவருமான திருமாவளவன் 2,686 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத் தக்கது.
வேலூர் மக்களவைத் தொகுதியில் வேலூர், அனைக்கட்டு, கே.வி.குப்பம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இதில், திமுக வேலூரில் 6,275 வாக்குகள், வாணியம்பாடியில் 22,311 வாக்குகள், ஆம்பூரில் 8,603 வாக்குகள் அதிமுகவைவிட கூடுதலாக பெற்றுள்ளது. அதே போல, அதிமுக அனைக்கட்டில் 9,539 வாக்குகள், குடியாத்தத்தில் 11,291 வாக்குகள், கே.வி.குப்பத்தில் 8,109 வாக்குகள் திமுகவைவிட கூடுதலாக பெற்றுள்ளது. இதன்படி, வாணியம்பாடியில் திமுகவின் கதிர் ஆனந்த் மிக அதிக அளவில் வாக்குகளை பெற்றுள்ளார்.
வேலூர் தொகுதியில் பதிவான மொத்த வாக்குகளில் திமுக 47.30% வாக்குகளையும், அதிமுக 46.51% வாக்குகளையும் பெற்றுள்ளனர். வாக்கு சதவீதத்திலும் மிகப்பெரிய வித்தியாசம் இல்லை. எப்படி இருந்தாலும் திமுகவுக்கு இது ஒரு குறிப்பிடத்தக்க வெற்றி என்பதில் சந்தேகம் இல்லை. இந்த வெற்றியின் மூலம் திமுகவுக்கு மக்களவையில் இன்னொரு எம்.பி சேர்ந்திருக்கிறார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.