தமிழர் விரோத பெட்ரோலிய மண்டலம்: மோடி, எடப்பாடி-க்கு வேல்முருகன் கண்டனம்!

45 கிராமங்களிலும் சுமார் 58,000 ஏக்கர் நிலத்தில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆலைகள் நிறுவப்படும்.

கடலூர், நாகை மாவட்டங்களில் “பெட்ரோல் மண்டலம்” அமைக்க அனுமதியளித்து செயல்படுத்துவதற்கான அறிவிக்கை செய்யப்பட்டுள்ளதற்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடலூர், நாகை மாவட்டங்களில் “பெட்ரோல் மண்டலம்” அமைக்க அனுமதியளித்து செயல்படுத்துவதற்கான அறிவிக்கை செய்யப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தின் சிதம்பரம், புவனகிரி வட்டங்களில் 25 கிராமங்கள், நாகை மாவட்டத்தின் சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் 20 கிராமங்கள், ஆக 45 கிராமங்கள் முதல் கட்டமாக இந்த பெட்ரோலிய மண்டலத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

இந்த 45 கிராமங்களிலும் சுமார் 58,000 ஏக்கர் நிலத்தில் சுமார் 93 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் பெட்ரோலிய சுத்திகரிப்பு மற்றும் பெட்ரோலியப் பொருட்கள் ஆலைகள் நிறுவப்படும். இத்திட்டத்திற்கு 2012-ம் ஆண்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது; 2014-ம் ஆண்டில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இப்போது எடப்பாடி அரசு அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செயல்படுத்த பெட்ரோலிய மண்டலத்தை அறிவித்திருக்கிறது. 2012-ம் ஆண்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் (தஞ்சை, திருவாரூர், நாகை) மீத்தேன் எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. அரசு தலையிட்டதன் பேரில் அது கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

ஆனால் அதுவே ஹைட்ரோ கார்பன், ஷேல் கேஸ் என்று மாறுவேடங்களில் வந்ததால் இன்று 103-வது நாளாக புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் போராட்டம் தொடர்கிறது. மீத்தேன் மற்றும் ஹைட்ரோ கார்பன் எடுப்புத் திட்டத்தை தமிழ்நாட்டில் மொத்தம் 110 இடங்களில் ஓஎன்ஜிசி-யே மேற்கொள்வதாகத் தெரியவந்ததால் தஞ்சை மாவட்டம் கதிராமங்கலம் கடந்த ஒன்றரை மாத காலமாக போராட்ட களமாகவே மாறியுள்ளது.

இந்தப் போராட்டங்களுக்கு தமிழகமெங்கிலும் ஆதரவு பெருகி வருகிறது. குறிப்பாக மாணவர்கள் மத்தியில் பேரெழுச்சியே ஏற்பட்டிக்கிறது. இதன் காரணமாக பேராசிரியர் ஜெயராமன் உள்ளிட்ட 10 பேரை பிணையில் வரமுடியாத பிரிவுகளில் கைது செய்து சிறையிலடைத்துள்ளது எடப்பாடி அரசு.

மேலும் சேலம் பெரியார் பல்கலைக்கழக மாணவி வளர்மதியையும் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் குபேந்திரனையும் ஆள்தூக்கிக் கருப்புச் சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்திருக்கிறது.

தமிழ்நாட்டின் வாழ்வாதாரத் தொழில் விவசாயம். அது காவிரி பாசனப் பகுதிகளான தஞ்சை, திருவாரூர், நாகை மற்றும் அதைச் சுற்றியுள்ள கடலூர், அரியலூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஓரளவுக்கேனும் நடந்து வந்தது.

ஆனால் நடுவண் அரசோ பெட்ரோலியப் பொருட்கள் எடுப்பதற்காக விவசாயத்தையே அழித்துவிட எண்ணியது. அதனால்தான் காவிரி மேலாண்மை வாரியத்தைக் காலிபண்ணி தமிழகத்திற்கு நிரந்தரமாக நீர் கிடைக்காமல் செய்யப் பார்க்கிறது. இதனாலேயே கடந்த ஐந்து ஆண்டுகளில் டெல்டா மாவட்டங்களில் முப்போகமுமே முடிவுக்கு வந்துவிட்டிருக்கிறது.

ஏற்கனவே ஓஎன்ஜிசியின் துரப்பணப் பணிகள், அனல் மின் நிலையங்கள், சிப்காட் தொழிற்சாலைகள் போன்றவற்றால் இப்பகுதியின் நிலத்தடி நீர்மட்டம் சில இடங்களில் ஆயிரம் அடி அளவுக்குக் கீழிறங்கியுள்ளது. அதோடு கடல்நீரும் உட்புகுந்து கரிப்புநீராகியுள்ளது. இதன் காரணமாக நிலத்தில் அங்கங்கே உவர்ப்புத்தன்மை மற்றும் மலட்டுத்தன்மை தோன்றியுள்ளது. சுற்றுச்சூழலும் பாதிப்புக்குள்ளாகி அதனாலும் மண்வளம் குன்றத் தொடங்கியுள்ளது.

இந்நிலை நீடித்தால் நாளடைவில் நிலமே பாலையாகிவிடும். அதன்பின் அது மக்களின் வாழிடமாக இருக்காது என்ற எண்ணமும் ஏற்பட்டுள்ளது. இப்போதே மக்களின் இடப்பெயர்ச்சி தொடங்கிவிட்டிருக்கிறது.

இந்த ஆபத்தை உணர்ந்துதான் சுற்றியுள்ள மாவட்டங்களை உள்ளடக்கிய காவிரி டெல்டா பகுதியை “வேளாண் பாதுகாப்பு மண்டலமாக” அறிவிக்கக் கோரி தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது. அதன் எழுச்சி வடிவம்தான் இன்று நெடுவாசலிலும் கதிராமங்கலத்திலும் காண்பது.

ஆனால் ஒருபக்கம் மக்கள் நலனைப் பாதிக்கும் திட்டங்களை அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளித்துக் கொண்டே மறுபக்கம் மோடியின் கொடுங்கனவுகளை நனவாக்கும் காரியத்தில் இறங்கியிருக்கிறது எடப்பாடி அரசு.

மேற்கு வங்கமும் கேரளமும் துரத்தியடித்த பெட்ரோலிய மண்டலத்தைத்தான் தமிழ் மண்ணில் செயல்பட அனுமதித்திருக்கிறார் எடப்பாடி. தமிழ்-தமிழினம்-தமிழகம் என்கின்ற வரலாற்று விழுமியத்தையே இல்லாதழிக்கப் பார்க்கிறார் கார்ப்பொரேட் மோடி!

அவர் காலால் இடும் கட்டளையை தலையாலேயே செய்துமுடிக்கத் துடிக்கிறார் எடப்பாடி!

இருவரையும் எச்சரிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி, தமிழர் விரோத பெட்ரோலிய மண்டலத்தை உடனடியாகக் கைவிடக் கோருகிறது!

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close