பிக்பாஸை நிறுத்தாவிட்டால் போராட்டம் வெடிக்கும்: வேல்முருகன் எச்சரிக்கை

இந்த சர்ச்சைகள், பிரச்சனைகள் என்பது பிக்பாஸின் டிஆர்பி-க்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கின்றது என்பதே உண்மை.

நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மக்கள் மத்தியில் ஆதரவும், அதைவிட அதிகமாக அதே மக்களிடம் இருந்து எதிர்ப்பும் இருந்து வருகிறது. சிலர் அதனை பொழுதுபோக்காகவும், சிலர் அதனை தங்கள் வாழ்வியலுடன் ஒப்பிட்டும் பார்ப்பதாலேயே எதிர்ப்பும், ஆதரவும் கலந்து வருகிறது.

இந்த நிகழ்ச்சியின் பலமே, ஆண்கள் இதனை பார்ப்பது தான். பொதுவாக டிவி சீரியலை விரும்பாத ஆண்கள், குறிப்பாக இளைஞர்கள், பிக்பாஸ் நிகழ்ச்சியை தினம் பார்த்து வருகின்றனர். அதேபோன்று பல திரை நட்சத்திரங்களும் இந்நிகழ்ச்சியை பார்க்கின்றனர்.
என்னதான் பொழுதுபோக்கு நிகழ்ச்சியாக இருந்தாலும், போட்டியாளர்களில் சிலர் தவறான வார்த்தைகளை பயன்படுத்தி வருவதால், நிறைய சர்ச்சைகளும், அதனால் வழக்குகளும் தொடரப்பட்டு வருகின்றன.

குறிப்பாக, ‘சேரி பிஹேவியர்’ என்ற வார்த்தையை போட்டியாளர் காயத்ரி உபயோகப்படுத்த, பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனையும், இதில் பங்கேற்றவர்களையும் கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தது.

இதற்கு பதில் அளிக்க பத்திரிக்கையாளர்களிடம் பேச வந்த கமல், ‘தமிழக அரசியலில் எல்லா துறையிலும் ஊழல் இருக்கு’ என்று கூற, அதற்கு தமிழக அமைச்சர்கள் இன்று வரை கமலை விமர்சித்துக் கொண்டிருக்கின்றனர் என்பது தனிக்கதை.

இருப்பினும், இந்த சர்ச்சைகள், பிரச்சனைகள் என்பது பிக்பாஸின் டிஆர்பி-க்கு எந்த பங்கமும் வராமல் பார்த்துக் கொள்கின்றது என்பதே உண்மை.

இந்த நிலையில், தமிழக வாழ்வுரிமை கட்சியில் தலைவர் வேல்முருகன் அளித்துள்ள பேட்டியில், “பிக்பாஸ் நிகழ்ச்சியை தடை செய்யாவிட்டால் அதை ஒளிபரப்பு செய்யும் தனியார் தொலைக்காட்சிக்கு எதிராக மிகப் ‌பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இந்த நிகழ்ச்சி கோடிக்கணக்கான தமிழர்களின் நெஞ்சில் நஞ்சை விதைக்கிறது” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

×Close
×Close