காந்தி, காமராஜர் உருவப் படங்களிடம் மனு கொடுத்த மக்கள் : ‘டாஸ்மாக்’கிற்கு எதிராக நெல்லையில் கிளர்ச்சி

‘டாஸ்மாக்’ கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் காந்தி, காமராஜர் படங்களிடம் மனு கொடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர்.

‘டாஸ்மாக்’ கடையை திறக்க எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் காந்தி, காமராஜர் படங்களிடம் மனு கொடுத்து மக்கள் போராட்டம் நடத்தினர்.
மது அரக்கனை ஒழிக்க தமிழகம் முழுவதும் பெண்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகிறார்கள். ஜூலை 13-ம் தேதி இது தொடர்பான ஒரு வழக்கு சென்னை உயரீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, நீதிபதி கிருபாகரன் காட்டமாகவே அரசுக்கு கேள்விகளை எழுப்பினார். ‘பூரண மதுவிலக்கு என கூறிய தேர்தல் வாக்குறுதி என்னாச்சு?’ என கேள்வி எழுப்பிய நீதிபதி, சிறுவர்களுக்கு எங்காவது மது வழங்கப்படுவதாக தெரியவந்தால் போலீஸார் தாங்களாகவே வழக்குப்பதிவு செய்யவேண்டும் என குறிப்பிட்டார்.
உயர்நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரிக்கப்பட்ட அதே நாளில் திருநெல்வேலி மாவட்டம் வெங்காடம்பட்டியை சேர்ந்த கிராம மக்கள் நூதன முறையில் போராட்டம் ஒன்றை நடத்தினார்கள்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பெரிய கிராம பஞ்சாயத்து வெங்காடம்பட்டி. பள்ளிகள், கல்லூரி, சிறுவர் இல்லம் ஆகியன அமைந்துள்ள ஏரியா இது.
இந்த ஏரியாவின் சுற்று வட்டாரப் பகுதிகளில் மக்கள் போராட்டங்களால் ‘டாஸ்மாக்’ கடைகள் பலவும் மூடப்பட்டுவிட்டன. எனவே இப்போது கடையம், ஆலங்குளம், பாவூர்சத்திரம் ஆகிய சுற்று வட்டார மதுப் பிரியர்கள் அனைவரும் வெங்காடம்பட்டி பஞ்சாயத்துக்கு உட்பட்ட மைலப்புரத்தில் அமைந்துள்ள ‘டாஸ்மாக்’ கடைக்கு படையெடுக்கிறார்கள். இங்கும் ஊர்மக்கள் ஒருங்கிணைந்து போராடியதால் கடையை அகற்றுவதாக அதிகாரிகள் உறுதி கூறினர். ஆனால் இதுவரை கடை அகற்றப்படவில்லை.
இதற்கிடையே சுற்று வட்டாரப் பகுதிகளில் அடைக்கப்பட்ட கடைகளை ஈடு செய்யும் வகையில் அதே வெங்காடம்பட்டி பஞ்சாயத்தில் தனியார் விளைநிலம் ஒன்றில் புதிதாக ‘டாஸ்மாக்’ கடை அமைக்க அதிகாரிகள் ஆயத்தமாகி வருகிறார்கள். இதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கியிருக்கின்றன.
இந்தக் கடை அமைந்தால் 30 கி.மீ சுற்றளவில் உள்ள மொத்த மதுப் பிரியர்களும் வெங்காடம்பட்டியை மொய்க்கும் நிலை ஏற்படும். தொழிற்பேட்டை என சொல்வதுபோல, வெங்காடம்பட்டி ‘சாராயப் பேட்டை’ ஆகிவிடும் அபாயம் இருக்கிறது.
எனவே ‘டாஸ்மாக்’ நிர்வாக தனது இந்த முயற்சியை நிறுத்த வலியுறுத்தி ஜூலை 13-ம் தேதி வெங்காடம்பட்டியை சேர்ந்த சமூக ஆர்வலர் பூ.திருமாறன், அரியப்பபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான் ஜெயபால், ஆவுடையானூர் ‘பாளையத்தார்’ சிவகுமார் ஆகியோர் தலைமையில் ஊர் மக்கள் திருநெல்வேலியில் உள்ள கலெக்டர் அலுவலகத்திற்கு படையெடுத்தனர்.
தங்களுடன் தேசப்பிதா காந்தி, பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரின் பெரிய உருவப்படங்களையும் அவர்கள் எடுத்து வந்திருந்தனர். அதிகாரிகளிடம் மனு கொடுப்பதற்கு முன்பாக மேற்படி தலைவர்களின் உருவப்படங்களிடம் மனு கொடுத்து மக்கள் முறையிட்டனர்.
‘மதுவுக்கு எதிராக எழும் குரல்களுக்கு அதிகாரிகள் மதிப்பு கொடுக்கவேண்டும். மதுவுக்கு எதிராக போராடும் மக்களை கைது செய்யக்கூடாது. பூரண மதுவிலக்கை நோக்கி அரசு நடவடிக்கை இருக்கவேண்டும் என பலமுறை உயர்நீதிமன்றமே அறிவுறுத்திவிட்டது. அதன்பிறகும் கிராமங்களில் விடாப்பிடியாக மதுக்கடைகளை கொண்டுவந்து ‘டாஸ்மாக்’ நிர்வாகம் திணிப்பதை நிறுத்த வேண்டும்.’ என்றார், சமூக ஆர்வலர் திருமாறன்,
அரியப்பபுரம் முன்னாள் பஞ்சாயத்து தலைவர் ஜான் ஜெயபால், ஆவுடையானூர் சிவகுமார் ஆகியோர் கூறுகையில், ‘விவசாயத்தையும் பீடித்தொழிலையும் மட்டும் நம்பியிருக்கும் மிகவும் பின் தங்கிய ஏரியா இது. இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக கல்வியை நோக்கி இங்குள்ள இளைஞர்கள் திரும்பியிருக்கிறார்கள். ஆனால் சுற்று வட்டாரப் பகுதி குடிகாரர்களையெல்லாம் இங்கு திருப்பிவிடும் வேலையை ‘டாஸ்மாக்’ நிர்வாகம் செய்தால், அது பெரிய சட்டம்-ஒழுங்கு பிரச்னையாக மாறும். கலெக்டர் சந்தீப் நந்தூரியிடம் இது குறித்து முறையிட்டுள்ளோம். தேவைப்பட்டால் நீதிமன்றத்தையும் நாடுவோம்’ என்றார்கள் அவர்கள்.
மதுவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தொடர்ந்தபடியே இருக்கிறது.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close