/tamil-ie/media/media_files/uploads/2017/09/z374.jpg)
நடிகா் திலகம் சிவாஜி கணேசனின் மணிமண்டபம் வருகிற அக்டோபா் 1ம் தேதி திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.
ரசிகர்களால் 'நடிகர் திலகம்' என்று அழைக்கப்படும் சிவாஜி கணேசன், கடந்த 2001–ம் ஆண்டு ஜூலை 21–ந் தேதி மரணம் அடைந்தார். அதன்பின்னர் சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டுவதற்கு அரசிடம் இடம் கேட்கப்பட்டது. அப்போது 2002–ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா அடையாறு சத்யா ஸ்டூடியோ எதிரே 28 ஆயிரத்து 300 சதுரடி இடம் ஒதுக்கி கொடுத்தார்.
பின்னர் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டுவதற்கான பூமி பூஜை நடந்தது. அதன்பின்னர் மணிமண்டபம் கட்டும் பணி அப்படியே நின்று போனது. இந்த நிலையில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஆகஸ்டு 26-ஆம் தேதி சட்டசபையில் 110–விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, ‘சிவாஜி கணேசனுக்கு தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வழங்கப்பட்ட இடத்தில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபம் கட்டப்படும்’ என்றார்.
இதைத் தொடர்ந்து, சென்னை அடையாற்றில் சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் அமைக்கும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது. தற்போது பணிகள் முடியும் நிலையில் உள்ளது. இதனிடையே சிவாஜி கணேசனின் 90வது பிறந்த நாள் வருகிற அக்டோபா் மாதம் 1ம் தேதி கொண்டாடப்படுகிறது.
இதையடுத்து, அவரது பிறந்த நாளன்று மணிமண்டபத்தை திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.2.80 கோடி செலவில், 2 ஆயிரத்து 124 சதுர அடி பரப்பளவில் இந்த மணிமண்டபம் உருவாக்கப்பட்டுள்ளது.
மெரினா கடற்கரையில் இருந்து அகற்றப்பட்ட சிவாஜி கணேசனின் சிலை, மணிமண்டப வளாகத்தில் நிறுவப்பட்டுள்ளது. இந்த மணிமண்டபத்தில் சிவாஜிகணேசனின் வாழ்க்கை வரலாறு, புகைப்படங்கள் இடம் பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மணிமண்டபத்தை வருகிற 1ம் தேதி முதல்வா் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கிறாா். திறப்பு விழாவிற்கு நடிகா் ரஜினிகாந்த் உள்ளிட்ட முக்கிய பிரமுகா்களுக்கு அழைப்பு விடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.