எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா: நாற்காலிக்காக சண்டை போட்ட அமைச்சர் - துணை சபாநாயகர்! (வீடியோ)

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையிலேயே, கட்சியின் முக்கிய தலைவர்கள் இடையே நாற்காலி சண்டை ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் நேற்று எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும், அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கும் நாற்காலியில் இடம் பிடிப்பதில் பிரச்சனை ஏற்பட்டது. இதனால், இருவரும் சிறிது நேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

முன்னதாக, இந்த விழா ஆரம்பிக்கும் முன்புவரை, சபாநாயகர் மற்றும் முதல்வர் வருகைக்காக, அமைச்சர்களும், எம்.எல்.ஏக்களும் நூற்றாண்டு விழாவுக்காக அமைக்கப்பட்டு இருந்த மேடையின் கீழ் காத்துக்கொண்டு இருந்தனர்.

பின்னர், சபாநாயகர் தனபால் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வந்ததும் அவர்கள் மேடைக்குச் சென்றனர். அதன்பின்னரே, மற்றவர்கள் மேடைக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இந்த நிலையில், விழா மேடையில் முதல்வரும் சபாநாயகரும் அருகருகே அமர்ந்திருக்க, சபாநாயகரின் அருகில் சென்று அமர துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் முற்பட்டார். அப்போது கோபத்துடன் விரைந்து வந்த அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், துணை சபாநாயகரை பின்னால் போடப்பட்டிருந்த நாற்காலிகளில் போய் அமருமாறு கூறினார்.

பதிலுக்கு துணை சபாநாயகரோ ” நான் ஏன் போக வேண்டும் என்று எதிர் கேள்வி கேட்க, அடுத்த சில நொடிகளில் இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டது. உடனே முதல்வர் பழனிசாமி தலையிட்டு, இருவரையும் சமாதானப்படுத்த முயற்சி செய்தார்.

இதைத் தொடர்ந்து அருகில் இருந்த அமைச்சர்கள் தங்கமணியும், செங்கோட்டையனும் சேர்ந்து உடுமலை ராதாகிருஷ்ணனை பக்கவாட்டில் இழுத்து அமர வைத்தார்கள். எஸ்.பி வேலுமணியும், தனியரசுவும் பொள்ளாச்சி ஜெயராமனை அமைதிப்படுத்தினர். இதனால் விழா மேடையில் சிறிது நேரம் பரபரப்பு நீடித்தது.

அதன்பிறகு, விழா முன்னிலை உரை வாசித்த உடுமலை ராதாகிருஷ்ணன், கட்சியின் முக்கிய தலைவர்களின் பெயர்களை எல்லாம் வரிசையாக வாசித்து நன்றி தெரிவிக்க, பொள்ளாச்சி ஜெயராமனின் பெயரை மட்டும் பாதியிலேயே புறக்கணித்து அடுத்தவர்களின் பெயர்களை வாசித்தார்.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் முன்னிலையிலேயே, கட்சியின் முக்கிய தலைவர்கள் இடையே நாற்காலி சண்டை ஏற்பட்டிருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விழா முடியும் வரை, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இறுகிய முகத்துடனேயே அமர்ந்திருந்ததை காண முடிந்தது.

×Close
×Close