மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்ற போது சசிகலா எடுத்த வீடியோ தான் என்னிடம் உள்ளது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
குடகில் இருந்து சென்னை திரும்பியுள்ள டிடிவி தினகரன், அடையாரில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கடந்த காலங்களில் தொலைகாட்சிகள் வருவதற்கு முன்னர் அரசியல்வாதிகள் எதை வேண்டுமானாலும் பேசிக் விட்டு அதனை மாற்றிக் கொள்வார்கள். பொதுவாக மக்கள் மறந்து விடுவார்கள் என நினைத்து நேற்று ஒன்றும் இன்று ஒன்றும் அவர்கள் அப்படி பேசுவார்கள். எனவே, தான் பொதுவாக அரசியல் வாதிகள் மீது நம்பகத்தன்மை நம் நாட்டில் குறைந்துள்ளது.
ஆனால், தொலைக்கட்சிகள் வந்த பின்னர், மாற்றி பேச முடியாது. அப்படி பேசினால் ஊடகங்கள் காட்டுகிறதோ இல்லையோ இளைஞர்களே தோலுரித்து காட்டி விடுவார்கள் என்றார்.
மேலும் பேசிய அவர், ஜெயலலிதா மரணத்திற்கு பின்னர், சிறு சலசலப்பு கூட இல்லாமல் பன்னீர்செல்வத்தை சசிகலா முதல்வராக்கினார். ஆனால், அவரது நடவடிக்கை சரி இல்லை என இப்போது உள்ள அமைச்சர்கள் நாள்தோறும் வந்து புகார் கூறினார்கள். சசிகலா பொதுச் செயலாளராக வேண்டும் எனவும், முதல்வராக வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். தொடர்ந்து, இவர்களே பொதுக்குழுவைக் கூட்டி சசிகலாவை பொதுச் செயலாளராக்கினர். அதிமுக-வில் உட்கட்சித் தேர்தல் நடைபெறும் வரை, சசிகலா பொதுச் செயலாளர் என்பது தான் கட்சி விதி.
அதிமுக, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்தக் கூடாது என தேர்தல் ஆணையம் தடை செய்துள்ளது. பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என்றால் பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கை வைத்து பொதுச் செயலாளர் அனுமதி அளித்த பின் தான் தான் கூட்ட வேண்டும். அன்று நடைபெற்றது பொதுக்குழு கூட்டமே அல்ல. பதவியை தக்க வைப்பதற்காக அமைச்சர்கள் மாறிமாறி பேசி வருகின்றனர். தற்போது, அமைச்சர்களின் தரம் தமிழக மக்களிடம் மோசமடைந்து வருகிறது. இருக்கிற வரை ஆதாயம் அடைய வேண்டும் என்பது தான் இபிஎஸ்-ஓபிஎஸ் எண்ணம். பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலை சந்தியுங்கள். அப்போது, பொதுமக்களும், அதிமுக தொண்டர்களும் அவர்களுக்கு பதில் சொல்வார்கள் என்றார்.
ஜெயலலிதா மரணம் குறித்து திடீரென சந்தேகம் கிளப்புவது ஏன்? என கேள்வி எழுப்பிய டிடிவி தினகரன், அவர் மரணம் தொடர்பாக கேள்வி எழுப்புவது திட்டமிடப்பட்ட சதி. ஜெயலலிதா மரணம் தொடர்பாக சிபிஐ அல்ல இன்டர்போல் கூட விசாரிக்கட்டும். அதுகுறித்து கவலை இல்லை. ஓய்வு பெற்ற நீதிபதியை விட, மூத்த நீதிபதிகளை கொண்டு ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிப்பது சிறந்தது என்றார்.
மேலும், என்னிடம் சிசிடிசி காட்சிகள் உள்ளது என கூறவில்லை. மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் போது சசிகலா எடுத்த வீடியோ தான் உள்ளது. ஜெயலலிதா எடை குறைந்து நைட்டியுடன் இருந்ததால் வெளியிட வில்லை. தேவைப்பட்டால் நீதி விசாரணையின் போது அந்த வீடியோவை தாக்கல் செய்வோம் என்றும் தினகரன் விளக்கமளித்துள்ளார்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சசிகலா கணவர் நடராஜனின் உடல் நிலை குறித்த கேள்விக்கு, அவரது உடல்நிலை சீராக உள்ளது. உறவினர் ஒருவரது சிறுநீரகத்தை பொருத்த உள்ளோம். ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை முடிந்து வீடு திரும்புவார் என்று தினகரன் பதிலளித்தார்.