நீட் தேர்வால் மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காத அரியலூர் மாணவி அனிதா, கடந்த சில நாட்களுக்கு முன் தற்கொலை செய்துகொண்டார். அவரது இறப்பையடுத்து, நீட் தேர்வுக்கு முற்றிலுமாக தடை கோரியும், மாணவி அனிதாவின் இறப்புக்கு நியாயம் கோரியும், தமிழகம் முழுவதும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், மாணவ அமைப்பினர் போராடி வருகின்றனர்.
இந்நிலையில், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து அரசுப்பள்ளி ஆசிரியை தன் பதவியை வியாழக்கிழமை ராஜினாமா செய்தார். விழுப்புரம் மாவட்டம், ஓலக்கூர் ஒன்றியத்தில் உள்ள வைரபுரம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் சபரிமாலா என்பவர் தான் அந்த ஆசிரியர்.
அவர் நீட் தேர்வை தான் ஏன் எதிர்க்கிறோம் என ஆசிரியை சபரிமாலா பேசும் வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
அந்த வீடியோவில், அனிதாவின் மரணத்திற்கு பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஏன் வரவில்லை என கேள்வி எழுப்பினார்.
மேலும், இங்கு எல்லாமே சாதியமயமாக இருக்கிறது எனவும், சாக்கடையாக இருக்கிறது எனவும் அவர் சாடினார்.
"நீட் தேர்வுக்கு எதிராக ரஞ்சித், சீமான், அமீர் எல்லோரும் குரல் கொடுக்கும்போது, கல்வியால் மிகப்பெரும் உன்னத நிலையை அடைந்த ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் சகாயம், உதயச்சந்திரன் ஏன் குரல் கொடுக்கவில்லை? நேர்மையற்றவர்களின் குரல் எல்லா இடங்களிலும் ஓங்கி ஒலிக்கும்போது நேர்மையானவர்களின் குரல் அமைதியாக இருக்கிறது”, என கூறினார்.
மேலும், ஒட்டுமொத்த கல்வி பிரச்சனைக்காக வகுப்புகளை புறக்கணித்து ஆசிரியர்களும், மாணவர்களும் ஒன்றிணைந்து போராடவில்லை என்றால், நாளைய இந்தியாவின் ஆன்மா நம்மை மன்னிக்காது எனவும், அனிதாவின் இறப்புக்கு அதுவே நியாயம் சேர்க்கும் எனவும், ஆசிரியர் சபரிமாலா தெரிவித்தார்.
”சி.பி.எஸ்.இ மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் ஒரே கல்வி சாத்தியமாகும்போது நீட் தேர்வை கொண்டு வரலாம்”, என ஆசிரியர் சபரிமாலா கூறினார்.