வித்யாசாகர் ராவ் புத்தகம் : டி.டி.வி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பற்றி மட்டும் பேசாதது ஏன்?

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பற்றி மட்டும் கூறாதது ஏன்? என்பது சர்ச்சை ஆகியிருக்கிறது.

By: October 17, 2017, 7:24:39 PM

வித்யாசாகர் ராவ் புத்தகத்தில் டி.டி.வி.தினகரன் அணியின் 18 எம்.எல்.ஏ.க்கள் வாபஸ் பற்றி மட்டும் கூறாதது ஏன்? என்பது சர்ச்சை ஆகியிருக்கிறது.

வித்யாசாகர் ராவ், தமிழகத்தின் தற்காலிக கவர்னராக 2016-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பொறுப்பேற்றார். கடந்த மாதம் வரை ஒரு ஆண்டு அந்தப் பொறுப்பை வகித்தார். தமிழக அரசியல் வரலாற்றில் இப்படி தற்காலிக கவர்னராக ஒருவர் இவ்வளவு நாட்கள் நீடித்தது இதுவே முதல்முறை! அதேபோல தமிழக அரசியலில் பரபரப்பான காலகட்டமாகவும் இது அமைந்தது.

வித்யாசாகர் ராவ் கவர்னராக இருந்த காலகட்டத்தில்தான் ஜெயலலிதா மரணம், ஜல்லிக்கட்டு போராட்டம், ஓ.பன்னீர்செல்வம் பதவி விலகல், சசிகலாவுக்கு பதவிப் பிரமாணம் செய்ய கவர்னர் மறுப்பு, எடப்பாடி பழனிசாமி பதவி ஏற்பு, டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வாபஸ் என பரபரப்பு சம்பவங்கள் நிகழ்ந்தன. இந்த நிகழ்வுகளை வித்யாசாகர்ராவ் எதிர்கொண்ட விதம் பலமான சர்ச்சைகளையும் கிளப்பியது.

வித்யாசாகர் ராவுக்கு பதிலாக நிரந்தர கவர்னர் நியமிக்க வேண்டும் என்கிற கோரிக்கைகளும் எழுந்தன. ஒருவழியாக புதிய நிரந்தர கவர்னர் நியமிக்கப்பட்டுவிட்ட நிலையில்தான், தனது பதவி காலத்தில் நிகழ்ந்த பரபரப்பான நிகழ்வுகளை புத்தகமாக வித்யாசாகர் ராவ் எழுதியிருப்பது தெரிய வந்திருக்கிறது.

வித்யாசாகர் ராவின் அந்த நூல் வெளியீடு, சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் இன்று (அக்டோபர் 17) நடந்தது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு, புதிய கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோர் வெளியிட்டனர். இந்த புத்தகம் மொத்தம் 12 அத்தியாயங்கள் கொண்டது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சம்பவத்தை கவர்னர் வித்யாசாகர்ராவ் எழுதியிருக்கிறார்.

முதல் 3 அத்தியாயங்களில் ஜெயலலிதா பற்றி எழுதியுள்ளார். ஜெயலலிதாவுக்கு உடல்நல குறைவு ஏற்பட்டது பற்றியும் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை அளித்தது பற்றிய தகவல்கள் உள்ளன. ஜெயலலிதா உடல்நிலை பற்றிய விவரத்தை மக்களுக்கு தெரிவிக்க உத்தரவிட்டதை அவர் நினைவு கூர்ந்துள்ளார்.

ஜெயலலிதா மரணம் அடைந்தபோது ஏற்பட்ட நிகழ்வுகளை விவரித்துள்ள வித்யாசாகர்ராவ், தமிழக மக்கள் அமைதியான முறையில் நடந்து கொண்டதை சுட்டிக் காட்டியுள்ளார். அதன் பிறகு ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தது பற்றி எழுதியுள்ளார். நான்காவது அத்தியாயத்தில் சென்னையை வர்தா புயல் தாக்கியது பற்றி குறிப்பிட்டுள்ளார். வர்தா புயல் பாதிப்பில் இருந்து மீள எடுத்த நடவடிக்கைகளையும் சுட்டி காட்டியுள்ளார்.

5-வது அத்தியாயத்தில் ஜல்லிக்கட்டு கோரி சென்னை மெரினா உள்பட தமிழ்நாடு முழுவதும் இளைஞர்கள் நடத்திய போராட்டம் பற்றி எழுதியிருக்கிறார். தமிழக மக்களின் மன உணர்வுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த மத்திய அரசிடம் அனுமதி பெற்று கொடுத்ததில் தனது பங்கு குறித்தும் குறிப்பிட்டுள்ளார்.

6-வது அத்தியாயத்தில் ஓ.பன்னீர்செல்வம் ராஜினாமா மற்றும் ஆட்சி அமைக்க சசிகலா உரிமை கோரி இருந்தது பற்றிய தகவல்களை விறுவிறுப்புடன் வித்யாசாகர்ராவ் எழுதியிருக்கிறார். ஜெயலலிதா மரணத்துக்குப் பிறகு டிசம்பர் மாதம் 31-ம் தேதி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக பதவி ஏற்ற சசிகலா, பிப்ரவரி மாதம் 5-ந்தேதி முதல்-அமைச்சராக பதவி ஏற்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

ஓ.பி.எஸ். பதவி விலகியதும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களால் சட்டசபை கட்சித் தலைவராக சசிகலா தேர்வானார். ஆனால் அவருக்கு பதவி பிரமாணம் செய்து வைக்க வித்யாசாகர்ராவ் ஒத்துழைக்கவில்லை. அந்த சமயத்தில் சசிகலாவை அழைக்காதது ஏன்? என்பது பற்றியும் எழுதியுள்ளார்.

அதில் வித்யாசாகர்ராவ் கூறியிருப்பதாவது: சசிகலா ஆட்சி அமைக்க உரிமை கோரினார். ஆனால் கவர்னர் அவசரப்படவில்லை. சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தினார். சொத்து குவிப்பு வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வெளியிட இருந்ததால் அதுவரை காத்திருக்க முடிவு செய்தார். அந்த முடிவின்படி செயல்பட்டதால் அவர் சசிகலாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த 2 நாட்களில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதித்து உச்சநீதிமன்றம் அறிவித்தது. இதுபற்றி எழுதிய பத்திரிகைகள், கவர்னர் வித்யாசாகர் எடுத்த முடிவை பாராட்டின. கவர்னர் அவசரப்பட்டிருந்தால் அது தமிழக அரசியலில் கரும்புள்ளியாக மாறி இருக்கும். எனவே வித்யாசாகர் ராவ் மிக பொறுமையாக நடந்து கொண்டது அவரது முதிர்ச்சியை காட்டுவதாக எழுதியிருந்தன. இந்த பாராட்டும் அந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

செப்டம்பர் மாதம் 29-ந் தேதி வரை தமிழக கவர்னர் பொறுப்பை வகித்தது பற்றி அவர் தகவல்களை இடம் பெறச் செய்துள்ளார். ஆனால் டி.டி.வி. தினகரனை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் தன்னை வந்து சந்தித்தது பற்றிய எந்த தகவல்களையும் அவர் குறிப்பிடவில்லை. அதுபோல தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள், எடப்பாடி பழனிசாமிக்கு கொடுக்கும் ஆதரவை வாபஸ் பெறுவதாக கூறி வழங்கிய கடிதம் பற்றியும் எதுவும் எழுதவில்லை. இந்த விஷயத்தில் வித்யாசாகர்ராவின் நடவடிக்கையை அவரால் நியாயப்படுத்த முடியவில்லையா? அல்லது, நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதால் குறிப்பிட வில்லையா? என தெரியவில்லை.

7-வது அத்தியாயத்தில் துணை வேந்தர்கள் நியமனம், 8-வது அத்தியாயத்தில் கவர்னர் மாளிகையில் சூரிய ஒளி மின் திட்டம் அமைத்தது, 9-வது அத்தியாயத்தில் பொதுமக்கள் பார்வைக்கு கவர்னர் மாளிகை திறக்கப்பட்டது பற்றி குறிப்பிட்டுள்ளார். 10-வது அத்தியாயத்தில் கவர்னர் மாளிகையில் திருவள்ளுவர் சிலை திறப்பு, 11-வது அத்தியாயத்தில் சுத்தப்படுத்தும் திட்டம், 12-வது அத்தியாயத்தில் ஜனாதிபதி, பிரதமருடன் சந்தித்து தமிழக அரசியல் நிலவரம் பற்றி பேசியது பற்றிய தகவல்களை கொடுத்துள்ளார்.

வித்யாசாகர்ராவின் நடவடிக்கைகளை சொல்லும் இந்த புத்தகம் விரைவில் விற்பனைக்கு வர உள்ளது. அப்போது இந்த புத்தகம் தமிழக அரசியலில் பரபரப்பான விவாதங்களை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vidyasagar rao book on tamilnadu period why he didnt speak about t t v dhinakaran faction mlas issue

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X