/indian-express-tamil/media/media_files/2025/10/11/vijay-karur-stampede-2025-10-11-09-39-45.jpg)
Vijay Karur stampede
அருண் ஜனார்த்தனன்
செப்டம்பர் 27 அன்று கரூர் கூட்டத்தில் விஜய் கலந்துகொண்ட பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்துக்குப் பிறகு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு, அவசரப்படாமல் மென்மையான அணுகுமுறையைக் கையாண்டது. உடனடியாக தமிழக வெற்றிக் கழகம் தலைவர்களைக் கைது செய்வதைத் தவிர்த்தது, விஜய்யின் பெயரையோ அல்லது அவரது நெருங்கிய தலைவர்களின் பெயரையோ முதல் தகவல் அறிக்கையில் (FIR) சேர்க்கவில்லை. இதன் மூலம், ரசிகர்களின் விசுவாசத்தால் ஒரு ‘வழிபாட்டுத் தலைவராகவே’ பார்க்கப்படும் ஒருவருக்கு வீண் அனுதாபத்தை ஏற்படுத்த வேண்டாம் என்று அரசு நிதானத்தைக் கடைப்பிடித்தது.
ஆனால், இரண்டு வாரங்களுக்குப் பிறகும் அந்த நிதானம் அமைதியைக் கொண்டுவரவில்லை. விஜய்யுடன் நேரடி மோதலைத் தவிர்த்த ஸ்டாலினின் தந்திரமான அணுகுமுறை, கரூர் சோகத்துக்குப் பிறகு உடனடி சட்டம்-ஒழுங்கு சிக்கல்களைத் தடுத்தது உண்மைதான். இருப்பினும், போர் களம் இப்போது சமூக ஊடகங்களுக்கு மாறியுள்ளது. அங்கு, ஆளும் கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவுகள், போட்டி அரசியல் கட்சிகளின் ஐடி விங்ஸ், பிரபல யூடியூபர்கள் மற்றும் பெயரில்லா தவெக ஆதரவாளர்கள் மூலம், ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மற்றும் ஆத்திரமூட்டும் கருத்துக்களால் மோதல் தீவிரமடைந்துள்ளது.
அதுமட்டுமின்றி, தமிழகம் முழுவதும் வெடிகுண்டு மிரட்டல்கள், யூடியூபர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களின் கைதுகள், ஒரு பெரிய தமிழ் செய்தி சேனல் மீது தணிக்கை குற்றச்சாட்டுகள் எனப் பல சிக்கல்களில் அரசு சிக்கியுள்ளது. இப்போது, அரசு நீதிமன்றங்கள், தெருக்கள், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைக்காட்சி விவாதங்கள் எனப் பல முனைகளிலும் எதிரிகளைச் சமாளிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
கைதுகளும் தேசத்துரோக குற்றச்சாட்டுகளும்
கரூரில் நடந்த சோகத்தை, தவெக ஆதரவாளர்களும் திமுக எதிர்ப்பாளர்களும் சதி கோட்பாடுகளாகப் பரப்பத் தொடங்கினர். இதில் முக்கியப் பங்கு வகித்தவர், பிரபல தமிழ் யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்ட். பேரணி விபத்து மாநில அரசால், குறிப்பாக திமுக அமைச்சர் செந்தில் பாலாஜியால் திட்டமிடப்பட்டதாகவும், கத்திக் குத்துகள் நடந்து மக்கள் காயமடைந்ததாகவும் குற்றம் சாட்டினார். இக்குற்றச்சாட்டுகள் முற்றிலும் தவறானவை என்றும், திமுக-தவெக மோதலைத் தூண்டவே இத்தகைய பொய்கள் பரப்பப்பட்டதாகவும் அரசு கூறியது.
அடுத்து சிக்கியவர், விஜய்யின் நெருங்கிய உதவியாளரும், தவெக-வின் வளர்ந்து வரும் முகமுமான ஆதவ் அர்ஜுனா. இவர் லாட்டரி அதிபர் சாண்டியாகோ மார்ட்டினின் மருமகன் ஆவார். அவர் X தளத்தில் நீக்கப்பட்ட ஒரு பதிவில், நேபாளம் மற்றும் இலங்கையில் நடந்த புரட்சிகளைக் குறிப்பிட்டு, தமிழ்நாட்டில் ஒரு “Gen Z புரட்சிக்கு” அழைப்பு விடுத்தார். "இளைஞர்கள் தலைமையிலான புரட்சியே ஒரே தீர்வு" என்று எழுதியவர், காவல்துறையினர் பொதுமக்களைத் தாக்கியதாகவும் குற்றம் சாட்டினார்.
விபத்தின்போது அங்கிருந்த அர்ஜுனாவை, முதலில் கைது செய்யாமல் காவல்துறை தவிர்த்தது. ஆனால், இந்த ட்வீட்டிற்குப் பிறகு, "தூண்டுதல்" குற்றச்சாட்டின் கீழ் அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அதே மாலையில், அர்ஜுனா ஒரு தனி விமானம் மூலம் சென்னையில் இருந்து வெளியேறினார். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் அவரது பதிவை “ஆத்திரமூட்டும் மற்றும் தேசத்துரோக கருத்து” என்று குறிப்பிட்டது.
இதனைத் தொடர்ந்து, ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வரதராஜன் கைது செய்யப்பட்டார். அவர், கூட்ட நெரிசல் திட்டமிட்டு நடத்தப்பட்ட கொலை என்றும், ஜெரால்டின் குற்றச்சாட்டுகளைப் போலவே, கத்தியுடன் நபர்கள் பேரணியில் ஏவிவிடப்பட்டனர் என்றும் மீண்டும் கூறினார். மேலும், முதல்வர் ஸ்டாலின் இறந்துவிட்டதாகப் போலியான செய்தியைப் பரப்பிய TVK ஆதரவாளர் ஒருவரும், "பயத்தை உருவாக்குதல்" குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.
நீதிமன்றத்தின் கண்டனம்:
இந்தச் சூழலில், சென்னை உயர் நீதிமன்றம், விஜய்யையும் அவரது கட்சியையும் சரமாரியாகக் கண்டித்தது. “தலைவர் (விஜய்) காணாமல் போனார், மாயமானார்; மக்களுக்கு உதவ அங்க யாருமே இல்லை,” என்று கூறிய நீதிபதி என். செந்தில்குமார், சம்பவம் நடந்த இடத்திலிருந்து கட்சியினர் ஓடிவிட்டதற்கும், “வருத்தம் காட்டாததற்கும்” கண்டனம் தெரிவித்தார்.
நீதிமன்றமே விஜய் மற்றும் தவெக தலைமையைச் சாடிய நிலையில், நீதித்துறைக்கு எதிரான சமூக ஊடகத் தாக்குதல்களும் அதிகரித்தன. நீதிபதி செந்தில்குமாருக்கு எதிராக இழிவான பதிவுகளை வெளியிட்ட தவெக ஆதரவாளர்கள் என அடையாளம் காணப்பட்ட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். பொய் செய்திகளைப் பரப்பிய மேலும் மூவர் கைது செய்யப்பட்டனர். அதில், முதல்வர் ஸ்டாலின் இறந்துவிட்டதாகப் பரப்பிய தவெக ஆதரவாளர் ஒருவரும் அடக்கம். அவர்கள் "பயத்தை உருவாக்குதல்" மற்றும் பொது அமைதிக்குக் குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டனர்.
அரசு கேபிளில் சேனல் மறைவு:
விஜய்யிடம் அரசு காட்டிய நிதானம் ஒருபுறமிருக்க, ஊடகங்களை அது கையாண்ட விதம் அதற்கு நேரெதிராக இருந்தது. அக்டோபர் 3 அன்று, முன்னணித் தமிழ் செய்திச் சேனலான புதிய தலைமுறை, அரசுக்குச் சொந்தமான அரசு கேபிள் நெட்வொர்க்கில் இருந்து திடீரென மறைந்தது.
இது “தொழில்நுட்பக் கோளாறு” என்று அரசு விளக்கமளித்தாலும், வேறு எந்தச் சேனலும் பாதிக்கப்படாததால், இந்த விளக்கம் எடுபடவில்லை. பார்வையாளர்கள் புகாரளித்தனர், பத்திரிகையாளர்கள் போராட்டம் நடத்தினர், சென்னை பத்திரிகையாளர் மன்றம் இந்தத் தடைக்கு “தணிக்கை” என்று கண்டனம் தெரிவித்தது.
அதிமுக தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி இதை “சர்வாதிகார” நடவடிக்கை என்றார். பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை, விமர்சனங்களை ஸ்டாலின் மூடி மறைக்க முயல்வதாகக் குற்றம் சாட்டினார்.
உயரும் வெடிகுண்டு மிரட்டல்கள்:
அரசியல் கொந்தளிப்பின் உச்சமாக, தினசரி வெடிகுண்டு மிரட்டல்கள் தமிழகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்றன. ”வாரத்துக்கு ஒரு முறை வந்தது இப்போது தினசரி வருகிறது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமார் 30 மிரட்டல்கள் மின்னஞ்சல் மூலம் வந்துள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது.
சமீப வாரங்களில், முதல்வர் இல்லம், ராஜ் பவன், பாஜக மாநிலத் தலைமை அலுவலகம், நடிகர் விஜய்யின் நீலாங்கரை வீடு, நடிகை த்ரிஷாவின் இல்லம், புதிய தலைமுறை மற்றும் இந்தியா டுடே அலுவலகங்கள், தி இந்து நாளிதழ் தலைமை அலுவலகம், மற்றும் பி.டி.ஐ செய்தி நிறுவனம் ஆகிய இடங்கள் இலக்கு வைக்கப்பட்டன.
ஒவ்வொரு முறையும், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களுடன் சோதனை செய்து, சாலைகளைக் காவலரண் இட்டு, அலுவலகங்களைக் காலி செய்து சோதனை செய்தபின், எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டது.
அதிகாரிகள் கூற்றுப்படி, இந்த மிரட்டல்கள் வெளிநாடுகளில் வசிக்கும் ஒரு தமிழரின் வேலை என்று சந்தேகிக்கப்படுகிறது. அவர் VPN-கள் மற்றும் வெளிநாடுகளில் பதிவுசெய்யப்பட்ட மறைகுறியாக்கப்பட்ட மின்னஞ்சல் சேவைகளைப் பயன்படுத்துவதால், அவரைக் கண்டுபிடிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றதாக உள்ளது. இந்த மிரட்டல்கள், அந்தந்த வாரத்தில் தமிழ்நாட்டின் அரசியல் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தும் விஷயங்களைப் பிரதிபலிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவிக்கிறது.
விஜய்யிடம் மென்மையாக நடந்துகொண்ட அரசு, ஊடகங்கள் மற்றும் சமூக ஊடக விமர்சகர்களிடம் கடுமையான நடவடிக்கைகளைக் கையாண்டது. இது, அரசியல் அரங்கில் அரசுக்கு எதிராக ஒரு புதிய போராட்டக்களத்தைத் திறந்துள்ளது.
இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.