‘விஜய் தலைவராக வேண்டும்’ என அவருடைய தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
விஜய் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகியுள்ள ‘மெர்சல்’ படம், பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வருகிறது. குறிப்பாக, படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்கச் சொல்லி பாஜகவினர் வற்புத்திய விஷயம், மிகப்பெரிய அளவில் பிரச்னையாக உருவெடுத்துள்ளது. இந்தியா முழுவதும் பரவிய இந்த விஷயம் குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவரான ராகுல் காந்தி கூட கருத்து தெரிவித்துள்ளார்.
‘அரசியல்வாதிகள் சினிமாவை விடவேண்டும். படத்தைச் சேர்ந்த நட்சத்திரத்தை அறிக்கைகளால் தூண்டிவிட்டு, அவர்களை தலைவர்களாக மாற்றக்கூடாது. இதுபோன்ற தனிப்பட்ட தாக்குதல்களும், அறிக்கைகளுமே சினிமாவில் கவனம் வைத்திருக்கும் நட்சத்திரங்களை அரசியல் பக்கம் திருப்புகிறது. அதை, தமிழகம் மீண்டும் தாங்காது’ என தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் இந்த விஷயம் குறித்து கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ‘விஜய் தலைவராகி, அவரை நம்பியுள்ள மக்களுக்கு நல்ல மாற்றத்தைத் தரவேண்டும்’ என விஜய்யின் தந்தையும், இயக்குநருமான எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார். ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சிக்கு அவர் அளித்துள்ள சிறப்புப் பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
“குடிமகனாக விஜய்க்கு கோபம் இருக்கிறது என்பதை, அவருடைய படங்களைப் பார்க்கும்போது நான் உணர்ந்து கொள்கிறேன். கோபம் இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. ஏனெனில், அவருக்கு இருக்கிற மீடியா, சினிமா. கத்தி எடுத்துக்கிட்டு நடுரோட்டுக்கு வந்து தப்பு பண்றவங்களை எதுவும் செய்கிற ஆளில்லை விஜய். அவர் பெரும்பாலும் காந்தியவாதி.
நான் இவ்வளவு சத்தமாகப் பேசுகிறேன். அவரிடம் சென்று பேட்டியெடுத்துப் பாருங்கள். சத்தமே இல்லாமல்தான் பேசுவார். அவருக்கென தனி மைக் வைக்க வேண்டும். அவருடைய இயல்பு அது. அதிலேயே நாங்கள் வேறுபடுகிறோம். ஒரு மனிதன் எப்படி வேண்டுமானாலும் பிறக்கலாம். ஆனால், அவன் சாவு சரித்திரமாக இருக்க வேண்டும்” என எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்துள்ளார்.
ரஜினி, கமலைத் தொடர்ந்து, விஜய்யும் அரசியலுக்கு வருவார் என அவருடைய ரசிகர்கள் கருதுகின்றனர். எஸ்.ஏ.சி.யின் நினைப்பும் அதுதான். திட்டமிட்டு காய்களை நகர்த்திவரும் எஸ்.ஏ.சி., சரியான நேரத்தில் தன் மகனை அரசியலில் இறக்குவார் என்றே அனைவரும் எதிர்பார்க்கின்றனர். ஆனால், அது எப்போது என்றுதான் தெரியவில்லை.
ஏற்கெனவே கமல்ஹாசனால் பரபரத்துக் கிடக்கும் அரசியல் வட்டாரத்தில், இன்னொரு அணுகுண்டை வீசியிருக்கிறார் எஸ்.ஏ.சந்திரசேகர்.