சிவகங்கை மாவட்டம், காரைக்குடி பி.எல்.எஸ் பேலஸ் மண்டபத்தில் தே.மு.தி.க மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது.
தே.மு.தி.க-வின் 12-வது மாநிலச் செயற்குழு, பொதுக்குழுக் கூட்டம், சிவகங்கை மாவட்டம் காரைக்குடி பி.எல்.எஸ் பேலஸ் மண்டபத்தில் இன்று நடந்தது. இதில் செயற்குழு பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள், நகர நிர்வாகிகள், ஒன்றிய நிர்வாகிகள் என 1000-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். காலை 10 மணிக்கு மேல் வந்த நிர்வாகிகள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த கட்சி நிர்வாகிகள், அடையாள அட்டையைக் கிழித்தெறிந்துவிட்டுக் கிளம்பினார்கள். பத்திரிகையாளர்கள் யாரும் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. கட்சி நிர்வாகிகள் யாரும் செல்போன் கொண்டு வர அனுமதிக்கப்படவில்லை.
இந்தக் கூட்டத்தில், தே.மு.தி.க-வின் இளைஞர் அணிச் செயலாளராக இருக்கும் சுதீஷுக்கு, துணைச் செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. தே.மு.தி.க நிரந்தர பொதுச்செயலாளராக விஜயகாந்த் செயல்படுவார் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், துணைச் செயலாளர்களாக பார்த்தசாரதி, ஏ.ஆர். இளங்கோவன் உட்பட நான்கு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவைத் தலைவராக அழகாபுரம் மோகன்ராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து பேசிய விஜயகாந்த், "இந்தியா நன்றாக இருக்க வேண்டுமெனில் பாஜக, காங். கட்சிகளுக்கு வாக்களிக்கக் கூடாது, தமிழகம் நன்றாக இருக்க வேண்டுமெனில் திமுக, அதிமுகவிற்கு வாக்களிக்க கூடாது. இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பாடத்திட்டத்தை கொண்டு வந்த பின்னர், நீட் தேர்வு கொண்டு வந்தால், தேமுதிக ஆதரிக்கும். தினமும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து, தமிழகம் முழுவதும் நாளை மறுநாள் போராட்டம் நடத்தப்படும்" எனவும் அவர் தெரிவித்தார்.