தமிழகத்தை உலுக்கி வரும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு விஜயகாந்தின் ஆதரவு இல்லை. இந்தப் போராட்டங்களுக்கு எதிராக தேமுதிக டெல்லி மாநில செயலாளர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு அறிமுகம் செய்யப்பட்டது. இதனால் தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பயின்ற மாணவ, மாணவிகள் பாதிக்கப்படுவார்கள் என்கிற புகார் எழுந்தது. எனவே தமிழகத்திற்கு மட்டும் இதில் விதிவிலக்கு ஏற்படுத்தும் வகையில் புதிய அரசாணை, தனிச்சட்டம், அவசர சட்டம் என பல முயற்சிகளை தமிழக அரசு எடுத்தது.
ஆனால் சென்னை உயர்நீதிமன்றமும், உச்சநீதிமன்றமும் அடுத்தடுத்த உத்தரவுகளால், ‘நீட்’டை உறுதி செய்தன. எனவே நீட் அடிப்படையில் மாணவர் சேர்க்கை நடவடிக்கைகளும் தமிழகத்தில் தொடங்கிவிட்டது. இந்திலையில் ‘நீட்’ காரணமாக மருத்துவக் கல்வி வாய்ப்பு கிடைக்காத அரியலூர் மாணவி அனிதாவின் தற்கொலை தமிழகத்தை கொதிநிலைக்கு கொண்டு சென்றது.
அனிதா மரணத்திற்கு நீதி கிடைக்கும் வகையில், நீட் தேர்வுக்கு நிரந்தர விலக்கு கோரி தமிழகம் முழுவதும் மாணவர்கள் போராடி வருகிறார்கள். பெரும்பாலான அரசியல் கட்சிகளும் இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றன. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும்கூட, ‘நீட் வேண்டாம் என்பதுதான் எங்கள் கொள்கை. ஆனால் உச்சநீதிமன்ற உத்தரவு காரணமாக அதை ஏற்கும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்’ என கூறியிருக்கிறார்.
ஆனால் பாஜக, புதிய தமிழகம் உள்ளிட்ட சில கட்சிகளே ‘நீட்’ தேர்வுக்கு ஆதரவான நிலைப்பாட்டில் உள்ளன. இந்தச் சூழலில் விஜயகாந்த் தலைமையிலான தேமுதிக.வும் ‘நீட்’ விவகாரத்தில் நழுவுகிற மீனாகவே கருத்து தெரிவித்து வருகிறது. ‘நீட்’ அடிப்படையில் மாணவர் சேர்க்கை உறுதி செய்யப்பட்டதும் ஆகஸ்ட் 24-ம் தேதி விஜயகாந்த் வெளியிட்ட ஒரு அறிக்கையில், ‘தமிழகத்தில் கடந்த ஒருவருடத்திற்கும் மேலாக நீட் தேர்வு இருக்கிறதா இல்லையா என்கிற தீர்வையே ஏற்படுத்தாமல் தொடர் குழப்பத்தை தமிழக மாணவர்களுக்கும், பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும், ஏற்படுத்திய தமிழக அரசை தேசிய முற்போக்கு திராவிட கழகம் சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.
இந்த பிரச்சனைக்கு, ஆளும் கட்சியின் நிர்வாக திறமையின்மையே முழுக் காரணம் . இந்தியாவில் மற்ற மாநிலங்கள் விலக்கு அளிக்காத பொழுது, தமிழகத்திற்கு மட்டும் விலக்கு அளிக்க வேண்டும் என்று ஒரு வருடமாக மத்திய அரசிடம் கோரிக்கை வைப்பது, தமிழகத்திற்கு நீட் தேர்வில் விலக்கு கிடைக்கும் என்று கூறினார்கள். ஆனால் தற்போது நீட் தேர்வில் விலக்கு அளிக்க முடியாது என்று மத்திய அரசும், நீதிமன்றமும் கூறியுள்ளது.
ஆரம்பம் முதலே நீட் தேர்வுக்கு ஆயத்தமாகுங்கள் என்று மாணவர்களுக்கு தெளிவான ஒரு வழிநடத்தலை தேமுதிக கூறிவந்தது. ஆளும்கட்சியும், எதிர்கட்சிகளும் நீட் விவகாரத்தை அரசியலாக்கும் எண்ணத்தில் செயல்பட்டதின் விளைவு இன்று ஒட்டுமொத்த மாணவர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்மூலம் தமிழக மாணவர்களுக்கு, தமிழக அரசு அநீதி விளைவித்துள்ளது.’ என கூறியிருந்தார் விஜயகாந்த். அதாவது, ‘நீட்’டுக்கு தேமுதிக ஆதரவு என்பதாகவே அவரது அறிக்கை சாராம்சம் இருந்தது.
அடுத்து, மாணவி அனிதா மரணத்தை தொடர்ந்து செப்டம்பர் 1-ம் தேதி விஜயகாந்த் விடுத்த அறிக்கையில், ‘மக்களுக்காக தான் ஆட்சி என்று உணர்ந்து செயல்பட்டிருந்தால் மாணவி அனிதா தற்கொலை நடந்திருக்காது. மாணவி அனிதா தற்கொலைக்கு காரணமான, மத்திய மாநில அரசை வன்மையாக கண்டிக்கிறேன்.’ என கூறியிருந்தார். அதிலும் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என விஜயகாந்த் கேட்கவில்லை.
இந்தச் சூழலில்தான் தேமுதிக.வின் டெல்லி மாநில செயலாளர் ஜி.எஸ்.மணி உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கில், ‘தமிழகத்தில் நடைபெறும் நீட் எதிர்ப்புப் போராட்டங்களை தடை செய்ய வேண்டும்’ என கோரிக்கை வைத்திருக்கிறார். மாணவர்களை தூண்டிவிட்டு சில கட்சிகள் அரசியல் ஆதாயம் அடைவதாகவும், அதனாலேயே அனிதா தற்கொலை நடந்திருப்பதாகவும், அது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் ஜி.எஸ்.மணி குறிப்பிட்டிருக்கிறார். இந்த வழக்கு இன்று (செப்டம்பர் 8) விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.
விஜயகாந்தின் மனநிலையை அறிந்தே இந்த வழக்கை ஜி.எஸ்.மணி தொடர்ந்ததாக தெரிகிறது. இதன் மூலமாக நீட் எதிர்ப்புப் போராட்டங்களுக்கு விஜயகாந்தின் ஆதரவு இல்லை என தெரியவருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.