முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வம் உறுதியளித்ததுபோல கிணற்றை ஒப்படைக்கவில்லை எனகூறி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி மாவட்டம் லெட்சுமிபுரத்தில் முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர் செல்வத்தின் மனைவிக்கு சொந்தமாக பெரிய கிணறு ஒன்று உள்ளது. இந்த கிணற்றில் ராட்சத மோட்டார் மூலம் தண்ணீர் உறிஞ்சப்படுவதால் அப்பகுதியில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதாக சொல்லப்படுகிறது. இதனால், அந்த கிணற்றை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அப்பகுதி மக்கள் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து, கிணறு உள்ள நிலத்தை கிராம மக்களுக்காக இலவசமாக தருவதாக ஓ பன்னீர் செல்வம் உறுதியளித்தார்.
ஆனால், இதையடுத்து அவரது உறவினர் சுப்புராஜ் என்பவருக்கு எழுதி கொடுக்கப்பட்டதாக தெரிகிறது. இதனால், மீண்டும் போராட்டம் தொடக்கப்படவே, அவரிடம் இருந்து கிணற்றை பெற்று லெட்சுமிபுரம் கிராமத்திற்கு கிரயம் முடித்து தருவதாக ஓ பன்னீர் செல்வம் மீண்டும் உறுதியளித்தார்.
எனினும், இதுவரை அந்த கிணரை கிராம மக்களுக்கு கிரயம் முடித்துக் கொடுப்பதற்கான வேலை, தொடக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனால், அதிருப்தியடைந்த கிராம மக்கள் ஏராளமானோர் ஓ பன்னீர் செல்வத்தை கண்டித்து நேற்று காலை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து கிராம ஊராட்சியின் முன்னாள் தலைவர் ஜெயபாலன் கூறும்போது: கிணறு மற்றும் பிரச்சனைக்குரிய நிலத்தை கிராம மக்களுக்கு எழுதிக் கெழடுக்கும் வரை அறவழியில் போராட்டத்தை தொடரப்போவதாக தெரிவித்தார்.