வில்லிசை பாடல் பாடுவதன் மூலம் யூடியூப்பில் தற்போது வைரலாகி வரும் மாதவியிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக பேசினோம். அதிலிருந்து தொகுக்கப்பட்டவை.
உங்கள் சொந்த ஊர்? பெற்றோர் பற்றி சொல்லுங்கள்?
சுரண்டை பக்கத்தில் உள்ள அச்சங்குன்றம்தான் எனது சொந்த ஊர். இந்த வருடம் 18 வயது நிறைவடைந்து 19 வயது பிறந்திருக்கிறது. சில மாதங்களுக்கு முன்புதான் தொலைதூர கல்வியில் 10 வது தேர்வு எழுதி முடித்தேன். அப்பா பெயர் மாரி செல்வம். அவர் கொத்தனார் வேலைக்கு செல்கிறார். அம்மா, மாலதி பீடி சுற்றுகிறார்.
வில்லிசை மீது எப்போது ஆர்வம் வந்தது?
சிறுவயதில் எனது பாட்டி ஊரான ரெட்டியார் பெட்டி-க்கு செல்லும்போது, கோயில்களில் வில்லிபாட்டு பாடுவார்கள். என்னை மறந்து வில்லுபாட்டை ரசித்துக் கொண்டிருப்பேன். எங்கள் வீட்டில்தான் வில்லு பாட்டுக்காரர்கள் சாப்பிடுவார்கள். அப்போது எனது மாமா முருகச் செல்வம், “ நம்ம வீட்டுல யாராது வில்லு பாட்டு படித்தால் நன்றாக இருக்கும் “ என்று சொன்னார். அப்படிதான் வில்லு பாட்டு கற்றுக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் வந்தது. எனக்கு 14 வயதிருக்கும் போது மாமா-தான் வில்லுபாட்டு கற்றுக்கொள்ள என்னை கொண்டு செல்வார். வாரத்தில் ஒரு நாள் வகுப்புகள் இருக்கும். வில்லுப் பாட்டில் பிரபலமாக இருந்தவர்களிடம்தான் நான் இந்த கலையை கற்றேன்.
உங்கள் ஆசான்கள் பற்றி பகிர்ந்துகொள்ள முடியுமா?
எங்கள் ஊரிலே இருந்த வி.கே புதூர் இசக்கி புலவரிடம், அடுத்து வல்லம் மாரியம்மாள், ,கடையநல்லூர் கணபதி புலவர் ஆகியோரிடம்தான் வில்லிசை பயின்றேன். ஒட்டுமொத்தமாக ஒரு மாதக் காலம்தான் பயிற்சி பெற்றேன். பக்கவாத்தியங்கள், ( அடிதாளம்) எந்த மாதிரி இசைக்கிறதோ, அந்த தாளத்தோடு இசைந்து, நாம் பாடல் பாட வேண்டும். பயிற்சி முடிந்தவுடன், எனது 14 வயதிலிருந்து வில்லு பாட்டு பாடத் தொடங்கிவிட்டேன். எங்களது வருமானம் கோவில்களுக்கு ஏற்றவாறு மாறும். கொரோனா காலங்களில் எங்கேயும் செல்ல முடியவில்லை. நான் உள்பட எல்லா கலைஞர்களும்அப்போது கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.

14 வயதிலிருந்து இப்போதுவரை உங்கள் வில்லு பாடல் அனுபவங்கள் குறித்து சொல்லுங்களேன்?
பல்வேறு ஊர்களில் இருந்து எங்களை பாட்டுப்பாட அழைப்பார்கள். அருகில் இருந்தால் அப்பாவுடன் டூவீலரில் செல்வேன். தூரமாக இருந்தால் பேருந்தில் செல்வோம். எனது எல்லா பயணங்களின் போதும் அப்பா உடன் இருப்பார். எங்களை அழைக்கும் நபர்கள் தங்குவதற்கு இடம் தருவார்கள். சில நேரத்தில் தங்கும் இடம் அவ்வளவு நன்றாக இருக்காது. இரவு 9 மணிக்குத்தான் எல்லா கோவில்களிலும் வில்லுபாட்டு தொடங்கும் இரவு 1 மணி வரை வில்லுப்பாட்டு பாடுவோம். சில நேரங்களில் அதிகாலை 4 மணி வரை வில்லு பாட்டு பாட வேண்டி வரும்.
தண்ணீர் குடிக்க முடியாது, அவசரத் தேவைக்குகூட எங்கும் நகர முடியாது. மேடையில் ஏறினால் எனக்கு பாடல்தான் நினைவில் இருக்கும் வேறு எந்த சிந்தனையும் இருக்காது.
உங்கள் வயதில் தற்போது வேறு யாராவது வில்லிசை பாடுகிறார்களா?
எனது வயதில் பெண்கள் யாரும் வில்லு பாட்டு பாடவில்லை. வயதானவர்கள்தான் அதிகம். சுரண்டை, செங்கோட்டைக்கு மேற்கில், தென்காசி, நாகர்கோவில், சங்கரன்கோவில், கோவில்பட்டி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஆகிய இடங்களில்தான் வில்லு பாட்டு இன்றும் இருக்கிறது. நீங்கள் வேண்டுமானால் தேடி பாருங்கள். மற்ற இடங்களில் வில்லு பாடல் இல்லை. கிட்டதட்ட வில்லுபாடல் அழிந்து வருகிறது. இது ஒரு வலி நிறைந்த உண்மை.
எந்த ஊர்களுக்கெல்லாம் வில்லு பாடல் பாட சென்றுள்ளீர்கள்?
பல இடங்களுக்கு சென்றிருக்கிறோம். ராமநாதபுரம், ராமேஷ்வரம், நாகர்கோவில், கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, திருவாரூர் சென்றிருக்கிறோம். மும்பையிலிருந்து இரண்டு முறை எங்களை அழைத்தாரகள். தொடர்ந்து கோவில்களுக்கு பாடச் செல்ல வேண்டும் என்பதால் எங்களால் அங்கே செல்ல முடியவில்லை.
உங்கள் இசைக்குழு பற்றியும், வில்லு பாடல் தயாரிப்பு முறை பற்றியும் சொல்லுங்கள்?
எங்கள் குழுவில் 6 பேர் இருக்கிறார்கள். சில கோயில்களுக்கு வரலாறு இருக்கும். அப்படி வரலாறு இருக்கும் கோயிலுக்கு நாங்கள் பாட செல்லும்போது, அந்த வரலாறை எங்களிடம் தந்துவிடுவாரக்ள். அதை வைத்து கதை அமைத்து பாடல் பாடுவோம். ஆனால் எல்லா கோயில்களுக்கும் அப்படி தனி வரலாறு இருக்காது. அப்போது பொதுவாக அந்த சாமியின் வரலாறையும், அத்துடன் ஒரு கருத்து சொல்லும் கதையும் நாங்கள் தயார்படுத்திக்கொண்டு பாடுவோம்.

வில்லு பாட்டில் உங்களை கவர்ந்தவர்கள் பற்றி சொல்லுங்கள்?
ஒரு சிறிய ஆர்வத்தில்தான் வில்லு பாட்டு பாட வந்தேன். ஆனால் இதை பற்றி ஆழமாக தெரிந்ததும் எனது ஆர்வம் அதிகரித்துவிட்டது. எனக்கு முன்மாதிரியாக இருக்கும் வில்லிசை கலைஞர்களை, நான் ஆர்வமாக கவனிப்பேன். அவர்களிடத்திலிருந்து தொடர்ந்து பல விஷயங்களை கற்றுக்கொள்வேன். 30 வருடங்களாக வில்லிசையில் தொடர்ந்து பயணிக்கும் ஒரு பெண்தான் எனக்கு மிகவும் பிடித்தவர். ஆனால் அவர் பெயரை என்னால் சொல்லமுடியாது.
வில்லு பாட்டு பாட செல்வதற்கு குடும்பத்திலிருந்து எதிர்ப்பு இருந்ததா?
எனது அம்மா, அப்பா வில்லு பாட்டு கற்றுக்கொள்ளவோ, அதை பாடவோ தடை சொல்லவில்லை. ஆனால் சொந்தக்காரர்கள் ‘ இதெல்லாம் எதுக்கு. பிரச்சனை வரும்’ என்று கூறினார்கள். அதை எனது பெற்றோர் கண்டுகொள்ளவில்லை. இருவரும் எனக்கு துணையாக இருக்கிறார்கள்.
உங்கள் எதிர்காலக் கனவு என்ன?
தற்போது இருக்கும் இளைஞர்கள் பல்வேறு உயர்ந்த படிப்புகளை படிக்கிறார்கள். ஆனால் அழியும் வில்லிசையை கற்க யாரும் முன்வரவில்லை . எனது எதிர்காலத்தை வில்லு பாட்டு பாடுவதில்தான் நான் அமைத்துக்கொள்ள விரும்புகிறேன். பாடிக்கொண்டிருக்கும்போதே, மேடையில் என் உயிர் போக வேண்டும் என்பது எனது ஆசை. கல்லூரி படிப்பையும் தொடருவேன். ஆனால் வில்லு பாட்டுதான் முக்கியம்.
வில்லு பாட்டை கற்றுக்கொடுக்கும் எண்ணம் உள்ளதா?
பலரும் வில்லுபாட்டை என்னிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்கிறார்கள். தற்போதைய சூழலில் என்னால் அது முடியுமா ? என்று தெரியவில்லை. எதிர்காலத்தில் வில்லு பாடலை கற்றுக்கொடுப்பேன். வில்லிசையில் எப்போதும் ஒரு கதை மூலமாக கருத்தை சொல்வோம். என்னை பொருத்தவரை எல்லோருக்கும் நன்மை செய்ய வேண்டும். அனைவரிடத்திலும் அன்பாக இருக்க வேண்டும். சிறுவயதில் நான் வில்லு பாடல் பாடுவதால் அனைவரும் வியந்து என்னை பார்க்கிறார்கள். ஆனால் நீங்கள் வில்லிசையை கற்றுக்கொள்ள நினைத்தால், முதலில் அதை ரசிக்க வேண்டும். மனதிலிருந்து ரசிக்க கற்றுக்கொள்ளுங்கள். அதன் பிறகுதான் நீங்கள் பயிற்சிக்கு செல்ல முடியும்.