‘எம் பொண்ணுக்கு நீதி கொடுங்கய்யா..!’ மீடியாவிடம் கதறிய ஜெயஸ்ரீ தாயார்

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்டார். இன்று ஊடகங்களிடம் பேசிய, சிறுமி ஜெயஸ்ரீயின் தாய், எனது மகளுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும்...

விழுப்புரம் அருகே முன்விரோதம் காரணமாக சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக்கொல்லப்பட்டார். இன்று ஊடகங்களிடம் பேசிய, சிறுமி ஜெயஸ்ரீயின் தாய், எனது மகளுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது மகளுக்கு நீதி கொடுங்கய்யா, எனக்கு நீதி கொடுங்கய்யா என்று கதறி அழுதார்.

விழுப்புரம் மாவட்டம், சிறுமதுரை முன்விரோதம் காரணமாக பத்தாம் வகுப்பு படித்துவந்த ஜெயஸ்ரீ என்ற சிறுமியை அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் அதிமுக கவுன்சிலர் முருகன், கலியபெருமாள் இருவரும் தீ வைத்து எரித்த சம்பவம் தமிழகம் முழுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்த சிறுமி ஜெயஸ்ரீ, இறப்பதற்கு முன்பு மரண வாக்குமூலத்தில், அதிமுக முன்னாள் கவுன்சிலர் முருகன், சிறுமதுரை கிளை செயலாளர் கலியபெருமாள் இருவரும் முன்விரோதம் காரணமாக தன்னை தீவைத்து எரித்ததாகக் கூறினார். இதையடுத்து, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

சிறுமி ஜெயஸ்ரீ எரித்துக் கொன்ற சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த தமிழக முதல்வர் பழனிசாமி, சிறுமி ஜெயஸ்ரீயின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்தார்.

அதிமுக தலைமைக் கழகம் அவர்கள் இருவரையும் கட்சியில் இருந்து அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்து நீக்கியது.

இதனைத் தொடர்ந்து, இன்று ஊடகங்களிடம் பேசிய சிறுமி ஜெயஸ்ரீயின் தாய், எனது மகளுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. எனது மகளுக்கு நீதி கொடுங்கய்யா, எனக்கு நீதி கொடுங்கய்யா என்று கதறினார்.

ஊடகங்களிடம் ஜெயஸ்ரீயின் தாய் கூறியதாவது: “அதிமுக முன்னாள் கவுன்சிலர் அருவி முருகன், எங்களையும் எங்கள் பிள்ளைகளையும் அடிக்கடி அடிப்பார்கள் உதைப்பார்கள். அதனால், நாங்கள் அமைதியாகவே விட்டுவிட்டோம்.

அந்த முன்விரோதத்தை வைத்து முருகன் நேற்று முன்தினம் பிரவீன் குமார் என்பவரிடம் சொல்லி, அந்த பிரவீன் குமார் என்பவர் எங்கள் கடையின் கதவை திறக்க சொல்லி பீடி, தீப்பெட்டி கேட்டு, என்னுடைய மகன் ஜெயராஜ்ஜை காது மீது அடித்துள்ளார். அதில் எனது மகனின் காது சவ்வு கிழிந்துவிட்டது. அதனால், எனது மகனை திருக்கோவிலூர் மருத்துவமனையில் இரவு 12 மணிக்கு சேர்த்து சிகிச்சை பெற்றபின் 3 மணிக்கு அழைத்துவந்தோம்.

நேற்று காலையில், எனது கணவர் ஜெயபால், அவர்கள் மீது புகார் அளிக்க திருவெண்ணெய் நல்லூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு போகச் சொல்லி அனுப்பிவைத்தேன். நான் மாட்டுக்கு புல் அறுக்க போக வேண்டும் என்பதற்காக வீட்டில் இருந்த 10வது படிக்கும் எனது மகள் ஜெயஸ்ரீயை பத்திரமாக இரும்மா என்று சொல்லிவிட்டு சென்றேன்.

முன்னாள் அதிமுக கவுன்சிலர் அருவி முருகன், கலியபெருமாள் ஆகியோர் எனது மகள் ஜெயஸ்ரீயை எங்களுடைய கடையில் வைத்து, மகளின் கை, கால்கள், வாயைக் கட்டிவிட்டு முகத்தில் குத்தியிருக்கிறார்கள். பின்னர், அவர்கள் ஜெயஸ்ரீயை பெட்ரோல் ஊற்றி பற்றவைத்துவிட்டு கதவை சாத்திவிட்டு சென்றிருக்கிறார்கள். கை கால் வாயைக் கட்டிவிட்டதால் எனது மகள் கத்தவும் முடியாமல் எரிந்துபோனார். ரோட்டில் போகிறவர்கள் கடைக்குள் புகை வருவதைப் பார்த்துவிட்டு வந்து எனது மகளை மீட்டிருக்கிறார்கள். இதையெல்லாம் எனது மகள் சாவதற்கு முன்பு சொல்லிவிட்டார்.

அதிமுக முன்னாள் கவுன்சிலர் அருவி முருகன், அந்த கட்சியை வைத்து எங்களை நீண்ட காலமாக வாழவிடாமல் செய்துவந்தார். இப்போது எனது ஆசை மகளை கொன்றுவிட்டார்கள். எனது மகளுக்கு நீதி கொடுங்கய்யா, எனக்கு நீதி கொடுங்கய்யா. எனது மகளுக்கு வந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது. எனக்கு நீதி கொடுங்கய்யா” என்று ஜெயஸ்ரீயின் தாயார் கதறி அழுதார். சிறுமி ஜெயஸ்ரீயின் தாயார் கதறி அழுத காட்சி காண்பவர்களை உலுக்குவதாக இருந்தது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close