விஷால், எங்கள் பிணத்தின் மீது அரசியல் செய்யப் போகிறாரா… விடமாட்டேன் ! சேரன் ஆவேசம்

விஷால் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்தால் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என இயக்குனர் சேரன் எச்சரித்தார்.

By: Updated: December 3, 2017, 10:48:02 PM

விஷால் ஆர்.கே.நகரில் வேட்புமனு தாக்கல் செய்தால் டிசம்பர் 4 முதல் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவேன் என இயக்குனர் சேரன் எச்சரித்தார்.

விஷால், நடிகர் சங்கம் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் முக்கிய பதவிகளை பிடித்தபோதே அவரது அடுத்த களம் அரசியல்தான் என்பது புரிந்தது. அதுபோலவே திடுதிப்பென ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் குதித்து பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

டிசம்பர் 3-ம் தேதி காலையில் சென்னை ராமாவரம் எம்.ஜி.ஆர். இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்துவிட்டு, தொடர்ந்து மெரினாவின் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திவிட்டு ஆர்.கே.நகரில் மனு தாக்கல் செய்கிறார் விஷால்.

விஷால் நடிகர் சங்கப் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட்டபோதே அவருக்கு எதிராக கச்சை கட்டியவர் இயக்குனரும் நடிகருமான சேரன். இப்போது விஷால் தேர்தல் களத்தில் குதித்ததும், ட்விட்டரில் தொடர் பதிவுகளாக போட்டுத் தாக்கி வருகிறார் சேரன்.

டிசம்பர் 30-ம் தேதி போட்ட ஒரு பதிவில், ‘நண்பர்களே.. இனி அரசியல் சார்ந்து எந்த பதிவுகளும் நான் பதிவிடப் போவதில்லை.. யாரைப்பற்றியும் பேசப் போவதில்லை. சினிமா சார்ந்து மட்டுமே பேசுவோம்.’ என குறிப்பிட்டிருந்தார் சேரன்.

ஆனால் விஷால் களம் இறங்குவது உறுதி ஆனதும் டிசம்பர் 2-ம் தேதி முதல் விரதத்தை முறித்துக்கொண்டு போட்டுத் தாக்குகிறார். சேரன் வெளியிட்ட பதிவுகளின் தொகுப்பு இங்கே..

‘நேற்றுதான் அரசியல் பேசவேண்டாம் என நினைத்தேன்..இன்று பேசத்தூண்டுகிறது. விசால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படிபார்க்கிறீர்கள் அனுமதிப்பது சரியா.’ என ஆரம்பிக்கிறார். அவரது நட்பு வட்டத்தில் உள்ள சிலர், ‘சினிமா சங்கத்தில் முக்கியப் பொறுப்பில் இருந்துகொண்டு அவர் ஆளும்கட்சியை எதிர்ப்பதால் சங்கத்திற்கு இழப்பு’ என்கிறார்கள்.

அதன்பிறகு அடுத்தடுத்த பதிவுகளில் சேரன் இடியாக கருத்துகளை இறக்குகிறார்… ‘முதல் களமிறங்கும்போதே பொய்முகத்தோடு நோக்கமேயின்றி யாரோட தூண்டுதலாலோ நிற்பதிலிருந்து வியாபாரகுதிரை ஆகிவிட்டார் விசால்.

நடிகர்சங்கத்தில் ஜெயித்தவுடன் முதலில் கலைஞர் அய்யாவை பார்த்து ஆசீர்வாதம் வாங்கிய விசால் நாளை எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா இருவரை வணங்கி மனுதாக்கல்.. ஏன்??? விசாலின் இந்த முடிவால் நடுத் தெருவில் நிற்கப் போவது தயாரிப்பாளகள். இனிவரும் எந்த அரசிடமிருந்தும் எதுவும் கிடைக்கப் போவதில்லை. மொத்தமாக தலையில் துண்டு.

தயாரிப்பாளர் நலன் கருதி விசால் தலைவர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு தேர்தலில் நிற்பதே நல்லது. இல்லையெனில் நிறைய “அசோக்குமார்களை” சங்கம் சந்திக்கும். இதை கருத்தில் எடுக்காமல் நாளை அவர் மனுதாக்கல் செய்தால் நாளை மறுநாள் முதல் சங்கத்தில் உள்ளிருப்பு போராட்டம். தலைவர்பதவியை ராஜினாமாசெய்யும்வரை..நான்.

என்னிடமுள்ள 75 கேள்விகளுக்கு பதில் சொல்லிவிட்டு போகட்டும். தேர்தலில் நிற்பதை தடுக்கமாட்டோம். ஆனால் எங்கள் பிணத்தின் மீது நடக்க அனுமதிக்க மாட்டோம்.
பத்திரிக்கை ஊடக நண்பர்களுக்கு வேண்டுகோள். விசாலின் சுயரூபம் வெளியில் வர உதவுங்கள். அவர் தயாரிப்பாளர் சங்கம், நடிகர் சங்கம் இரண்டிலும் சாதித்ததென்ன.

எஸ்.ஏ.சி. போன்ற பெரிய தயாரிப்பாளர்கள் விசாலுக்கு அவர் தேர்தலில் நிற்பதால் என்ன என்ன பிரச்னைகள் சங்கம் சந்திக்கும் என்பதை எடுத்துச்சொல்லவேண்டும். விசால் தேர்தலில் நிற்பதை பற்றி எனக்கு எந்த கவலையுமில்லை. அது அவர்வியாபாரம். முடிவை மக்கள்சொல்லட்டும். என்கவலை என்தொழில் பாதுகாக்கப்படவேண்டும்.’ என பொங்கியிருக்கிறார்.

அரசியல்வாதிகளை முந்திக்கொண்டு சினிமாத் துறையில் இருந்து கிளம்பும் எதிர்ப்பை விஷால் எப்படி சமாளிப்பாரோ?

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vishal contest in rk nagar cheran condemns

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X