இணையத்தளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்ததாக ஒப்புக்கொண்ட பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என, நடிகர் விஷால் வலியுறுத்தியுள்ளார்.
நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ திரைப்படம், வெளியாவதற்கு முன்னும், வெளியான பின்பும் பல சர்ச்சைகளையும், தடைகளையும் சந்தித்து வருகிறது. விலங்குகள் நல வாரியம் தடையில்லா சான்று அளிக்கவில்லை, தணிக்கை வாரியம் சான்றிதழ் வழங்கவில்லை என, பல்வேறு தடைகளை கடந்து இறுதியில், தீபாவளி பண்டிகையன்று திரைக்கு வந்தது மெர்சல்.
ஆனால், அதற்கு பின்பும் பிரச்சனைகள் ஓயவில்லை. படத்தில் ஜி.எஸ்.டி. வரிவிதிப்புக்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் எனவும், இந்து மதத்திற்கு எதிராக படத்தில் வசனங்கள் இருப்பதாகவும், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா விமர்சித்தார். அதுமட்டுமல்லாமல், விஜயை ‘ஜோசஃப் விஜய்’ எனவும் எச்.ராஜா அடையாளப்படுத்தினார். அதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சர் பொன்.ராதா கிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் ஆகியோரும், மெர்சலுக்கு எதிராக குரல் எழுப்பினர். மேலும், ஜி.எஸ்.டி.க்கு எதிரான காட்சிகளை நீக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.
இதையடுத்து, படத்தின் காட்சிகளை நீக்க வேண்டும் என்பது, கருத்து சுதந்திரத்திற்கு எதிரானது என இந்த விவகாரம் இந்தியா முழுவதும் பேசுபொருளானது. காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் மெர்சலுக்கு ஆதரவாக குரல் எழுப்பினர்.
இதனிடையே, தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த எச்.ராஜா, “மெர்சல் திரைப்படத்தில் சம்பந்தப்பட்ட காட்சிகளை இணையத்தளத்தில் பார்த்ததாக”, வெளிப்படையாகவே தெரிவித்தார்.
இந்நிலையில், இதுகுறித்து தன் ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த தென்னிந்திய நடிகர் சங்க பொதுச் செயலாளரான நடிகர் விஷால், “இணையத்தளத்தில் மெர்சல் திரைப்படம் பார்த்ததை ஒப்புக்கொண்ட எச்.ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும்”, என கூறியுள்ளார்.
மேலும், ”திரு.எச்.ராஜா, மக்கள் அறிந்த தலைவரான நீங்கள் எப்படி பைரசியை ஆதரிக்கிறீர்கள்? உங்களை போன்ற அரசியல்வாதிகள், ஒரு திரைப்படத்தின் திருட்டு பிரதியை பார்ப்பதாக ஒப்புக்கொண்டிருப்பது, உண்மையான குடிமகனாகவும், கடமை உணர்ச்சி கொண்டவனாகவும், எந்த காரியத்தையும் செய்வதற்கு முன் ஆழ்ந்து யோசிப்பவனாகவும் இருக்கும் எனக்கு ஆச்சரியத்தை அளிக்கிறது. இதற்கு நீங்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்”, என தெரிவித்துள்ளார்.