யாரும் எதிர்பார்க்காத நேரத்தில், ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் விஷால். நாளை (திங்கட்கிழமை) அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார். விஷால் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பலர் கருத்து கூறியுள்ளனர். அவற்றை மொத்தமாக இங்கே பார்ப்போம்...
இயக்குநர் அமீர் : யாரை எதிர்த்து, எந்த நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகிறார் விஷால்? இந்தத் தேர்தலில் விஷால் போட்டியிடுவதால் என்ன லாபம்? விஷால் போட்டியிடுவதன் பின்னணி தெரியவில்லை. சுயேட்சையாகப் போட்டியிடும் விஷாலின் பின்புலத்தில் யார் இருக்கிறார்கள் எனப் பார்க்க வேண்டும்.
இயக்குநர் சேரன் : நேற்றுதான் அரசியல் பேச வேண்டாம் என்று நினைத்தேன். இன்று பேசத் தூண்டுகிறது. விஷால் போட்டியிடுவதை நண்பர்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? அனுமதிப்பது சரியா?
இயக்குநர் சுசீந்திரன் : ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் விஷாலுக்கு எனது வாழ்த்துகள். விஷால் நடிகர் சங்கத் தேர்தலில் நிற்கும்போதும், தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கும்போதும் 100% அவர் தோற்றுவிடுவார் என்றுதான் எல்லோரும் நினைத்தார்கள். அந்தக் கருத்துக் கணிப்பை, அவருடைய உழைப்பும், உண்மையும் பொய்யாக்கி, விஷால் ஜெயித்தார். இந்தத் தேர்தலிலும் விஷால் ஜெயிப்பார்னு நம்புறேன். விஷாலுக்காக நான் பிரச்சாரத்தில் ஈடுபடுவேன். பணம் வாங்காமல் ஓட்டுப்போடும் மக்கள் இன்னும் நிறைய பேர் இருக்கிறார்கள் என்பதை இந்தத் தேர்தல் உணர்த்தும்.
திருமாவளவன், விசிக : ஆர்.கே.நகரில் விஷால் போட்டியிடுவதால், வாக்குகளை மட்டுமே பிரிக்க முடியும். நேர்மையான முறையில் தேர்தல் நடைபெற்றால் திமுக வெற்றி பெறுவது உறுதி.
நடிகை குஷ்பு : என்னுடைய நண்பனுக்கு வாழ்த்துகள். உன்னால் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். உன்னுடைய செயல்களுக்காகவும், சேவைக்காகவும் மக்கள் உன்னைப் பற்றி பேசுவார்கள்.
தம்பிதுரை எம்.பி. : ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் விஷால் போட்டியிடுவது, அவருக்குத்தான் பாதிப்பு. மக்கள் இரட்டை இலையை வெற்றிபெற வைப்பார்கள்.
வேல்முருகன், தமிழக வாழ்வுரிமை கட்சி : சினிமாவில் இருப்பவர்கள் அரசியலுக்கு வருவது சரியாகப்படவில்லை.
சுமந்த் சி ராமன், அரசியல் விமர்சகர் : வெற்றியோ, தோல்வியோ... விஷால் தைரியமாகக் களமிறங்கியதைப் பாராட்ட வேண்டும். இதனால், எந்தப் பாதிப்பும் ஏற்படப் போவதில்லை. பிரதானப் போட்டி என்பது திமுகவுக்கும், அதிமுகவுக்கும் நடக்கும் போட்டி.
வானதி சீனிவாசன், பாஜக : தேர்தல் என்பதையும், அதில் போட்டியிடுவதையும் ஏற்கெனவே பார்த்தவர்தான் விஷால். யார் அரசியலுக்கு வந்தாலும் நாங்கள் வரவேற்கிறோம். ஆனால், ஏற்றுக்கொள்ளும் மனநிலையில் மக்கள் இருக்கிறார்களா? இந்தத் தேர்தல் என்பது அவருக்கு அனுபவமாக இருக்கும்.
தமிழருவி மணியன் : கோடம்பாக்கத்தில் உள்ள அனைவரும் கோட்டையை நோக்கிப் பயணிப்பது என்று முடிவெடுத்து விட்டால், தமிழகத்தின் அரசியல் பாழ்பட்டுவிடும். ஓரளவுக்கு பொதுமக்களிடையே விளம்பரமான ஒவ்வொருவரும் முதல்வர் கனவோடு கோட்டையை நோக்கி புறப்பட ஆயத்தமாவது என்பது அவ்வளவு ஆரோக்கியமானது அல்ல.
நாஞ்சில் சம்பத், டிடிவி தினகரன் ஆதரவாளர் : விஷாலை நாங்கள் போட்டியாளராகக் கருதவில்லை. எங்களுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி.
இயக்குநர் சுந்தர்.சி : அரசியலுக்கு புது ரத்தம் பாய்ச்ச வேண்டிய நேரம் இது. ஏற்கெனவே உள்ள அரசியல்வாதிகளையே பார்த்துப் பார்த்து, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். விஷால் மாதிரியான தகுதியான நபர்கள் வருவதை நான் வரவேற்கிறேன்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அதிமுக : நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்தில் ஜெயித்ததை வைத்து, தப்புக்கணக்கு போட்டு அரசியலில் ஜெயித்து விடலாம் என்று வருகிறார். விஷாலின் அரசியல் வாழ்க்கை மட்டுமல்ல, திரைப்பட வாழ்க்கையும் அஸ்தமிக்கப் போகிறது. விஷால் டெபாசிட் இழப்பது உறுதி.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.