ஆர்.கே.நகர் இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்றுடன் முடிகிறது. பகல் 12.30 மணிக்கு நடிகர் விஷால் மனு தாக்கல் செய்கிறார். ஜெ.தீபாவும் இன்று வருகிறார்.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, டிசம்பர் 21-ம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்புமனுத் தாக்கல், நவம்பர் 27-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. திமுக வேட்பாளர் மருது கணேஷ், அதிமுக வேட்பாளர் மதுசூதனன், சுயேட்சையாக டிடிவி தினகரன் உள்ளிட்ட முக்கிய வேட்பாளர்கள் பலரும் மனு தாக்கல் செய்துவிட்டனர்.
ஆர்.கே.நகரில் வேட்பு மனுத் தாக்கலுக்கு இன்று (டிசம்பர் 4) கடைசி நாள். கடைசி நேரத்தில் தேர்தல் களத்தில் குதித்திருக்கும் விஷால் இன்று (டிசம்பர் 4) தனது வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். இதையொட்டி இன்று காலை 9 மணிக்கு சென்னை ராமாவரத்தில் எம்.ஜி.ஆர். இல்லத்தில் அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்கிறார் விஷால்.
அங்கிருந்து கிளம்பி, காலை 10 மணிக்கு சென்னை மெரினாவில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு விஷால் வருகிறார். அங்கு மலர் தூவி மரியாதை செய்துவிட்டு, பகல் 12.30 மணிக்கு ஆர்.கே.நகர் தேர்தல் அலுவலகத்தில் வேட்புமனுவை தாக்கல் செய்கிறார். தொடர்ந்து பத்திரிகையாளர்களை சந்திப்பதாகவும் விஷால் கூறியிருக்கிறார்.
விஷாலுடன் திரைப் பிரபலங்கள் வேறு சிலரும் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஜெயலலிதா இல்லாத ஆர்.கே.நகரில் விஷால் களமிறங்கியிருப்பது, தொகுதிக்கான நட்சத்திர அந்தஸ்தை கூட்டியிருக்கிறது.
ஜெயலலிதாவின் அண்ணன் மகளான ஜெ.தீபாவும் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார். இதனால் அதிமுக, திமுக, பாஜக, டிடிவி தினகரன், விஷால், நாம் தமிழர், ஜெ.தீபா என 7 முனைப் போட்டி உருவாகியிருக்கிறது. வேட்புமனுவை வாபஸ் பெற டிசம்பர் 7-ம் தேதி இறுதி நாள். அன்றே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாகும். அதன்பிறகு அடுத்த 12 நாட்களும் மும்முர பிரசாரம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.