இந்த வீடியோவை நம்பித்தான் விஷால் வேட்புமனு நிராகரிப்பு : ஆனால் அதில் என்ன தப்பு தெரியுமா?

விஷால் வேட்புமனு விவகாரத்தில், ‘நான் போட்ட கையெழுத்து என்னுடையது அல்ல’ என்கிறார் தீபன். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார்.

By: December 9, 2017, 5:23:32 PM

விஷால் வேட்புமனு விவகாரத்தில், ‘நான் போட்ட கையெழுத்து என்னுடையது அல்ல’ என்கிறார் தீபன். இது தொடர்பான வீடியோ ஆதாரத்தை விஷால் வெளியிட்டார்.

விஷால், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் குதித்தது பெரும் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியது. அவரது வருகை, அதிமுக.வை பாதிக்குமா, திமுக.வை பாதிக்குமா? என்கிற விவாதமும் நடந்தது. ஆனால் அவருக்கு வேட்புமனுவை முன்மொழிந்ததாக கூறப்பட்ட தீபன், சுமதி ஆகிய இருவர் திடீரென, ‘வேட்புமனுவில் இருந்தவை, தங்கள் கையெழுத்து இல்லை’ என அறிவிக்க, விஷால் பதறிப் போனார்.

அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் ஆட்களே இதன் பின்னணியில் இருந்ததாக விஷால் தரப்பு குமுறியது. இது தொடர்பாக சுமதியின் உறவினரான வேலு என்பவர் பேசிய ஆடியோ பதிவை தேர்தல் அதிகாரி வேலுச்சாமியிடம் விஷால் போட்டுக் காட்டினார். உடனே மீண்டும் தீபன், சுமதி ஆகியோரை அழைத்துப் பேசிய தேர்தல் அதிகாரி, ‘அவர்கள் தங்கள் கையொப்பம் இல்லை என்று உறுதியாக கூறுகிறார்கள்’ என முடிவு செய்து, விஷாலின் வேட்புமனுவை நிராகரித்தார்.

இது தொடர்பாக ஜனாதிபதி, பிரதமர், இந்திய தேர்தல் ஆணையம் என பலருக்கும் புகார் மேல் புகார்களை தட்டி விட்டார் விஷால். ஆனால், ‘தேர்தல் அதிகாரியான வேலுச்சாமியின் முடிவே இறுதியானது’ என அறிவித்துவிட்டது இந்திய தேர்தல் ஆணையம். அப்போது தேர்தல் அதிகாரி வேலுச்சாமி தரப்பில் இருந்து தங்கள் பக்க நியாயத்தை கூறும் விதமாக ஒரு வீடியோ வெளியிடப்பட்டது.

விஷாலுக்கு முன்மொழிந்த தீபன், தேர்தல் அதிகாரி வேலுச்சாமி முன்பு அமர்ந்து வாக்குமூலம் கொடுக்கும் காட்சிகள் அவை! அந்த வீடியோவில் தீபன் கூறுகிற ஒரு வரிதான் உதைக்கிறது. அதில், ‘நான் போட்ட கையெழுத்து என்து (என்னுடையது) இல்லை’ என்கிறார் தீபன். அதாவது, வேட்புமனுவில் தான் கையெழுத்திட்டதை ஒப்புக்கொள்வதாகவும், ஆனால் அது தனது கையெழுத்து இல்லை என கூறுவதாகவும் அவரது வாக்குமூலம் அமைகிறது. இதிலிருந்தே கையெழுத்து போட்டவரை, வேறு சிலர் மிரட்டி தனது கையெழுத்து இல்லை என பேச வைத்திருப்பது தெளிவாக தெரிவதாக விஷால் தரப்பில் கூறுகின்றனர்.

தீபனின் இந்த வாக்குமூல வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் விஷால், ‘ஜனநாயகம் கேலிக்கூத்தானதற்கு இன்னொரு உதாரணம் இது’ என குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோ வாக்குமூலத்தை நம்பித்தான் விஷால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டது. தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை இன்று அந்தப் பொறுப்பில் இருந்து தேர்தல் ஆணையம் மாற்றியிருக்கிறது. ஆனால் விஷாலுக்கு நீதி திரும்பக் கிடைக்குமா?

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Vishal releases one more video evidence related rk nagar nomination

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X