ஆர்.கே.நகரில் ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருக்கிறது என குறிப்பிட்ட நடிகர் விஷால், ‘முழு வீச்சில் அரசியலுக்கு வருவேன்’ என்றும் கூறினார்.
விஷால், திடுதிப்பென ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் களத்தில் குதித்து அரசியல் கட்சியினரை அசரடித்தார். அவரது வருகை, அதிமுக.வை பாதிக்குமா, திமுக.வை பாதிக்குமா? என்கிற விவாதம் பரபரப்பாக ஓடியது. ஆனால் அவருக்கு வேட்புமனுவை முன்மொழிந்ததாக கூறப்பட்ட இருவர் திடீரென, ‘அவை தங்கள் கையெழுத்து இல்லை’ என அறிவிக்க விஷால் பதறிப் போனார்.
அதிமுக வேட்பாளர் மதுசூதனனின் ஆட்களே இதன் பின்னணியில் இருந்ததாக விஷால் தரப்பு குமுறியது. இதற்காக ஜனாதிபதி, பிரதமர், இந்திய தேர்தல் ஆணையம் என பலருக்கும் புகார் மேல் புகார்களை தட்டி விட்டார் விஷால். ஆனால், ‘தேர்தல் அதிகாரியான வேலுச்சாமியின் முடிவே இறுதியானது’ என அறிவித்துவிட்டது இந்திய தேர்தல் ஆணையம்.
ஆனால் அடுத்தடுத்த புகார்களால் இன்று (9-ம் தேதி) தேர்தல் அதிகாரி வேலுச்சாமியை மாற்றிவிட்டு, பிரவின் பி.நாயரை புதிய தேர்தல் அதிகாரியாக இந்திய தேர்தல் ஆணையம் நியமித்திருக்கிறது. ஆனாலும் இதனால் விஷாலுக்கு எந்த நிவாரணமும் கிடைக்க வாய்ப்பில்லை.
இந்த நிலையில் இன்று விஷால் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது : தமிழக மக்களுக்கு நான் தெரிவிக்க விரும்புவது, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எனது சொந்த விருப்பத்தின் பேரில் முடிவெடுத்தேன். அதில் எந்த அரசியல் கட்சி அல்லது தனி நபரின் தலையீடும் கிடையாது. மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என எனது இதயத்தின் அடித்தளத்தில் இருந்து எழுந்த உணர்வுதான் எனது முடிவுக்கு காரணம்.
எனது வேட்பு மனு நிராகரிக்கப்பட்டது, நியாயமே இல்லை. அதைத் தொடர்ந்து நடைபெறும் நிகழ்வுகளை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதன் மூலமாக ஜனநாயகம் குழி தோண்டி புதைக்கப்பட்டிருப்பதாக உணர்கிறார்கள்.
இந்த தருணத்தில் கன்னியாகுமரி மீனவர்கள் பிரச்னை உள்பட வேறு பல பெரிய பிரச்னைகள் இருக்கின்றன. நான் இடைத்தேர்தலில் போட்டியிடுவதைவிட, அதில் அனைவரின் கவனமும் ஆதரவும் இருக்க வேண்டும். காணாமல் போன மீனவர்களை கண்டுபிடிக்க முன்னுரிமை கொடுக்கும்படி மாநில அரசை நான் கேட்டுக் கொள்கிறேன். காணாமல் போன கன்னியாகுமரி மீனவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களின் குடும்பத்தினருடன் சேர்க்க நமது கரங்களையும் உதவிக்கு வழங்குவோம்.
நல்ல இதயம் கொண்ட ஆர்.கே.நகர் மக்களுக்கும், இந்தியா மற்றும் தமிழ்நாடு முழுவதும் உள்ளவர்களுக்கும், பத்திரிகை, காவல்துறை, வழக்கறிஞர்கள், அரசியல் தலைவர்கள்,எனது ரசிகர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், நலம் விரும்பிகள் என எனக்கு ஆதரவு கொடுத்து என்னுடன் நின்றவர்களுக்கு நன்றி. மக்களுக்கு பணியாற்றுவதையும் ஜனநாயகத்திற்காக போராடுவதையும் நான் தொடர்வேன். தவிர, முழு வீச்சில் நான் அரசியலுக்கு திரும்புவேன்’. இவ்வாறு விஷால் கூறியிருக்கிறார்.