தண்ணீர் தர முடியாது என கூற எவருக்கும் உரிமையில்லை: கர்நாடகாவில் விஷால் பரபர

உடல் மண்ணுக்கு... உயிர் தமிழுக்கு. கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தபோதிலும், தாய் மொழியான தமிழில் பேசுவதில் பெருமை கொள்கிறேன்

ரகுவீரா’ என்ற கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளருமான விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இந்த விழாவில் கன்னட சினிமா அமைப்பினர் சிலர் பேசும்போது, நடிகர் விஷால் தமிழகத்தில் இருந்து வந்து இந்த விழாவில் கலந்து கொண்டுள்ளார். அவருக்கு மரியாதை அளிக்க வேண்டும். ஆனால், தமிழகத்திற்கு கர்நாடகத்தில் இருந்து தண்ணீர் கொடுக்க முடியாது என்று நாங்கள் கூறவில்லை. கர்நாடகாவிற்கே தண்ணீர் இல்லை என்று தான் கூறுகின்றோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதன் பின்னர் நடிகர் விஷால் பேசும்போது: உடல் மண்ணுக்கு… உயிர் தமிழுக்கு. இந்த நிகழ்ச்சி கன்னட படத்தின் இசை வெளியீட்டு விழாவாக இருந்தபோதிலும், தாய் மொழியான தமிழில் பேசுவதில் பெருமை கொள்கிறேன். நான் கண்டிப்பாக தமிழில் தான் பேசுவேன் என்றும், இதனை யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் என்று கூறி அங்கிருந்தவர்களை அசரவைத்தார்.

நாம் அனைவரும் இந்தியாவில் வாழ்கிறோம்.இந்திய நாடு என வரும் போது நாம் அனைவருமே ஒன்றுதான். தண்ணீர் கேட்பது எங்கள் உரிமை. இதற்கு யாரும் மறுப்பு தெரிவிக்க முடியாது. எங்களுடைய உரிமையை தான் நாங்கள் கேட்கிறோம். அதேநேரத்தில், கர்நாடகத்தில் தமிழகர்கள் வசிக்கின்றனர், தமிழகத்திலும் கர்நாடகவைச் சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் பாதுகாப்பு அளிப்பது நமது கடமை. வேறு வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என பார்க்கக் கூடாது.

அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்பட்டிருக்கின்றன. தமிழர்களுக்கு தண்ணீர் தர மாட்டேன் என கூறுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கர்நாடகாவிற்கு மட்டுமே தண்ணீர் என்று கிடையாது. தண்ணீர் தர மாட்டேன் என்று கூறுவதற்கு யாருக்கும் உரிமையில்லை.

கர்நாடக தயாரிப்பாளர்கள் தமிழகத்திற்கு வந்து தயாரிக்கும் பட்சத்தில், தயாரிப்பாளர் சங்கம் என்ற முறையில் ஒத்துழைப்பு தர தயாராக இருக்கிறோம். கர்நாடக தயாரிப்பாளர் சங்கத்திற்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதனையும் செய்து தர தயாராக இருக்கிறோம் என்று கூறினார்.

×Close
×Close