ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல், வருகிற டிசம்பர் 21ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நடிகர் விஷால் தன்னுடைய மனுவை தேர்தல் அதிகாரிகளிடம் அளித்தார். முன்னதாக காமராஜர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, சிவாஜி கணேசன் நினைவிடங்களுக்குச் சென்று வழிபட்டார்.
மனுத்தாக்கல் செய்தபிறகு பத்திரிகையாளர்களிடம் விஷால் பேசியதாவது...
“அரசியல்வாதியாக இல்லாமல், ஆர்.கே.நகர் மக்களின் பிரதிநிதியாக இந்த தேர்தலை சந்திக்கிறேன். அடிப்படை வசதிகள் உள்ளிட்ட மக்களின் பிரச்னைகளைத் தீர்ப்பதுதான் என்னுடைய முக்கியமான குறிக்கோள். இந்தத் தொகுதி மக்கள் ஆகாயத்தைக் கேட்கவில்லை, அடிப்படை வசதிகளைத்தான் கேட்கிறார்கள். மழை பெய்யும்போது இங்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. கழிவுநீர் வீட்டுக்குள் வருகிறது. இதுமாதிரி நிறைய பிரச்னைகளைச் சொல்கிறார்கள். இதைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்றால், அவர்கள் மத்தியில் இருந்து ஒரு பிரதிநிதி வரவேண்டும்.
பிரச்சாரத்தின்போது மக்கள் சொல்லக்கூடிய பிரச்னைகள் பட்டியல் போடப்படும். 100 சதவீதம் மக்களும் ஒற்றுமையாக இருந்து இந்த தேர்தலைச் சந்திக்கும்போது, அவர்களுடைய முக்கியத்துவம் என்ன என்பது தெரியவரும். ஆர்.கே.நகர் மக்களின் ஒற்றுமையும், நேர்மையும் இந்த தேர்தலில் வெளிப்படும்.
கட்சியில் சேர்ந்தால்தான் நல்லது செய்ய முடியும், கூட்டணி வைத்தால்தான் நல்லது செய்ய முடியும் என்று கிடையாது. மக்கள் பிரதிநிதியாக ஜெயித்து உட்காரும்போது நிச்சயம் நல்லது செய்ய முடியும். இங்கு இருக்கக்கூடிய எல்லாப் பிரச்னைகளுமே தீர்க்கக் கூடியவைதான்” என்றவரிடம், தயாரிப்பாளர் சங்கத் தலைவர் பதவியை ராஜினாமா செய்யச் சொல்லி சேரன் உள்ளிருப்பு போராட்டம் நடத்துவது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.
“நடிகர் சங்கத் தேர்தலில் ஜெயித்து, தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் நிற்கும்போது இதே மாதிரிதான் பிரச்னை வந்தது. இப்போதும் அதேமாதிரியான பிரச்னை கிளம்பியிருக்கிறது. சட்டத்திற்குப் புறம்பாக நடக்க வேண்டும் என யாரும் இப்படிச் செய்யவில்லை. நல்லது செய்ய வேண்டும் என்று நடிகர் சங்கத்தில் முதலடி எடுத்துவைத்த இளைஞர்கள், நடிகர் சங்கத்தை நல்லபடியாகக் கொண்டுவந்து விட்டோம்.
தயாரிப்பாளர் சங்கத்திலும் நல்லது செய்ய வேண்டும் என்று வந்தோம். சொன்னதைச் செய்து கொண்டிருக்கிறோம். அதேபோலத்தான் இந்த தேர்தலும். விஷால் கட்சி ஆரம்பிப்பதற்காக அல்ல இந்தத் தேர்தல். என் படப்பிடிப்பை விட்டுவிட்டு வந்திருக்கிறேன் என்றால், மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கம்தான்” என்றார்.
‘அதிமுகவில் இருந்து நான்கைந்து எம்.எல்.ஏ.க்கள் உங்களுக்கு ஆதரவு தெரிவித்தார்களாமே...’ என்ற கேள்விக்குப் பதிலளித்த விஷால், “கூப்பிட்டது உண்மைதான். குஷ்பு காங்கிரஸ் கட்சியில் இருக்காங்க, அவங்க வாழ்த்து தெரிவிச்சாங்க. டி.ஆர்.பாலு பையன் திமுகவில் இருக்கிறார். அவரும் வாழ்த்து தெரிவித்தார். அரவிந்த் கெஜ்ரிவால் வாழ்த்து தெரிவித்தார். இது ஆரோக்கியமான விஷயம்” என்றார். மேலும், திரைத்துறையில் தனக்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் விஷால் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.