பிடித்தம் செய்யப்பட்ட டிடிஎஸ் தொகையை அரசுக்குச் செலுத்தாத விவகாரத்தில், விஷாலின் ஆடிட்டர் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.
நடிகர் விஷால் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச் செயலாளராகவும், தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகிறார். மேலும், விஷால் ஃபிலிம் ஃபேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், வடபழனி பேருந்து நிலையம் பின்புறத்தில் அமைந்துள்ள விஷாலின் அலுவலகத்தில், கடந்த 23-ம் தேதி ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு துறையினர் சோதனை நடத்தியதாக தகவல் வெளியானது. ஆனால், சிறிது நேரத்திலேயே, விஷால் அலுவலகத்தில் ஜி.எஸ்.டி. சோதனை நடத்தப்படவில்லை என, சென்னை மண்டல ஜி.எஸ்.டி. நுண்ணறிவு பிரிவு இணை இயக்குநர் ராஜசேகர் விளக்கம் அளித்தார்.
இந்நிலையில், 23-ம் தேதி விஷால் அலுவலகத்தில் வருமான வரித்துறையினர் தான் சோதனை நடத்தினர் என்பது தெரியவந்துள்ளது. இதுகுறித்து, விஷாலின் பெயரை சுட்டிக்காட்டாமல் வருமான வரித்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது...
‘ஊதியம் வழங்கும் இடத்தில் பிடித்தம் செய்யப்படும் வரியானது, ஒழுங்காக வருமான வரித்துறைக்கு செலுத்தப்படுகிறதா என, அவ்வப்போது பல இடங்களில் சோதனை நடத்தப்படுவது வழக்கம். அதன்படிதான், திங்கள் கிழமை தயாரிப்பாளர் அலுவலகமொன்றில் சோதனை நடைபெற்றது. மேற்படி நபர், கடந்த 2016-2017-ஆம் ஆண்டில் வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகு, ரூ.50 லட்சம் மதிப்பிலான தொகையை அரசு கணக்கில் செலுத்தவில்லை என்ற தகவலின் அடிப்படையிலேயே அவரது அலுவலகத்தில் சோதனை நடத்தப்பட்டது.
வருமான வரி சட்ட விதிகளின்படி, பிடித்தம் செய்யப்பட்ட வரி ஏழு நாட்களுக்குள் வருமான வரித்துறையிடம் செலுத்த வேண்டும். அதன்படி, மேற்படி நபர் முறைகேட்டை ஒப்புக்கொண்டு, குறிப்பிட்ட தொகையை உடனடியாக செலுத்துவதாக உறுதியளித்தார்’ என கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக, சரியான கணக்குடன் வருமான வரித்துறை அலுவலகத்தில் இன்று (வெள்ளிக்கிழமை) விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்று வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாகத் தகவல் வெளியானது. ஆனால், நுங்கம்பாக்கம் க்ரீம்ஸ் சாலையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில், விஷாலின் ஆடிட்டர் மட்டுமே ஆஜராகியுள்ளார்.
இதுகுறித்து விஷாலுக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தபோது, ‘விஷால் நேரில் ஆஜராக வேண்டும் என்பது கட்டாயமல்ல. எனவேதான், ஆடிட்டர் மட்டும் நேரில் ஆஜராகியிருக்கிறார்’ என்றார்கள்.
விஷால் நடித்துள்ள முதல் மலையாளப் படமான ‘வில்லன்’, இன்று ரிலீஸாகியுள்ளது. மோகன்லால், மஞ்சு வாரியர், ஹன்சிகா மோத்வானி ஆகியோர் நடித்துள்ள இந்தப் படத்தின் புரமோஷனுக்காக, விஷால் கேரளா சென்றுள்ளதாக கூறப்படுகிறது.