‘மெர்சல்’ விவகாரம், தேசியப் பிரச்னையாக மாறிவிட்டது. ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாளாக்கிவிட்டனர் பாஜகவினர். இதனால், 100 கோடி ரூபாய் செலவு செய்தாலும் கிடைக்காத பப்ளிசிட்டி, பாஜகவினரால் இலவசமாகவே ‘மெர்சல்’ படத்துக்கு கிடைத்து விட்டது.
பாஜகவின் எதிர்க்கட்சியான காங்கிரஸ் ‘மெர்சல்’ படத்துக்கு வக்காலத்து வாங்க, இந்தியா முழுமைக்கும் விவாதிக்கப்படும் விஷயமாகி இருக்கிறது. ராகுல் காந்தியும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாக குரல் கொடுக்க, சாதாரண பிரச்னையாக இருந்தது, ஆளும் கட்சி - எதிர்க்கட்சிக்கான பிரச்னையாக மாறிவிட்டது.
இயக்குநர் பா.இரஞ்சித், இசையமைப்பாளர் மற்றும் நடிகரான ஜி.வி.பிரகாஷ், நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவாகத் தங்களுடைய கருத்துகளைக் கூறியுள்ள நிலையில், தயாரிப்பாளர்கள் சங்கத் தலைவரும், நடிகர் சங்க செயலாளருமான விஷாலும் ‘மெர்சல்’ படத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
“மெர்சல் படம் மூலம் மக்களுக்கு சமூகக் கருத்துகளை சொன்ன நடிகர் விஜய், இயக்குநர் அட்லீ, தயாரிப்பாளர் முரளி ஆகியோருக்கு நன்றியும், பாராட்டுகளும்...
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்ற வசனங்களுக்கு, பாஜகவைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்பு தெரிவிப்பதும், அந்த வசனங்கள் மற்றும் காட்சிகளை நீக்கச் சொல்லி வற்புறுத்துவதும் கருத்து சுதந்திரத்திற்கு எதிராக விடப்பட்டிருக்கும் மிரட்டலாகவே நான் பார்க்கிறேன்.
ஹாலிவுட் படங்களில், அமெரிக்க அதிபரையே கிண்டலடிக்கும் காட்சிகள் வைக்கப்படுகின்றன. அதுதான், ஜனநாயக சட்டம் அனைவருக்கும் வழங்கியிருக்கும் கருத்து சுதந்திரம். இங்கே எல்லோரையும் திருப்திப்படுத்துதல் என்பது இயலாத காரியம்.
ஒரு அரசியல் கட்சி, திரைப்படத்தில் இடம்பெறும் காட்சிகளையும், வசனங்களையும் தீர்மானித்தால்... பின்னர் சென்சார் போர்டு எதற்காக இருக்கிறது? சென்சார் செய்யப்பட்ட படத்தை மீண்டும் சென்சார் செய்யச்சொல்ல யாருக்கும் அதிகாரம் கிடையாது. தான் நினைத்ததைச் சொல்லும் முழு கருத்து சுதந்திரம் எல்லோருக்கும் உண்டு. சமூக அக்கறையுள்ள எங்களுக்கும் அது இருக்கிறது” என விஷால் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.