வி.கே.சசிகலா குடும்பத்தினரை குறிவைத்த ரெய்டுக்கு குறிப்பிட்ட ஒரு நிறுவனத்தில் இருந்து வாடகை கார்கள் அமர்த்தப்பட்டதில் ஓ.பன்னீர்செல்வம் பெயர் அடிபடுகிறது.
வி.கே.சசிகலா குடும்பத்தினரை குறிவைத்து தமிழகம் முழுவதும் கடந்த 9-ம் தேதி முதல் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகிறார்கள். இன்று (நவம்பர் 11) 3-வது நாளாக சோதனை நடக்கிறது. இந்த சோதனையில் குறிப்பிட்ட ஒரு ‘கால் டாக்சி’ நிறுவனத்தின் (ஃபாஸ்ட் டிராக்) கார்களே முக்கியமாக பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.
அதாவது, 8-ம் தேதி இரவே குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான கார்களை வருமான வரித்துறையினர் ‘புக்’ செய்திருக்கிறார்கள். அந்தக் கார்களில் ‘ஸ்ரீனி வெட்ஸ் மகி’ என ஒட்டப்பட்ட ஸ்டிக்கர்களுடன் கல்யாண ஆர்டருக்கு செல்வதுபோல ரெய்டுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகின. இப்போது குறிப்பிட்ட அந்த நிறுவனத்தின் கார்களை பயன்படுத்தியது சர்ச்சை ஆகியிருக்கிறது.
காரணம், மேற்படி கால் டாக்சி நிறுவனத்தின் பங்குதாரர்களில் ஒருவர், ரெட்சன் அம்பிகாபதி. இவர் மதிமுக-வில் இருந்தார். ஓ.பன்னீர்செல்வம் தனி அணி கண்டபோது அவருடன் இணைந்தார். தற்போது அதிமுக-வில் ஓ.பன்னீர்செல்வத்திற்கு நெருக்கமானவராக இவரை குறிப்பிடுகிறார்கள்.
ஏற்கனவே கடந்த 8-ம் தேதி டெல்லிக்கு இரட்டை இலை சின்னம் வழக்கு தொடர்பான வேலைகளுக்காக அதிமுக நிர்வாகிகள் டெல்லிக்கு சென்றனர். அங்கு இபிஎஸ் அணியைச் சேர்ந்த அமைச்சர்களை தவிர்த்துவிட்டு, ஓ.பன்னீர்செல்வம் அணி நிர்வாகிகள் முக்கியமான சில சந்திப்புகளை நடத்தியதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழகத்துடன் நெருங்கிய தொடர்புடைய ஒரு மூத்த தலைவரை அவர்கள் சந்தித்ததை அரசியல் வட்டாரம் உன்னிப்பாக கவனித்தது. அந்த மூத்த தலைவரின் உறவினர் ஒருவரின் சென்னை ஹோட்டலில் நடந்த சந்திப்புகளில் இந்த ரெய்டு தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் நடந்ததாக தகவல்கள் கசிகின்றன.
இந்தப் பின்னணியில் ஓபிஎஸ் அணி பிரமுகரான ரெட்சன் அம்பிகாபதி சார்ந்த நிறுவனத்தின் கார்களும் பயன்படுத்தப்பட்டிருப்பதால், இந்த ரெய்டின் பின்னணியில் ஓ.பன்னீர்செல்வம் இருப்பதாக டிடிவி தினகரன் அணியினர் பொங்கி வருகிறார்கள்.
இது தொடர்பாக இன்று (11-ம் தேதி) டிடிவி தினகரனிடம் செய்தியாளர்கள் கேட்டபோது, ‘350 கார்கள் அம்பிகாபதியின் நிறுவனத்தில் இருந்து அமர்த்தப்பட்டது, சென்னை எஸ்.ஐ.டி. கல்லூரி அருகே ஒரு ஹோட்டலில் நடந்த சந்திப்புகள் குறித்து நானும் கேள்விப்பட்டேன். ரெட்சன் அம்பிகாபதி, யாருக்கு நெருக்கமாக இருக்கிறார் என்பது அனைவருக்கும் தெரியும். எனவே வருமான வரித்துறையினர்தான் இதிலுள்ள பின்னணி குறித்து விளக்கம் தெரிவிக்க வேண்டும்’ என்றார்.
டிடிவி தினகரன் தரப்பு தகவல் தொழில்நுட்பப் பிரிவினர் வெளியிடும் செய்திகளில், இந்த ரெய்டுக்கு பாஜக-வும் ஓபிஎஸ் தரப்புமே காரணம் என குற்றம் சாட்டி வருவது குறிப்பிடத்தக்கது.
ஆனால் மேற்படி கால் டாக்சி நிறுவனம் தரப்பில், ‘சென்னையின் பெரிய கால் டாக்சி நெட்வொர்க் எங்களுக்கு உரியதுதான். அந்த அடிப்படையில் ஐடி தேவைக்கு ஏற்ப எங்களால் அதிக கார்களை ஏற்பாடு செய்ய முடிந்தது. இதுதான் எங்கள் கார்களை ‘புக்’ செய்யக் காரணமே தவிர, வேறில்லை. அரசியலையும் தொழிலையும் நாங்கள் குழப்பிக் கொள்வதில்லை’ என்கிறார்கள்.