ஐசியு.வில் ம.நடராஜன்! சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜனின் உடலில் பல உறுப்புகள் செயலிழந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் கணவர் நடராஜன்(74), உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குளோபல் மருத்துவமனையில் நேற்று(ஞாயிறு) அனுமதிக்கப்பட்டார். அவரது உடலில் பல உறுப்புகள் செயலிழந்து உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் ஹெல்த் பார்க் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், “நீண்ட காலமாக கல்லீரல் நோயால் நடராஜன் பாதிக்கப்பட்டுள்ளார். இதற்காக கடந்த ஆறு மாதங்களாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது அவர் கல்லீரலுக்கான தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கல்லீரல் செயலிழந்து இருப்பதால், கிட்னியும், நுரையீரலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் அவருக்கு தற்போது இரத்த சுத்திகரிப்பும், மற்ற முக்கியமான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமில்லாமல், நடராஜன் சார்பில் தமிழ்நாடு உறுப்பு பகிர்தல் மையத்திலும் கல்லீரலுக்காக பதிவு செய்யப்பட்டு, உறுப்புக்காக காத்திருப்போர் பட்டியலில் அவரது பெயரும் உள்ளது. கல்லீரல் நிபுணர் பேராசிரியர்.முஹமத் ரெலா தலைமையிலான குழு நடராஜனை தீவிரமாக கண்காணித்து வருகிறது” என்று மருத்துவமனையின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், மருத்துவமனையில் இருந்து வெளியான தகவலின்படி, நேற்று சுமார் எட்டு மணி நேரத்திற்கும் மேலாக நடராஜனுக்கு இரத்த சுத்திகரிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வருடத்தில் நடராஜன் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது இது முதன்முறை அல்ல. கடந்த பிப்ரவரி மாதம் 5-ஆம் தேதி மூச்சுத் திணறல் பிரச்சனை காரணமாக, சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்தச் சூழ்நிலையில், சொத்துக் குவிப்பு வழக்கில் கைதாகி பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலா, கணவரை காண பரோலில் வெளிவர வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், இதற்கு முன்பு கடந்த ஏப்ரல் மாதம் சசிகலாவின் 2-வது அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் மாரடைப்பால் இறந்ததற்கும், கடந்த ஜூலை மாதம் சசிகலாவின் அண்ணி சந்தானலட்சுமி இறந்ததற்கும், பரோல் கேட்டு சசிகலா விண்ணப்பித்திருந்தார். ஆனால், அந்த இரண்டு சம்பவத்திற்குமே அவருக்கு பரோல் மறுக்கப்பட்டிருந்தது.

இருப்பினும், தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருப்பது சசிகலாவின் கணவர் என்பதால், நெருங்கிய ரத்த உறவு என்ற அடிப்படையில் கண்டிப்பாக சசிகலாவிற்கு பரோல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vk sasikalas husband admitted to hospital with multiple organ failure

Next Story
டிஎன்பிஎஸ்சி உறுப்பினர்கள் நியமனத்தை ஆளுநர் ரத்து செய்ய வேண்டும் – மு.க ஸ்டாலின்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express