Advertisment

‘திமுக.வில் அவமானங்களை தின்று வாழ்ந்தேன்’: வி.பி.துரைசாமி வெளியேறிய கதை

ஸ்டாலினுடன் இருக்கிற சிலர்தான் தன்னை ஓரம்கட்டியதாக நினைக்கிறார் துரைசாமி. அவர்களில் ஒருவர், வட மாவட்டம் ஒன்றின் முன்னாள் அமைச்சர்!

author-image
selvaraj s
புதுப்பிக்கப்பட்டது
New Update
‘திமுக.வில் அவமானங்களை தின்று வாழ்ந்தேன்’: வி.பி.துரைசாமி வெளியேறிய கதை

VP Duraisamy BJP, Barathiya janatha party, VP Duraisamy joins with bjp, vp duraisamy dmk deputy general secretary, வி.பி.துரைசாமி, திமுக, பாரதிய ஜனதாக் கட்சி, திராவிட முன்னேற்றக் கழகம்

VP Duraisamy Joins With BJP: திமுக.வில் டாப் 4 பதவிகளில் ஒன்றை கைவசம் வைத்திருந்தவர், மிக வெளிப்படையாக போர்க்கொடி தூக்கிவிட்டு பாஜக பக்கம் போயிருப்பது அரசியலில் அதிர்வலைகளை கிளப்பியிருக்கிறது. வி.பி.துரைசாமிதான் அந்த அதிர்வுகளை உருவாக்கியிருக்கும் நபர்.

Advertisment

திமுக.வில் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர் ஆகிய பதவிகளுக்கு அடுத்தபடியாக துணைப் பொதுச்செயலாளர் பதவி முக்கியமானது. 3 துணைப் பொதுச்செயலாளர் பதவிகளில் ஒன்றை தாழ்த்தப்பட்ட சமூகத்தினருக்கு ஒதுக்கீடு செய்திருக்கிறது திமுக. பரிதி இளம்வழுதிக்கு பிறகு, அந்தப் பதவி தொடர்ந்து வி.பி.துரைசாமி வசம் இருந்தது.

திமுக.வின் பொதுக்குழு, மாநாடுகள் என முக்கிய நிகழ்வுகள் அனைத்திலும் மேடையில் முன் வரிசையில் அமரும் வாய்ப்பை உடைய பதவி அது! அறிவாலயத்தில் துணைப் பொதுச்செயலாளருக்கு தனி அறையே உண்டு. இவற்றை உதறிவிட்டே வெள்ளிக்கிழமை (மே 22) பாஜக.வில் இணைந்திருக்கிறார் துரைசாமி.

வி.பி.துரைசாமியின் அரசியல் ஏற்ற இறக்கங்கள் மிகுந்ததுதான். திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியைச் சேர்ந்தவர் வி.பி.துரைசாமி. ஒடுக்கப்பட்ட சமூகமான அருந்ததியர் சமூகத்தில் பிறந்து, பெரிய பின்புலம் இல்லாமல் படித்து வழக்கறிஞர் ஆனவர். 1980-களில் தொழில் நிமித்தமாக நாமக்கல் வந்தார்.

கொங்கு மண்டலத்தில் கவுண்டர் சமூகத்தைப் போல, அருந்ததியர் சமூகமும் கணிசமான மக்கள் தொகையைக் கொண்ட சமூகம். அந்தச் சமூகத்தைப் பிரதிநிதித்துவப் படுத்த அப்போது சரியான நபர்கள் இல்லாத நிலையில், திமுக இவரை அடையாளம் கண்டது. 1989-ல் நாமக்கல் தொகுதியில் போட்டியிடும் வாய்ப்பை பெற்று எம்.எல்.ஏ. ஆனார்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு அப்போது ஆட்சிப் பொறுப்புக்கு வந்த திமுக, இவரை தமிழக சட்டமன்றத் துணை சபாநாயகர் ஆக்கியது. 1991-ல் திமுக தோல்வியைத் தழுவியது. நாமக்கல் உள்ளிட்ட ஒன்றுபட்ட சேலம் மாவட்ட திமுக.வும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் விழியசைவில் இயங்கிய காலகட்டம் அது. இவருக்கும் வீரபாண்டியாருக்கும் ஒத்துப் போகவில்லை. எனவே, ‘வீரபாண்டியாரின் அராஜகம் தாங்க முடியவில்லை’ என புகார் கூறிவிட்டு, அதிமுக.வுக்கு சென்றார் துரைசாமி. உடனே அங்கு இவருக்கு ராஜ்யசபை பதவி கொடுக்கப்பட்டது.

அதிமுக.வில் ராஜ்யசபை எம்.பி. பெற்று ஒரு வருடமே ஆகியிருந்த நிலையில், கலைஞர் இவரை அழைத்தார். 1992-ல் மீண்டும் திமுக.வுக்கு வந்தார். அதாவது, 5 ஆண்டுகள் எஞ்சியிருந்த ராஜ்யசபா பதவியை ராஜினாமா செய்துவிட்டே தாய்க் கழகத்திற்கு வந்தார். 1995-ல் திமுக.வில் இவரை ராஜ்யசபா எம்.பி. ஆக்கினார் கலைஞர். 2001 வரை எம்.பி. பதவியில் நீடித்தார்.

2006-ல் சங்ககிரி சட்டமன்றத் தொகுதியில் நின்று, மீண்டும் எம்.எல்.ஏ. ஆனார். திமுக.வும் அந்த முறை ஆட்சி அமைத்தது. தனது சீனியாரிட்டிக்கு அமைச்சர் பதவியை எதிர்பார்த்தார் வி.பி.துரைசாமி. ஆனால் 17 ஆண்டுகளுக்கு முன்பு அவர் வகித்த துணை சபாநாயகர் பதவியையே மீண்டும் வழங்கினார் கலைஞர். ‘என்னய்யா, கலெக்டர் ஆக்கிட்டு திரும்ப என்னை தாசில்தார் ஆக்குறீங்களே!’ என நேரடியாக அப்போது கலைஞரிடம் அதிருப்தியைக் கொட்டினார்.

கலைஞர் தட்டிக் கொடுத்து, ‘உனக்கு நல்ல வாய்ப்புகளை தருவேன்’ என அவரை ஆசுவாசப்படுத்தினார். பின்னர் பரிதி இளம்வழுதி அதிமுக.வுக்கு தாவியபோது துரைசாமியே எதிர்பாராமல் கிடைத்த பதவிதான், கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பதவி!

கலைஞர் ஆக்டிவாக இருந்தவரை, அவரை நேரடியாக எப்போதும் சந்தித்துப் பேசவும் குமுறவும் கொந்தளிக்கவும் உரிமை பெற்றவராக இருந்தார் துரைசாமி. 2010 காலகட்டத்திற்கு பிறகு இதற்கான வாய்ப்புகள் இல்லை. இவரது காலகட்டத்தில் திமுக.வில் துணைப் பொதுச்செயலாளராக இருந்த சற்குணபாண்டியன், மாநில அமைச்சர் ஆனார். மற்றொரு துணைப் பொதுச்செயலாளரும் இவரது நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவருமான சுப்புலட்சுமி ஜெகதீசன் மத்திய அமைச்சர் பதவி வரை உயர்ந்தார். துரைசாமி கட்சியின் உயர்ந்த பதவியில் இருந்தாலும் ஆட்சி அதிகாரத்தில் உயர்ந்த பதவிக்கு செல்ல முடியவில்லை.

வேலூர் மாவட்ட திமுக.வில் எந்தப் பெரிய முடிவு என்றாலும், பொருளாளரான துரைமுருகனை கேட்காமல் எடுப்பதில்லை. திண்டுக்கல் மாவட்டத்தில் துணைப் பொதுச்செயலாளரான ஐ.பெரியசாமியின் மகன் ஐ.பி.செந்தில்குமார், மாவட்டச் செயலாளர்! அங்கும் ஐ.பி.க்கு தெரியாமல் எதுவும் நடக்காது. கே.என்.நேரு முதன்மைச் செயலாளர் ஆனாலும், திருச்சி நிகழ்வுகள் அவரது ஆலோசனைப்படி நடக்கின்றன. ஆனால் நாமக்கல் மாவட்ட நிர்வாகிகள் நியமனத்தில் துரைசாமிக்கு எந்த வேலையும் இருப்பதில்லை. இதனால் அந்த மாவட்டத்தின் ஒன்றிய, நகரச் செயலாளர்கள் யாரும் துரைசாமியை கண்டுகொள்வதில்லை.

இதனாலேயே கடந்த 2016 தேர்தலில், சென்னை எழும்பூர் தொகுதியில் போட்டியிட முட்டி மோதினார் துரைசாமி. ஆனால் ஜூனியரான கே.எஸ்.ரவிச்சந்திரனுக்கு அந்தத் தொகுதியைக் கொடுத்த திமுக, இவரை பழையபடி ராசிபுரத்தில் நிறுத்தியது. எதிர்பார்த்தபடியே அங்கு தோற்றார். எழும்பூரில் ரவிச்சந்திரன் ஜெயித்தார். அறிவாலயத்தில் அலுவலகம் கொடுத்தவர்கள், விரும்பிய சட்டமன்றத் தொகுதியை தரவில்லையே என அப்போதே அவருக்கு வருத்தம்தான்.

இந்தச் சூழலில் கடந்த மார்ச்சில் காலியான ராஜ்யசபா எம்.பி பதவிகளில் ஒன்று தனக்குக் கிடைக்கும் என எதிர்பார்த்தார் வி.பி.துரைசாமி. இதற்காக உதயநிதி ஸ்டாலினை சந்தித்து, கையைப் பிடித்துக் கெஞ்சியதாக துரைசாமியே அண்மையில் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஆனால் இவர் சார்ந்த அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜை எம்.பி. ஆக்கியது திமுக தலைமை. கடைசியாக திமுக.வில் அருந்ததியர் சமூகப் பிரதிநிதியாக தனக்கிருந்த அடையாளமும் இதன் மூலம் தகர்ந்ததாக உணர்ந்தார் துரைசாமி.

எம்.பி. பதவி தராத நிலையில் அறிவாலயம் வருவதைக் குறைத்தார். கட்சித் தலைமையில் இருந்து, சமாதானத் தூது வரும் என எதிர்பார்த்தார். அது எதுவும் நடக்கவில்லை. சற்றே விரக்தி அடைந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகனை சந்தித்தார். அப்போதும்கூட, திமுக.வில் இருந்து விலகும் முடிவுக்கு அவர் வரவில்லை. ‘உயர் சாதியினர் கட்சியாக கூறப்பட்ட பாஜக.வில் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த முருகன் மாநிலத் தலைவர் ஆகியிருக்கிறார். அவர் எனது உறவினர். அவருக்கு வாழ்த்து கூறவே வந்தேன்’ என நிருபர்களிடம் குறிப்பிட்டார். இந்தக் கட்டத்திலாவது, தன்னை அழைத்துப் பேசுவார்கள் என எதிர்பார்த்தார்.

திமுக அப்படி எந்த ‘மூவ்’வையும் எடுக்கவில்லை. அடுத்து ஒரு பேட்டியில், உதயநிதியை சந்தித்தது குறித்தும், ஸ்டாலினைச் சுற்றியிருக்கும் சிலர் அவரை சரியாக வழிநடத்தவில்லை என்பதாகவும் பேட்டி அளித்தார். மறுநாளே (மே 21) இவரிடம் இருந்த துணைப் பொதுச்செயலாளர் பதவியை பறித்து, அந்தியூர் செல்வராஜிடம் வழங்குவதாக தலைமையிடம் இருந்து அறிக்கை வந்தது. வேறு வழியில்லை... 22-ம் தேதி வெளிப்படையாக பாஜக.வில் இணைந்திருக்கிறார்.

ஸ்டாலினுடன் இருக்கிற சிலர்தான் தன்னை ஓரம்கட்டியதாக நினைக்கிறார் துரைசாமி. அவர்களில் ஒருவர், வட மாவட்டம் ஒன்றின் முன்னாள் அமைச்சர்! மாவட்டச் செயலாளராகவே இருந்தாலும், தலைமையில் இவரது தலையீடு இல்லாமல் எதுவும் நடக்காது என்கிறார்கள். மற்றொருவர், மத்திய மாவட்ட முன்னாள் அமைச்சர்!

அறிவாலயத்தில் துரைசாமி அருகே உட்கார்ந்து பேசும் மேற்படி மத்திய மாவட்ட முன்னாள் அமைச்சர் ஆரம்பத்தில் ‘என்ன துரைசாமிண்ணே’ என்பாராம். சற்று நேரத்தில், ‘துரைசாமி’ என குரலை மாற்றுவாராம். இதுபோல பல ‘டீஸிங்’களை அனுபவித்த துரைசாமி தனக்கு நெருக்கமானவர்களிடம் அடிக்கடி உதிர்க்கும் ஒரு வாசகம், ‘நீங்கல்லாம் அவமானத்தை சந்திச்சிருப்பீங்க. நான் அவமானத்தை தின்று வந்திருக்கிறேன்’ என்பது!

2006- 2011 காலகட்டத்தில் பெண்ணாகரம் இடைத்தேர்தல் பிரசாரத்திற்கு போயிருந்தார் துரைசாமி. திமுக ஆட்சிக் காலம் அது! இவர் துணை சபாநாயகர்! அப்போதைய மேற்கு மாவட்ட அமைச்சர் ஒருவர் (இப்போது அவர் திமுக.வில் இல்லை) இவரை அருகில் வைத்துக்கொண்டே தனது கார் டிரைவரை கொச்சையாக சமூகப் பெயரைச் சொல்லி, ‘எடு காரை’ என்றாராம். அந்தக் கார் டிரைவரும், துரைசாமி சார்ந்த ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்! இது போன்ற ரணங்கள் பல!

1991-ல் திமுக.வை விட்டு வெளியேறியபோதும், கலைஞரைப் பற்றி சின்னதாகக் கூட வி.பி.துரைசாமி புகார் கூறவில்லை. அதேபோல இந்த முறையும் ஸ்டாலின் மீது அவருக்கு பெரிதாக புகார் இருப்பதாகத் தெரியவில்லை. அப்போது ஒரே ஆண்டில் கலைஞர் மீண்டும் அழைக்க, திமுக.வுக்கு திரும்பினார். இப்போது பாஜக பக்கம் போயிருப்பவர், அங்கு அரசியலை எப்படி நடத்தப் போகிறாரோ தெரியவில்லை.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

 

 

Bjp Dmk
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment