தமிழ்நாட்டில் அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணியில் கடந்த சில நாட்களாகவே சலசலப்பு மற்றும் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தது. தொடர்ந்து சென்னையில் பா.ஜ.க சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பேரறிஞர் அண்ணா குறித்து பேசியது பெரும் சர்ச்சையானது. அ.தி.மு.க இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தது.
இந்நிலையில் செப்டம்பர் 25-ம் தேதி நடைபெற்ற அ.தி.மு.க மாவட்ட பொதுச் செயலாளர்கள் கூட்டத்தில் மத்தியில் பா.ஜ.க தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் இருந்தும் தமிழகத்தில் இனி பா.ஜ.க உடன் கூட்டணி இல்லை என்றும் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றி அறிவித்தனர். இதற்கு வரவேற்பு தெரிவித்து அ.தி.மு.க தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
கட்சியின் தலைவர்கள் பற்றி தொடர்ந்து மாநில பா.ஜ.க தவறாக பேசி வந்ததால் கூட்டணி முறிவு எனத் தெரிவித்தனர். தொடர்ந்து கடந்த 2 நாட்களுக்கு முன் இதுகுறித்து பேசிய எடப்பாடி பழனிசாமி கூட்டணி முடிவு அ.தி.மு.க தொண்டர்களின் முடிவு எனக் கூறினார்.
இந்த சூழலில் நேற்று பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை டெல்லி புறப்பட்டு சென்றார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார். அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணி முறிவு, தமிழக அரசியல் நிலவரம் குறித்துப் பேசியயதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னை பா.ஜ.க அலுவலகமான கமலாலயத்தில் அண்ணாமலை இல்லாமல் சென்னை பெருங்கோட்ட பொறுப்பாளர்கள் மற்றும் செயலாளர்கள் கூட்டம் இன்று(அக்.3) நடைபெற்று வருகிறது. பா.ஜ.க அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் தலைமையில் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் 8 மண்டல பொறுப்பாளர்கள், செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
தொடர்ந்து, கூட்டத்தில் கலந்து கொள்ள பாஜக அலுவலகம் வந்த மாநில துணை தலைவர் வி.பி.துரைசாமியிடம், "பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அமித்ஷா உள்ளிட்ட தலைவர்களை சந்திதுள்ளது தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், நல்ல முடிவு கிடைக்கும், நீங்கள் சந்தோஷம் படும்படியாக முடிவு கிடைக்கும் என கூறினார். அதிமுக- பாஜக கூட்டணி நீடிக்குமா என்ற கேள்விக்கு, அதிமுக- பாஜக கூட்டணி நீடிப்பதற்காகத்தான் பெரியவர்கள் எல்லாம் பேசிவருகிறார்கள். நல்ல படியாக முடியும்" எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“