குட்கா ஊழலைத் தொடர்ந்து வாக்கி-டாக்கி விவகாரம் பற்றிக் கொண்டிருக்கிறது. இது தொடர்பாக டிஜிபி-க்கு உள்துறை செயலாளர் அனுப்பிய கடிதம்தான் ‘ஹாட் டாக்’!
தமிழக டிஜிபி-யான டி.கே.ராஜேந்திரன் ஓய்வு பெற்ற பிறகு, பதவி நீட்டிப்பில் இருக்கிறார். ஏற்கனவே தடை செய்யப்பட்ட குட்கா போதைப் பொருட்கள் சென்னையில் விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக லஞ்சம் பெற்றவர்களின் பட்டியலில் இவரது பெயர் அடிபட்டது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். அந்த விவகாரம் சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு உட்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்தச் சூழலில் தமிழக போலீஸ் துறைக்கு வாக்கி-டாக்கி உள்ளிட்ட வயர்லெஸ் உபகரணங்கள் வாங்கியதில் முறைகேடுகள் நடந்திருப்பதாக டிஜிபி-யின் தலை உருள ஆரம்பித்திருக்கிறது. கடந்த மாதம் (செப்டம்பர்) 23-ம் தேதி தமிழக உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளரான நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ், டிஜிபி-யான டி.கே.ராஜேந்திரன் ஐ.பி.எஸ்.ஸுக்கு எழுதிய ஒரு கடிதம்தான் இந்த விவகாரத்தின் ஆரம்பமும், ஆதாரமும்!

அந்தக் கடிதத்தில் அடுக்கடுக்காக 6 கேள்விகளை எழுப்பியிருக்கிறார் நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ்.! அந்தக் கேள்விகளை வரிசையாக பார்க்கலாம்.
1.வாக்கி-டாக்கி உள்ளிட்ட வயர்லெஸ் உபகரணங்கள் வாங்கியதற்காக மோட்டோரோலா நிறுவனத்திற்கு 83.45 கோடி ரூபாயை தமிழக போலீஸ் துறை வழங்கியிருக்கிறது. மத்திய அரசின் சார்பிலான போலீஸ் படை நவீனமயமாக்கல் திட்டத்தின்படி 2017-2018 ஆண்டுக்கு எதிர்பார்க்கப்படும் மொத்த தொகையே 47.56 கோடி ரூபாய்தான். அப்படியிருக்க இவ்வளவு கூடுதல் தொகைக்கு உபகரணம் வாங்கியது எப்படி?
2.மேற்படி வயர்லெஸ் உபகரணங்கள் வாங்குவதற்கு கடந்த ஆண்டு (2016) செப்டம்பர் 15-ம் தேதி போலீஸ் துறை சார்பில் டெண்டர் விடப்பட்டிருக்கிறது. அந்த டெண்டரில் மோட்டோரோலா நிறுவனம் மட்டுமே கலந்து கொண்டிருக்கிறது. டெண்டர் திறக்கப்பட்ட 9 நாட்களில் அந்த நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. இப்படி ஒரே நிறுவனத்தை டெண்டரில் பங்கேற்க வைத்து வழங்கியது சரியா?
3.மோட்டோரோலா நிறுவனம், இந்திய தொலைத்தொடர்பு துறையில் ஒப்பந்த உரிமம் பெறவில்லை. அந்த நிறுவனத்திற்கு இவ்வளவு பெரிய தொகைக்காக ஒப்பந்தத்தை வழங்கவேண்டிய தேவை ஏன் வந்தது?
4.இந்த ஒப்பந்தத்தில் பங்கேற்கும் முழு தகுதியும் மோட்டோரோலா நிறுவனத்திற்கு இருந்திருந்தால், அது குறித்தும் அந்த நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கியது குறித்தும் தமிழக அரசுக்கு போலீஸ் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டதா?
5.சென்னைக்கும் திருச்சிக்கும் சேர்த்து இந்த முன்னோடி திட்டத்தின் கீழ் 4000 வயர்லெஸ் உபகரணங்களை வாங்க போலீஸ் துறை முடிவு செய்திருக்கிறது. ஆனால் சென்னையின் தேவை மட்டுமே 10,000 வயர்லெஸ் உபகரணங்களுக்கும் அதிகமாக இருக்கிறது. சென்னையில் தற்போது பயன்பாட்டில் 10,000 உபகரணங்கள் இருக்கின்றன. ஆக, 4000 உபகரணங்கள் வாங்க முடிவு செய்தது சரியா?
6.இந்த உபகரணங்கள் வாங்கிய தொகையில் ஜி.எஸ்.டி. (சரக்கு மற்றும் சேவை வரி)-யின் தாக்கம் என்ன?
இப்படி 6 கேள்விகளை எழுப்பியதன் மூலமாக, இந்தக் கொள்முதலில் முறைகேடுகள் நடந்திருப்பதை நிரஞ்சன் மார்டி ஐ.ஏ.எஸ். வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருப்பதாக கருதப்படுகிறது. ஏற்கனவே குட்கா விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் விமர்சனங்களுக்கு உள்ளான டிஜிபி டி.கே.ராஜேந்திரனுக்கு இது அடுத்த தலைவலியாக உருவெடுத்திருக்கிறது.
இந்த விவகாரம் குறித்து டிஜிபி அலுவலக அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘செப்டம்பர் 23-ம் தேதியிட்ட உள்துறை செயலாளரின் கடிதம் தொடர் விடுமுறை காரணமாக செப்டம்பர் 28-ம் தேதிதான் எங்களுக்கு கிடைத்தது. தமிழக அரசின் வெளிப்படையான ஒப்பந்தப் புள்ளி அடிப்படையில்தான் இந்தக் கொள்முதல் நடந்தது. விரைவில் இது குறித்து உள்துறை செயலாளருக்கு விளக்கமாக பதில் கடிதம் அனுப்புவோம்’ என்றார்கள்.
ஊழலை வெளிப்படுத்தியது ஒருபக்கம் என்றாலும், போலீஸ் துறைக்கு பொறுப்பு வகிக்கும் உள்துறை செயலாளர் அதே போலீஸ் துறை மீது புகார்களை வெளிப்படுத்தியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தலைமைச் செயலகத்திற்கும், டிஜிபி அலுவலகத்திற்கும் இடையிலான மோதலாக இதை சிலர் வர்ணிக்கிறார்கள். முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அபிமானத்தை பெறுவதில் ஏற்பட்ட போட்டி, இப்படி மோதலாக உருவெடுத்து நிற்பதாக கூறப்படுகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக, முதல்வரின் வசம் இருக்கும் காவல்துறையில்தான் இந்த பாடு!