வேறு துறைகளில் மட்டுமே ஊழல் இருந்துவந்த நிலையில், தற்போது காவல்துறையிலும் ஊழல் ஊடுருவியுள்ளது. தமிழ்நாடு எங்கே போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது என்று திமுக செயல் தலைவர் மு.க ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார். தமிழக காவல்துறையை நவீன மயமாக்கும் திட்டத்தின்கீழ், போலீஸாருக்கு நவீன வாக்கி - டாக்கிகள் வழங்குவதற்காக டெண்டர் கோரப்பட்டது. இதற்காக பெங்களூருவைச் சேர்ந்த நிறுவனத்திடம் இருந்து ரூ.88 கோடி மதிப்பில் வாக்கி-டாக்கிகளை பெறுவதற்கு டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த டெண்டர் வழங்கப்பட்டதில் பல்வேறு முறைகேடுகள் நடத்திருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த குற்றச்சாட்டுகளுக்கு விசாரணை நடத்தி விளக்கம் அளிக்கும்படி டிஜிபி டி.கே ராஜேந்திரனுக்கு உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மார்டி கடிதம் மூலம் கேட்டுக்கொண்டார். இந்த நிலையில், நிரஞ்சன் மார்டி எழுதியுள்ள கடிதத்திற்கு வரவேற்பு தெரிவித்துள்ள மு.க ஸ்டாலின், காவல்துறையிலும் ஊழல் ஊடுருவியிருப்பதற்கு கண்டனம் தெரிவித்தார்.
இது தொடர்பாக சென்னையில் மு.க ஸ்டாலினின் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மு.க ஸ்டாலின் பதிலளிக்கும்போது: காவல்துறையில் ரூ.88 கோடி அளவில் பொருட்கள் வாங்கியதில் கட்டாயம் முறைகேடு நடந்திருக்கும். ஏனென்றால் குட்கா விவகாரத்தில் ரூ,40 கோடி பெற்றதாக டிஜிபி மீது புகார் உள்ளது. உள்துறைச் செயலாளரே டிஜிபிக்கு கடிதம் எழுதியிருப்பதாக செய்திகள் வருகின்றன.
டி.ஜி.பி யார் என அனைவருக்கும் தெரிந்தது தான். குட்கா விவகாரத்தில் ரூ.40 கோடி பெற்றவர் என்பதில் அவரது பெயர் உள்ளது. ஓய்வுபெற்றிருக்க வேண்டியவருக்கு இரண்டு வருடம் பதவி நீட்டிப்பு வழங்கியிருக்கின்றனர். உள்ளாட்சி, பொதுப்பணித்துறை போன்ற துறைகளில்தான் அதிகம் ஊழல் நடக்கும் என சொல்வதை கேட்டிருப்போம். ஆனால், காவல்துறையிலேயே ரூ.88 கோடி முறைகேடு நடந்திருப்பதாக கேள்விப்படுவது இதுவே முதல்முறையாக தெரிகிறது. இந்த நாடு எங்கே சென்று கொண்டிருக்கிறது என்று கேள்வியும் எழுகிறது என்று மு.க ஸ்டாலின் தெரிவித்தனர்.