நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் சி எஸ் கர்ணன் 6 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. நீதித்துறை வரலாற்றிலேயே நீதிபதி ஒருவர் சிறைக்கு செல்லவிருப்பது இது தான் முதல்முறையாகும். வரலாற்று சாதனைப் படைத்த கர்ணனின் மூலத்தைப் பார்க்கலாம்.
சி எஸ் கர்ணன் எங்கு பிறந்தார்?
கடலூர் மாவட்டம் விருதாசலத்தில் உள்ள கர்நத்தம் கிராம உயர் நிலைப்பள்ளி தலைமையாசியர் சுவாமிநாதன். அவரது மனைவி கமலம். இவர்களின் மகனாக 1955-ம் ஆண்டு பிறந்தவர் சி எஸ் கர்ணன். தலித் குடும்பத்தில் பிறந்த சி எஸ் கர்ணன், தனது பள்ளிப்படிப்பை சொந்த ஊரான கர்நத்ததில் முடித்தார். விருத்தாசலத்தில் பியூசி படிப்பை நிறைவு செய்தார். பின்னர் சென்னைக்கு வந்துள்ளார். இதையடுத்து, நியூ காலேஜில் பி.எஸ்சி படித்த அவர், மெட்ராஸ் சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை 1983-ம் ஆண்டு முடித்தார்.
சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதி
சென்னை ஐகோர்ட்டில் சிவில் வழக்கறிஞராக பணியாற்றினார். சென்னை மெட்ரோ வாட்டர் நிறுவனத்தின் சட்ட அலோசகராகவும், மத்திய அரசு வழக்கறிஞராகவும் பணியாற்றினார். சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிபதியாக 8 வருடமாக பணிபுரிந்த சி எஸ் கர்ணன், கடந்த 2016-ம் ஆண்டு மார்ச் மாதம் கொல்கத்தா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டார்.
சொந்த ஊர்
இன்னமும், கர்நத்தத்தில் சி எஸ் கர்ணனின் வீடு உள்ளது. ஆனால், சி எஸ் கர்ணன் என்ற பெயர் அவ்வளவு பிரபலமாக இல்லை. ஆனால், தலித் சமூகத்தைச் சார்ந்த சிலர், சி எஸ் கர்ணன் உயர் நீதிமன்ற நீதிபதி என்பதை நினைத்து பெருமையாக கூறுகின்றனர். அந்த கிராமத்தில் சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்து வருகின்றனர். கர்நத்தம் தலித் சமூகத்தினர் மட்டுமே வாழும் கிராமம் இல்லை என்றாலும், அங்கு சுமார் 40 சதவீதம் பேர் தலித் சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும், அந்த கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் குழாய்கள், அனைத்து சமூகத்தினரும் பொதுவாக பயன்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.
சி எஸ் கர்ணன் குடும்பம்
சி எஸ் கர்ணன் குடும்பம் கொஞ்சம் பெரியது. 4 சகோதரர்கள், 3 சசோரிகள் என அவருடன் சேர்த்து மொத்தம் எட்டு பேர். இதில் இரண்டாவதாக பிறந்தவர் தான் கர்ணன். எட்டு பேர் என்றாலும், அனைவரையும் அவரது தந்தை நன்றாக படிக்க வைத்துள்ளதாக கூறுகிறார், அவரது உறவினர் ஒருவர்.
கர்நத்தத்தில் வாழ்ந்து வரும் அவரது உறவினர் ஒருவர் கூறும்போது: சி எஸ் கர்ணனின் தந்தை சுவாமிநாதன் உயர் நிலைப்பள்ளியின் தலைமையாசிரியராக பணியாற்றினார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் அவர் காலமானார். ஒழுக்கத்தை கடைப்பிடித்து வாழ்ந்த சுவாமிநாதன், தனது எட்டு குழந்தைகளையும் நன்றாக படிக்க வைத்தார். சுவாமிநாதனின் மகன் சி எஸ் கர்ணன் மங்களம்பேட்டை உயர் நிலைப் பள்ளிப் படிப்பையும், விருத்தாசலத்தில் பியூசியையும் முடித்தார் என்று தனக்கு தெரிந்தவற்றை கூறினார்.
சி எஸ் கர்ணனின் உடன் பிறந்தவர்களான தேவநிதி மற்றும் அறிவுடைநம்பி ஆகியோர் வக்கீலாக உள்ளனர். இதேபோல மற்றொரு சகோதரரான திருவள்ளுவன் தமிழ்நாடு சிறப்பு காவல் பிரிவில் பணியாற்றி வருகிறார்.
சி எஸ் கர்ணனும் சொந்த ஊரும்
சி எஸ் கர்ணன் கர்நத்தம் கிராமத்திற்கு வந்து 7-மாதத்திற்கும் மேல் இருக்கும். அவர் பெரும்பாலும் உள்ளூர் மக்களிடம் அதிகமாக பேசியதில்லை என அப்பகுதிவாசி ஒருவர் கூறினார். பெரும்பாலும் கிராமத்தில் இருந்து நகரத்திற்கு குடிபெயர்ந்து வரும் மக்கள் போல தான் சி எஸ் கர்ணனும் இருந்து வந்துள்ளார் என்பது உள்ளூர் மக்கள் கூறிதன் மூலம் தெரிகிறது. எனினும், தனது குடும்பத்தினர் வழிபடும் கோவிலுக்கு கட்டடம் கட்டிக் கொடுத்துள்ளார். கர்நத்தத்தில் உள்ள ‘வைரவர்’ கோவில் தான் அது. அக்கோவிலுக்கு அவ்வப்போது, சி எஸ் வந்து செல்வாராம்.