‘மெர்சல்’ படத்தின் மீது புதிய வழக்கு?

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்காவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம்.

By: Updated: October 19, 2017, 02:39:27 PM

‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜி.எஸ்.டி. மற்றும் டிஜிட்டல் இந்தியா காட்சிகளை நீக்காவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

விஜய் மூன்று வேடங்களில் நடித்துள்ள ‘மெர்சல்’ படம், தீபாவளியை முன்னிட்டு நேற்று வெளியானது. அட்லீ இயக்கியுள்ள இந்தப் படத்தில், நித்யா மேனன், சமந்தா, காஜல் அகர்வால் என மூன்று ஹீரோயின்கள் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை, தேனாண்டாள் ஸ்டுடியோ நிறுவனம் 100 கோடி ரூபாய்க்கு மேல் செலவுசெய்து தயாரித்துள்ளது.

‘மெர்சல்’ படத்தில் மக்களைப் பாடாய்படுத்திய பல சமூக விஷயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘8 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு மருத்துவத்தை இலவசமாக அளிக்கும்போது, 28 சதவீதம் வசூலிக்கும் இந்தியா ஏன் மருத்துவத்தை இலவசமாகத் தரவில்லை?’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சியும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் தமிழக பாஜக தலைவரான தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார். இதன்மூலம், மத்திய அரசின் திட்டங்கள் குறித்து மக்களிடம் தவறான புரிதல் ஏற்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

“மத்திய அரசின் நல்ல திட்டங்களை, இவர்களுடைய விளம்பரத்திற்காக வேண்டுமென்றே குறை கூறுகிறார்கள். இது சரியான நடவடிக்கை இல்லை. மத்திய அரசைத் தொடர்ந்து குறை கூறுவது என்பது அனைவரின் கருத்தாக இருக்கிறது.

எனவே, ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்று இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும். அப்படி நீக்காவிட்டால், படத்தின் மீது வழக்கு தொடர்வோம். அரசியலுக்கு வருவதற்காக விஜய் தவறான தகவலைப் பரப்பி வருகிறார்” என்று தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Want to remove gst and digital india scenes from mersal movie asks tamilisai soundararajan

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X