புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்துக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நாளை அவர் பதவியேற்கிறார்.
தமிழகத்தின் புதிய ஆளுனராக மஹாராஷ்டிரா மாநிலத்தை சேர்ந்தவரான பன்வாரிலால் புரோஹித் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். கடந்த ஓராண்டாக தமிழக பொறுப்பு ஆளுனராக இருந்த வித்யாசாகர் ராவ், நேற்று பிரிவு உபசார விழாவுடன் விடை பெற்றார். இதைத் தொடர்ந்து புதிய ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இன்று (அக்டோபர் 5) சென்னை வந்தார்.
பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கிய அவரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், மூத்த அமைச்சர்கள், தமிழக தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், டிஜிபி டி.கே.ராஜேந்திரன், சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்டோர் சால்வை மற்றும் மலர் கொத்துகள் வழங்கி வரவேற்றனர். தமிழக காவல்துறை சார்பில் அவருக்கு, அணி வகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
வரவேற்பு நிகழ்ச்சிகள் முடிந்து, சென்னை கிண்டியில் அமைந்துள்ள ஆளுனர் மாளிகையான ராஜ் பவனுக்கு அவர் சென்றார். அங்கும் அதிகாரிகள் அவரை வரவேற்றனர். குதிரைப்படை அணி வகுப்பு மூலமாகவும் அங்கு வரவேற்பு கொடுத்தனர். நாளை (அக்டோபர் 6) காலை 9.30 மணிக்கு ராஜ் பவனில் நடைபெறும் விழாவில் பன்வாரிலால் புரோஹித், தமிழக புதிய ஆளுனராக பதவியேற்கிறார்.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி இந்த விழாவில் கலந்துகொண்டு, புதிய கவர்னருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் உயர்நீதிமன்ற நீதிபதிகள், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், அமைச்சரவை சகாக்கள், உயர் அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள்.
சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில் திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் பங்கேற்பார் என தெரிகிறது. தமிழக பாஜக தலைவர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது. தமிழகத்தில் அரசியல் நெருக்கடி சூழ்ந்துள்ள இந்த காலகட்டத்தில் புதிய கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.