ஜெ., அறிவித்த திட்டங்களை செயல்படுத்தாதது ஏன்? அதிமுக எம்எல்ஏ கேள்வி

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை குறித்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

தமிழகத்தில் நிலவி வரும் குடிநீர் பிரச்னை குறித்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் சட்டப்பேரவையில் கேள்வி எழுப்பினார்.

தமிழகம் முழுவதும் குடிநீர் பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. பல்வேறு இடங்களில் சாலை மறியல், தர்ணா, முற்றுகை என பல்வேறு போராட்டங்களை மக்கள் நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாட்டை போக்க நீர் நிலைகளை பாதுகாக்கும் வகையில், சட்டப்பேரவை எதிர்க்கட்சியான திமுக சார்பில், மாநிலம் முழுவதும் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் அக்கட்சியினர் நீர் நிலைகளை தூர் வாரும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குடிநீர் பிரச்னை குறித்து அரசுக்கு திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சார்பில் பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மேலும், தமிழகத்தில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு குறித்து சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றும் அக்கட்சிகள் சார்பில் கொண்டு வரப்பட்டது. இந்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதிலளித்து பேசினார்.

இதனிடையே, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவித்த குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்படாதது குறித்து அதிமுக எம்எல்ஏ தோப்பு வெங்கடாச்சலம் பேரவையில் கேள்வி எழுப்பினார். பேரவையில், முதல்வராக ஜெயலலிதா இருக்கும் போது, அதிமுக எம்எல்ஏ-க்கள் முதல், அமைச்சர்கள் வரை எப்படி நடந்து கொள்வர் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், தற்போது சொந்த கட்சி எம்எல்ஏ ஒருவரே அரசை நோக்கி கேள்வி எழுப்பும் நிலைக்கு அதிமுக ஆளாகியுள்ளது. இச்சம்பவம் சற்றே வியப்பை ஏற்படுத்தினாலும் ஆரோக்கியமான விஷயமாகவே பார்க்கப்படுகிறது.

கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் வேலுமணி, குடிநீர் பிரச்னையை சமாளிக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் நாளொன்றுக்கு சராசரியாக 5,891 மில்லியன் லிட்டர் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2011 -17-ஆம் ஆண்டு வரை பல்வேறு திட்டங்கள் மூலம் 1,869.55 மில்லியன லிட்டர் குடிநீர் பெறப்பட்டு, நபர் ஒருவருக்கு சராசரியாக 112 லிட்டர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

துறை சார்ந்து எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்ட அமைச்சர், குடிநீர் பற்றாக்குறை தான் மாநிலத்தில் நிலவும் வறட்சிக்கு காரணம் என்றும் கூறினார். மாநிலத்தில் பெய்திருக்கும் மழையின் அளவை சுட்டிக் காட்டி நிலத்தடி நீர் அதிகரித்து வருவதாக தெரிவித்த வேலுமணி, வருகிற செப்டம்பர் மாதம் வடகிழக்கு பருவமழை பொழியும் என கணிக்கப்பட்டுள்ளது. அது குடிநீர் ஆதாரத்தை சிறப்பாக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

அப்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி துனைத் தலைவர் துரைமுருகன், நீர் பற்றாக்குறைக்கு தீர்வு காணும் நடவடிக்கைகளை அமல்படுத்தாமல் அமைச்சர் கோரக் கூடாது என்றார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close