சென்னை மக்களின் முக்கிய குடிநீர் தேவைக்கான பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளது.
இந்த ஐந்து ஏரிகளிலும் மொத்தம் 11 ஆயிரத்து 757 மில்லியன் கன அடி தண்ணீர் சேமித்து வைக்கும் அளவிற்கு திறன் உள்ளது.
புழல் மற்றும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்வரத்து அதிகமானதால், கடந்த சில நாட்களுக்கு முன்பு உபரிநீர் திறக்கப்பட்டது.
இடையில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியால் கனமழை பெய்யும் என்று மக்கள் தயாராக இருந்தனர். ஆனால் காற்றழுத்த தாழ்வுப்பகுதி வழு விழந்ததால் எதிர்பார்த்த மழை இல்லாமல் போனது.
இதனால் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் நேற்று நிறுத்தப்பட்டது. தற்போது குடிநீர் கொண்டுள்ள ஐந்து ஏரிகளிலும் 7,907 மி.கன அடி (7.9 டி.எம்.சி) தண்ணீர் உள்ளது.
2021 ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் குடிநீர் ஏரிகளில் மொத்தம் 2 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. கடந்த ஆண்டு ஏரிகளில் 10 ஆயிரம் மி.கன. அடி (10 டி.எம்.சி) தண்ணீர் இருந்தது என்று தெரிவிக்கப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு இருப்பதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும் என்று எதிர்பாக்கப்படுகிறது.
புழல் ஏரியின் மொத்த கொள்ளளவு 3300 மி.கன அடி. இதில் 2500 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு 192 கன அடி தண்ணீர் வருகிறது.
சோழவரம் ஏரியின் கொள்ளளவு 1081 மி.கன அடி. இதில் 435 மி.கன அடி நீர் உள்ளது. ஏரிக்கு 184 கன அடி தண்ணீர் வருகிறது. 3 கன அடி வெளியேற்றப்படுகிறது.
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவு 3,645 மி.கன அடி. இதில் 2,484 மி.கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது.
பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3,231 மி.கன அடி. இதில் 1,988 மி. கன அடி தண்ணீர் உள்ளது. ஏரிக்கு 340 கன அடி தண்ணீர் வருகிறது. 53 கன அடி வெளியேற்றப்படுகிறது.
கண்ணன்கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரி முழு கொள்ளளவான 500 மி.கன. அடி நிரம்பி உள்ளது. ஏரிக்கு வரும் 20 கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil