டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று அமைச்சர் தங்கமணி தண்ணீர் திறந்து விட்டார். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்கள், பிரதானமாக மேட்டூர் அணையை நம்பியிருக்கின்றன. கர்நாடகாவில் பெய்த பலத்த மழையைத் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. எனவே பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடும்படி விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
ஆண்டுதோறும் ஜுன் மாதம் 12-ம் தேதி முதல் ஜனவரி 28-ம் தேதி வரை பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து 320 டிஎம்சி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அப்போது போதுமான அளவுக்கு தண்ணீர் இல்லாதால் அணை திறக்கப்படவில்லை.
தற்போது நிலவரப்படி அணையில் 57 டிஎம்சி தண்ணீர் உள்ளது. இந்நிலையில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அணையில் தண்ணீர் திறக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி இன்று அணை திறக்கப்பட்டது. இன்று காலை 9.30 மணியளவில் அமைச்சர்கள் தங்கமணி, கேபி.அன்பழகன், கேசி.கருப்பணன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டு அணையை திறந்து வைத்தனர்.
மேட்டூர் அணை திறக்கப்பட்டதன் மூலம் டெல்டா மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறும். 86-வது ஆண்டாக இந்தத் தண்ணீர் திறப்பு நடந்திருக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.