நீரின்றி அலையும் தமிழகம்... வருங்காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு உருவாகாத வகையில் திட்டங்கள் அமைக்கப்படுமா?

இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டிருந்தால் சென்னை இத்தனை அல்லோகலப்பட்டிருக்காது என்பது தான் உண்மை.

சென்னைல நல்ல மனுசங்க இல்ல, நல்ல மனசு இல்ல, அதனால மழையில்ல, வெள்ளம் வந்து ஊரையே அடிச்சுட்டு போய்ருதுன்னு சென்னைவாசிகளை எப்போதுமே சபித்துக் கொண்டிருப்பவர்களுக்கு இந்த செய்தி என்னவோ பெரும் வரப்பிரசாதம் போல் ஆகிவிட்டது.

ஐ.டி. நிறுவனங்களையும் தாக்கிய தண்ணீர் பஞ்சம் : OMR in Water Scarcity

சென்னை ஓ.எம்.ஆர். பகுதியில் கிட்டத்தட்ட 650 ஐ.டி. நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இரவு பகல் என்று பாராமல் 365 நாட்களுக்கும் அங்கு பணிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணமே இருக்கின்றது. 3 லட்சம் ஊழியர்கள் பணியாற்றும் அந்த பகுதிகளையும் விட்டுவைக்கவில்லை தண்ணீர் பஞ்சம்.

குடிப்பதற்கு, கழிவறையில் பயன்படுத்துவதற்கு, ஏ.சி. மற்றும் இதர தேவைகளுக்கு நீர் மிகவும் முக்கியமானதாக இருக்கின்றது. மெட்ரோ தண்ணீர் வராத காரணத்தால் தெருக்களில் தண்ணீர் லாரிகளுக்காக மக்கள் காத்துக் கொண்டிருக்க, தண்ணீருக்கான பெரும் தேவையை கொண்டிருக்கும் ஐ.டி. நிறுவனங்களின் தேவைகளை பூர்த்தி செய்வது கடினமாகிக் கொண்டே வருகின்றது.

அந்த 650 நிறுவனங்களில் ஏற்கனவே 12 நிறுவனங்கள், தண்ணீர் தட்டுப்பாடு மிக அதிகமாக இருப்பதால் நீங்கள் வீட்டிலிருந்தே தங்களின் வேலையை தொடரலாம் என்றும், அதிக தண்ணீர் தட்டுப்பாட்டினை நீங்கள் எதிர்கொள்கின்றீர்கள் என்றால் உங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று பணியை தொடரலாம் என்று அறிவுறுத்தியுள்ளது.

ஐ.டி. நிறுவனங்களுக்கு இந்த நிலை என்றால், பள்ளிகள், கல்லூரிகள், தொழிற்சாலைகள் என எங்கும் தண்ணீர் இல்லாமல் தவித்து வருகின்றனர் பொதுமக்கள்.

தற்காலிக தீர்வுகள் பயன் தராது

தமிழகத்தின் மேற்கு எல்லையில்  தண்ணீருக்கு எப்போதும் பெரிய அளவில் தட்டுப்பாடு உருவாவதில்லை. காரணம், அங்கிருக்கும் இயற்கை சூழ்நிலை. மூன்று மாநிலங்களுக்கும் அரணாக இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலை இருப்பதால் அங்கு மழைக்கும் பஞ்சமில்லை. தண்ணீருக்கும் பஞ்சமில்லை.  முறையாக தண்ணீரை சேமித்து வைக்கும் பட்சத்தில் வருடம் முழுவதும் தண்ணீருக்கு தட்டுப்பாடு இல்லாமல் அந்த பகுதி மக்களால் வாழ்ந்துவிட இயலும்.

கிழக்கு எல்லைப் புறம் வருவோம். ஜூன் – ஜூலை பருவமழையை இப்பகுதிகள் எப்போதும் நம்புவதில்லை. டெல்டா பகுதிகள் முழுவதும் காவேரியின் கடைக்கண் பார்வைக்கு காத்திருக்கும் பகுதிகள் தான். ஆனால் செப்டம்பர் இறுதி துவங்கி அக்டோபர், நவம்பர், மற்றும் டிசம்பர் மாதங்களில் நல்ல மழை பொழிவினை பெறுகின்ற இந்த பகுதிகள். இருப்பினும் ஒவ்வொரு வருடமும் மக்கள் தண்ணீருக்கு திண்டாடுவதற்கான காரணங்கள் என்ன?

கழிவுநீரை குடிநீராக சுத்தகரிக்கும் பணி துவங்கியது! கடல்நீரை குடிநீராக்கும் பணி துவங்கியது… ஏப்ரல் மாதத்திற்கு பிறகு தண்ணீர் தட்டுப்பாட்டினை சரி செய்ய மிகவும் தொலைநோக்கு பார்வையுடன் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் இவை இரண்டு மட்டுமே. ஆனால் இந்த திட்டங்களை நாம் எப்போது முன்னெடுத்திருக்க வேண்டும்? தட்பவெட்பநிலை மாற்றங்களால் ஏற்படும் பஞ்சங்கள், இழப்புகளை சரி செய்வதற்கு என்றும் நாம் தற்காலிக முடிவுகளை தேர்வு செய்துவிட்டால் பிரச்சனைகள் சமாளிக்க முடியாததாகவே தான் இருக்கும்.

சென்னையும் தண்ணீர் தட்டுப்பாடும்

சென்னையில் மழை பெய்ய வேண்டும் என்றால் வேலூரில் இருக்கும் மலைத் தொடர்களில் இருந்தோ, சித்தூரில் இருக்கும் நாகரி மலைத் தொடர்களில் இருந்தோ மேகங்கள் உருவாகி அது சென்னை பகுதிக்கு நகர்ந்து வந்தால் மட்டுமே மழை சாத்தியம் ஆகும்.

வடகிழக்கு பருவமழை முடிந்த பிறகு தோராயமாக ஆறு மாதங்களுக்கு (டிசம்பர் முதல் வாரம் – மே முதல் வாரம்) வரை மழையை எதிர்பார்ப்பது என்பது கற்பனை தான். இந்த மழையற்ற வறண்ட வானிலை என்பது இன்று நேற்று உருவானது இல்லை. 20 வருடங்களாக சென்னையில் மழை பெய்வது இந்த பேட்டரினில் தான். இது நாம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றாகவே இருக்கும் பட்சத்திலும் இறுதி நேர திட்டங்கள், நடைமுறையில் இருக்கும் தண்ணீர் தட்டுப்பாட்டினை தீர்ப்பதில்லை.

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட புள்ளி விபரம்

தமிழ்நாடு வெதர்மேன் வெளியிட்ட புள்ளி விபரம்

சென்னையின் வருடாந்திர மழைப் பொழிவு (Chennai Annual Rainfall)

சென்னைக்கு வருடத்திற்கு சராசரியாக 1400 எம்.எம். மழை கிடைக்கிறது. இது இந்திய நகரங்களான பெங்களூரு, கோவை, மதுரை, மைசூர்,விஜயவாடா, விசாகப்பட்டினம், அகமதாபாத், புனே, சூரத், ராஜ்கோட், மும்பை போன்ற நகரங்களில் கிடைக்கும் மழையின் அளவினை விட மிக அதிகம்.

மக்கள் தொகை நெருக்கம், அடர்த்தி, அவர்களின் அன்றாட தேவை போன்ற காரணங்கள் மட்டும் தண்ணீர் பஞ்சத்தினை உருவாக்கிவிடுவதில்லை. முறையான தொலைநோக்குப் பார்வையுடன் கட்டமைக்கப்படாத நகர்புறம், மழை நீர் நிலத்திலும் கூட விழுவதற்கு மண் இல்லாத கான்க்ரீட் பூமி, நாளுக்கு நாள் குறைந்து வரும் மரங்களின் எண்ணிக்கை அனைத்தும் இந்த பெரும் தண்ணீர் பற்றாக்குறைக்கு காரணமாக அமைந்துள்ளது.

தோல்வி அடைந்த மழை நீர் சேகரிப்புத் திட்டம்

குளங்களை ஆக்கிரமித்து வீடுகள் கட்டிவிட்டார்கள், ப்ளாட் போட்டு விற்றுவிட்டார்கள் என்ற புலம்பல்களை தவிர்த்துவிட்டு, இனி வரும் காலங்களில் நீர் விசயத்தில் தன்னிறைவோடு இருப்பது எப்படி ?

“கட்டாய மழை நீர் சேகரிப்புத் திட்டம்” எங்கேயே கேட்ட குரல் போன்று இந்த வார்த்தைகள் உங்களின் காதுகளில் வந்து விழக்கூடும். 2001ம் ஆண்டு, தமிழகத்தில் நிலவி வந்த வறண்ட சூழ்நிலையில் மக்கள் தப்பிக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு வந்து, ஜெயலலிதா அரசால் கட்டாயமாக்கப்பட்ட திட்டம் ஆகும். சென்னையில் பெரும்பாலான இடங்களில் இந்த திட்டம் கொண்டுவரப்பட்ட 5 ஆண்டுகளில் நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்து காணப்பட்டது.

இந்த சட்டத்தின் படி அனைத்து வீடுகள் மற்றும் கட்டடங்களுக்கும் கட்டாய மழைநீர் சேகரிப்பு அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. வேண்டுவோர்களுக்கு தேவையான வசதியினை செய்து தர தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் உதவும்.  இந்த திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்பட்டிருந்தால் சென்னை இத்தனை அல்லோகலப்பட்டிருக்காது என்பது தான் உண்மை.

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
×Close
×Close