‘மெர்சல் படத்துக்கு புரமோஷன் கொடுத்ததைப் போல் என் படத்துக்கும் குடுங்க என்று பாஜகவிடம் கேட்கலாம்னு இருக்கேன்’ என உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இப்படை வெல்லும்’. கெளரவ் நாராயணன் இயக்கியுள்ள இந்தப் படத்தில், மஞ்சிமா மோகன் ஹீரோயினாக நடித்துள்ளார். ராதிகா சரத்குமார், சூரி, டேனியல் பாலாஜி, ஆர்.கே.சுரேஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். டி.இமான் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது.
வருகிற வியாழக்கிழமை (நவம்பர் 9) ‘இப்படை வெல்லும்’ ரிலீஸாக இருக்கிறது. இதையொட்டி தனியார் செய்தித் தொலைக்காட்சி ஒன்றுக்குப் பேட்டியளித்த உதயநிதி ஸ்டாலின், “மெர்சல் படத்துல ஒரு டயலாக் வச்சதுக்கே இலவச பப்ளிசிட்டி கொடுத்தாங்க. நாங்களும் ‘இப்படை வெல்லும்’ படத்துல ஏதாவது காண்ட்ரவர்ஸி வச்சி தமிழிசை செளந்தரராஜனையும், ஹெச்.ராஜாவையும் பேச வைக்கலாம்னு பிளான் பண்ணிக்கிட்டு இருக்கோம். படத்துக்கு இலவச பப்ளிசிட்டி கிடைக்கும்” என்று கூறியிருந்தார்.
இதை செய்தியாக ட்விட்டரில் அந்த தொலைக்காட்சி நிறுவனம் பதிவிட்டிருந்தது. அதை ரீட்வீட் செய்துள்ள பாஜகவின் தேசிய இணைச் செயலாளர் ஹெச்.ராஜா, “ஒண்ணும் பிரயோஜனம் இல்லை. நாங்கள் உதவினாலும் படம் ஓடாதாம்” என்று தெரிவித்துள்ளார்.
,
ஒன்னும் ப்ரயோஜனம் இல்லை. நாங்க உதவினாலும் படம் ஓடாதாம். https://t.co/MfCED6P6DV
— H Raja (@HRajaBJP) November 4, 2017
இந்த ட்வீட்டை ஸ்கிரீன் ஷாட் எடுத்து தன்னுடைய ட்விட்டரில் பதிவிட்டுள்ள இயக்குநர் கெளரவ் நாராயணன், “பப்ளிசிட்டி கொடுத்ததற்கு மிகப்பெரிய நன்றி ஹெச்.ராஜா சார். எங்களுடைய முழு டீமும் உங்களுக்கு நன்றிக்கடன்பட்டிருக்கு. கலக்குங்க சார், கைவிட்ராதீங்க” என கிண்டலாகக் குறிப்பிட்டுள்ளார்.
‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்றுள்ள ஜிஎஸ்டி மற்றும் டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சிகளை நீக்கச்சொல்லி பாஜகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதைத் தொடர்ந்து நடைபெற்ற சம்பவங்களால், ‘மெர்சல்’ படம் நாடு முழுவதும் பிரபலமானது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.