தீபாவளிக்கு வெளியான ‘மெர்சல்’ படத்தில் மக்களைப் பாடாய்படுத்திய பல சமூக விஷயங்கள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, ‘8 சதவீதம் ஜி.எஸ்.டி. வசூலிக்கும் சிங்கப்பூர் அரசு மருத்துவத்தை இலவசமாக அளிக்கும்போது, 28 சதவீதம் வசூலிக்கும் இந்தியா ஏன் மருத்துவத்தை இலவசமாகத் தரவில்லை?’ என்ற வசனம் இடம்பெற்றுள்ளது. மேலும், டிஜிட்டல் இந்தியா தொடர்பான காட்சியும் இடம்பெற்றுள்ளது.
இந்தக் காட்சிகளை நீக்க வேண்டும் என தமிழிசை செளந்தரராஜன், இல.கணேசன், பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா உள்ளிட்ட பாஜக தலைவர்கள் குரல் கொடுத்துள்ளனர். அவர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த குஷ்பூ, திருநாவுக்கரசர் ஆகியோர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்தனர்.
இயக்குநர் பா.இரஞ்சித்தும், ‘இந்தக் காட்சிகளை நீக்கத் தேவையில்லை. மக்களிடம் இந்தக் கருத்துகளுக்கு வரவேற்பு உள்ளது’ என்று கூறினார். ஆனாலும், ஜிஎஸ்டி குறித்த காட்சிகளை நீக்க தயாரிப்பாளரான முரளி ராமசாமி முடிவு செய்துள்ளார். மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணனிடம் போன் மூலம் இந்தத் தகவலை முரளி தெரிவித்ததாக நேற்று செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், ‘மெர்சல்’ படத்தில் இடம்பெற்று காட்சிகளை நீக்கத் தயார் என்று தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனம் தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மெர்சல் படத்தால் யார் மன வருத்தம் அடைந்திருந்தாலும், அதை எங்கள் வருத்தமாகவே கருதுகிறோம்.
தவறான புரிந்துணர்வுகளை ஏற்படுத்தும் கருத்துகளை அகற்ற வேண்டும் என்றால், அதற்கு தயார். சாமானிய மனிதருக்கும் மருத்துவம் கிடைக்க வேண்டும் என்பதே கதையின் கரு. ‘மெர்சல்’ படம், அரசுக்கு எதிரான கருத்தைச் சொல்லும் படம் அல்ல. எதிர்ப்பாளர்களின் பார்வையில், அவர்களின் எதிர்ப்பும் நியாயமானதே” என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.