மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள் தங்களது குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக்கடை பணியாளரிடம் தக்க விவரங்களுடன் தங்கள் புகைப்படத்தை, குடும்ப அட்டை நகலுடன் இணைத்து வழங்கி விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை உணவுத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியதாவது: சென்னை மாவட்டத்தில் பழைய குடும்ப அட்டைக்குப் பதில் புதிய மின் னணு குடும்ப அட்டைகள் வழங்கும் பணி நடந்து வருகிறது. இப்பணியில் சில குடும்ப அட்டைதாரர்களுக்கு மின்னணு குடும்ப அட்டை இதுவரை கிடைக்கவில்லை.
இதுவரை மின்னணு குடும்ப அட்டைகள் கிடைக்கப் பெறாதவர்கள், www.tnpds.gov.in என்ற இணையதள முகவரியில் பயனாளர் நுழைவு பகுதியில் குடும்ப அட்டைக்கு பதிவு செய்யப்பட்ட கைபேசி எண்ணை பதிவு செய்து நுழையலாம். அவ்வாறு நுழைந்ததும் பயனாளரின் கைபேசி எண்ணுக்கு கிடைக்கப் பெறும் கடவுச் சொல்லை பதிவு செய்தால், திரையில் தோன்றும் மின்னணு குடும்ப அட்டை விவர மாற்றம் என்ற பகுதிக்கு சென்று குடும்ப தலைவர் புகைப்படம், இதர விவரங்கள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் முறையாக பதிவேற்றப்பட்டுள்ளதா என தெரிந்து கொள்ளலாம். அவ்வாறு முறையாக பதிவு செய்யப்படவில்லை எனில், புகைப்படம் பதிவேற்றம் செய்து விவரங்கள் திருத்தம் செய்ய வேண்டும். அதன் பின்னரே மின்னணு குடும்ப அட்டை அச்சிடப்படும்.
திருத்தங்கள் செய்ய வேண்டுவோர் பின்வரும் முறைகளைப் பயன்படுத்து திருந்தங்களை மேற்கொள்ளலாம். அதன்படி, குடும்ப அட்டைதாரர்கள், தங்கள் வசம் உள்ள இணையவசதி வாயிலாக www.tnpds.gov.in என்ற இணையதளத்திலோ அல்லது TNEPDS என்ற கைபேசி செயலியை பயன்படுத்தியோ திருத்தங்கள் மேற்கொள்ளலாம். புகைப்படத்தையும் மாற்றலாம். அரசு இ-சேவை மையம் மூலமாகவும் திருத்தங்கள் மேற்கொண்டு, புகைப்படத்தை பதிவேற்ற லாம்.
இணைய வசதி இல்லாதவர்கள் அவர்கள் குடும்ப அட்டை இணைக்கப்பட்ட நியாய விலைக்கடை பணியாளரிடம் தக்க விவரங்களுடன் தங்கள் புகைப்படத்தை, குடும்ப அட்டை நகலுடன் இணைத்து வழங்கி விண்ணப்பிக்கலாம். மேலும், அட்டைதாரரின் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் புகைப்படத்தை இதர விவரங்களுடன் குடும்ப அட்டை நகலில் ஒட்டி வழங்கலாம்.
சரியான விவரங்கள் மற்றும் புகைப்படம் இல்லாமல் மின்னணு குடும்ப அட்டைகள் அச்சிடப்படாத அட்டைதாரர்கள் விவரம், நியாய விலைக் கடைகளில் ஒட்டி விளம்பரப்படுத்தப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் பெயர் இடம் பெற்றிருந்தால் இணையதளம், கைபேசி மூலமோ, நேரில் திருத்தங்களை வழங்கியோ மின்னணு குடும்ப அட்டை பெற முடியும் என்று கூறப்பட்டுள்ளது.