ஜெயலலிதா மரணம்: விசாரணைக்கு தயார்-அப்பல்லோ பிரதாப் ரெட்டி

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

By: July 18, 2017, 4:48:05 PM

மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 22-ம் தேதியன்று இரவில் உடல்நலக் குறைவு காரணமாக திடீரென சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது உடல்நிலையில் தொடர்ந்து முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்புகளில் தெரிவிக்கப்பட்டு வந்தது.

அதேபோல், சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சுமார் 70 நாட்களுக்கும் மேலாக சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதாவுக்கு பல்வேறு சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்கள், லண்டன் மருத்துவர் என தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ம் தேதி இரவு 11.30 மணியளவில் உயிரிழந்ததாக அப்பல்லோ மருத்துவமனை நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

அதன்பின்னர் அவரது உடல், பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல்வேறு தரப்பினரும் அஞ்சலி செலுத்துவதற்காக சென்னை ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டது. பின்னர், சென்னை மெரீனா கடற்கரையில் உள்ள எம்ஜிஆர் நினைவிடம் அருகே ஜெயலலிதாவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜெயலலிதா காலமான பின்னர், அவரது உயிரிழப்பு குறித்து பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றன. அவரது மரணத்தில் பல்வேறு மர்மங்கள் இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பாக பல்வேறு வழக்குகள் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்டன. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர், அதிமுக-வினுள் பல்வேறு குழப்பங்கள் நிலவி வருகின்றன. கட்சித் தலைமைக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய பன்னீர்செல்வம் தனி அணியை உருவாக்கினார். தற்போது, பன்னீர்செல்வம் அணி, எடப்படி அணி, தினகரன் அணி என அதிமுக சிறு, சிறு அணிகளாக சிதறியுள்ளது.

பன்னீர்செல்வம் அணியினர் அதிமுக புரட்சித் தலைவி அணி என்ற பெயரில் செயல்பட்டு வருகின்றனர். ஜெயலலிதாவின் மரணம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்பி வரும் இவர், நீதி விசாரணையும் கோரி வருகிறார்.

இந்நிலையில், மறைந்த தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரணை நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் என அப்பல்லோ தலைவர் பிரதாப் ரெட்டி தெரிவித்துள்ளார். ஜெயலலிதாவுக்கு சிகிச்சையளிக்கும் போது யாரும் தலையிடவில்லை என்றும், அவருக்கு உயர்தர சிகிச்சை அளிக்கப்பட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோல், ஜெயலலிதா மரணம் குறித்த எந்த ஒரு விசாரணையையும் எதிர்கொள்ள நாங்கள் தயார் என தினகரன் அணியை சேர்ந்த நாஞ்சில் சம்பத்தும் சவால் விடுத்துள்ளார்.

முன்னதாக, ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் ஜான் பேல் மற்றும் அப்பல்லோ மருத்துவர்கள் குழு, கடந்த பிப்ரவரி மாதம் செய்தியாளர்களை சந்தித்து சிகிச்சை முறை குறித்து விளக்கம் அளித்தனர். ஆனால், அவர்களது விளக்கம், பல்வேறு விமர்சனங்களுக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:We can face if probe conduct against tn ex cm jayas death apollo prathap reddy

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X