சபாநாயர் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு முழு விளக்கமளிக்கப்படும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார்.
தினகரனை கட்சிப் பதவியில் இருந்து நீக்கி முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, அதிமுக-வில் தினகரனை ஓரங்கட்டி விட்டு, எடப்பாடி பழனிசாமி-பன்னீர்செல்வம் அணிகள் கடந்த 21-ம் தேதி இணைந்தன. அதேபோல், அதிமுக தலைமைக் கழகத்தில் கடந்த 28-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில், சசிகலா மற்றும் தினகரனை ஒதுக்கி வைப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், சசிகலா மற்றும் தினகரனுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் அதிமுக-வில் குரல் கொடுத்து வருகின்றனர். டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, "முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நாங்கள் வைத்த நம்பிக்கையை இழந்துவிட்டோம். கடந்த முறை எடப்பாடி பழனிசாமி நம்பிக்கை கோரும் தீர்மானத்தில் எங்களது ஆதரவுடன் தான் அவர் ஜெயித்தார். இப்போது அவரது நடவடிக்கையில் எங்களுக்கு திருப்தி இல்லை" என கடிதம் அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, தமிழக சட்டப்பேரவையை உடனடியாக கூட்டி, பெரும்பான்மையை நிரூபிக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதனால் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
இதனிடையே, டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்களை தகுதி நீக்கம் செய்ய சபாநாயகரிடம் அரசின் கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்துள்ளார். அதனையேற்று, சபாநாயகர் தனபால் தினகரன் ஆதரவு எம்எல்ஏ-க்கள் 19 பேருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார். இதற்கு தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் சிலர் நேற்று முன்தினம் சட்டப்பேரவை செயலரை சந்தித்து விளக்கமளித்திருந்தனர்.
இதையடுத்து, சபாநாயகர் தனபால், 19 எம்எல்ஏ-க்களுக்கு மீண்டும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். அதில், வருகிற 5-ம் தேதிக்குள் முழுமையான விளக்கத்தை அளிக்க வேண்டும். கடந்த ஆகஸ்ட் 30-ம் தேதி (நேற்று முன்தினம்) அளித்த விளக்கம் இடைக்கால பதிலாகவே கருதப்படும் எனக் கூறியுள்ளார்.
இந்நிலையில், சபாநாயர் அனுப்பியுள்ள நோட்டீஸுக்கு முழு விளக்கமளிக்கப்படும் என டிடிவி தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்துள்ளார். மேலும், டிடிவி தினகரனுக்கு எம்எல்ஏ-க்கள் 40 பேரின் ஆதரவு உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, சபாநாயகர் அனுப்பியுள்ள நோட்டீஸ் எங்களைக் கட்டுப்படுத்தாது. சட்டப்படி, முறைப்படி எங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படவில்லை. இதைப் பொருத்து எங்களுக்கு எந்த பிரச்னையும் இல்லை. துணைப் பொதுச்செயலாளரை சந்தித்து அடுத்த கட்டமாக ஜனாதிபதியை சந்திப்பது குறித்து எங்கள் நகர்வு இருக்கும் என தங்க தமிழ்ச்செல்வன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.