அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக சசிகலா கூறியதையே நாங்கள் சொன்னோம் என அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கூறினார்.
அப்பல்லோவில் சிகிச்சை பெற்றபோது ஜெயலலிதா இட்லி சாப்பிட்டதாக பொய் சொன்னோம். எனவே மக்கள் எங்களை மன்னிக்க வேண்டும் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் அண்மையில் மதுரை பழங்காநத்தம் பொதுக்கூட்டத்தில் குறிப்பிட்டார். இது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
திண்டுக்கல் சீனிவாசன் கூறுவது உண்மையானால், அரவக்குறிச்சி உள்ளிட்ட 3 தொகுதிகள் தேர்தலில் சின்னம் ஒதுக்குவதற்கு அப்பல்லோவில் இருந்து ஜெயலலிதா கைநாட்டு போட்டதாக சொன்னது பொய்யா? ஓ.பன்னீர்செல்வத்திற்கு முதல்வர் இலாகா ஒதுக்க கையெழுத்து போட்டதாக கூறியது பொய்யா? இது குறித்தெல்லாம் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் கோரிக்கை வைத்திருக்கிறார்.
பாமக நிறுவனர் ராமதாஸ், ‘அமைச்சர் திண்டுக்கல் உள்ளிட்டவர்களை இது தொடர்பாக கைது செய்து விசாரிக்க வேண்டும். அமைச்சர் பதவியிலிருந்து அவரை நீக்க வேண்டும்’ என அறிக்கை விட்டார். பாஜக மாநில தலைவர் தமிழிசையும் இது தொடர்பாக உரிய விசாரணையை வலியுறுத்தி பேட்டி கொடுத்தார்.
நம்பிக்கை வாக்கெடுப்பு சிக்கலில் இருந்து தற்காலிகமாக விடுபட்ட எடப்பாடி அரசுக்கு திண்டுக்கல் சீனிவாசனின் பேட்டி புதிய தலைவலியாக அமைந்திருக்கிறது. ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி அறிவித்த நீதி விசாரணையே நடைமுறைக்கு வராத நிலையில், இதில் சிபிஐ விசாரணை கோரிக்கை வலுத்து வருகிறது.
இந்த நிலையில் திண்டுக்கல் தொகுதியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட திண்டுக்கல் சீனிவாசனிடம் இந்த சர்ச்சை பற்றி நிருபர்கள் கருத்து கேட்டனர். அப்போது அவர், ‘சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளே போய்விட்டு வந்து, ஜெயலலிதா இட்லி சாப்பிட்டார் என கூறியதையே நாங்கள் சொன்னோம். பொய் கூறக்கூடாது என்ற அடிப்படையிலேயே அந்த விளக்கத்தை நாங்கள் குறிப்பிட்டோம்’ என கூறினார் சீனிவாசன்.
இதற்கிடையே ஜெயலலிதா மரணத்தில் சிபிஐ விசாரணை பற்றி கர்நாடக மாநிலம் குடகு பகுதியில் முகாமிட்டிருக்கும் டிடிவி அணியை சேர்ந்த புகழேந்தி கூறுகையில், ‘அமைச்சர்கள் எதைப் பேசுவது என்றே புரியாமல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். அம்மாவின் சிகிச்சை பற்றி இப்போது ஏன் பேசுகிறார்கள் என்றும் புரியவில்லை. இது குறித்து சிபிஐ விசாரணை அமைத்தால் நாங்கள் சந்திக்க தயார்’ என்றார் அவர்.
அதிமுக விவகாரம் குறித்து தஞ்சையில் நிருபர்களிடம் பேசிய வைத்தியலிங்கம் எம்.பி., ‘இன்னும் 15 நாட்களில் இரட்டை இலை சின்னத்தை நாங்கள் மீட்போம்’ என்றார். டிடிவி தினகரன் வசம் ஜெயலலிதாவின் சிகிச்சை தொடர்பாக வீடியோ காட்சிகள் இருப்பதாக கூறப்படுவது குறித்து வைத்திலிங்கத்திடம் கேட்டபோது, ‘அதை அவர் வெளியிட்டால் எதிர்கொள்வோம்’ என்றார்.
அதிமுக.வில் ஆளாளுக்கு பேட்டிகள் மூலமாக பரபரப்பை கிளப்புவது எடப்பாடிக்கு தலைவலியை அதிகரித்திருக்கிறது.