ஸ்டாலின் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தால், அந்த வேளையில் அது பற்றி சிந்திப்போம் என டிடிவி.தினகரன் கூறினார்.
தி.மு.க. தலைமை அலுவலகமாக அண்ணா அறிவாலயத்தில் இன்று (ஆகஸ்ட் 11) காலை 10 மணிக்கு தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்ததும் நிருபர்களுக்கு பேட்டியளித்த தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், ‘தேவைப்பட்டால் எடப்பாடி அரசு மீது மீண்டும் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வருவோம்’ என அறிவித்தார்.
இது குறித்து இன்று பகல் 12.45 மணியளவில் தஞ்சையில் அ.தி.மு.க. அம்மா அணி துணைப் பொதுச்செயலாளர் டிடிவி.தினகரனிடம் நிருபர்கள் கேட்டனர். அதற்கு தினகரன், ‘ஸ்டாலின் ஒருவேளை தீர்மானம் கொண்டு வந்தால், அந்த வேளையில் அது பற்றி சிந்திப்போம்.’ என்றார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், ‘அம்மாவால் உருவாக்கப்பட்ட ஆட்சி 5 ஆண்டுகள் நீடிக்கவேண்டும். 2021-லும் அம்மா ஆட்சி அமையவேண்டும் என்பதுதான் எங்கள் விருப்பம். ஆனால் தண்டவாளத்தில் போகிற வரை ரயிலுக்கு பிரச்னை இல்லை. தண்டவாளத்தில் இருந்து விலகினால் பிரச்னைதான். அந்த ரயில் எப்படிப் போகும் என்பதை டிரைவரிடம்தான் (முதல்வரிடம்) நீங்கள் கேட்கவேண்டும்’ என ஜோக் அடித்தார்.
தொடர்ந்து அது சம்பந்தமாகவே நிருபர்கள் கேள்வி எழுப்பியபோது, ‘உங்களுக்கு பரபரப்பு செய்தி வேண்டும் என்பதற்காக நான் பேச முடியாது. அ.தி.மு.க. மாபெரும் மக்கள் இயக்கம். எம்.ஜி.ஆர். இந்த இயக்கத்தை தொடங்கி 10 ஆண்டுகள் ஆட்சி நடத்தினார். அதன்பிறகு பிளவுபட்ட இயக்கத்தை ஒன்றுபடுத்தி 30 ஆண்டுகள் இந்த இயக்கத்தை அம்மா கட்டிக் காத்து, 5 முறை ஆட்சியிலும் அமர்ந்தார்.
இன்னும் 100 ஆண்டுகள் ஆனாலும் இந்த இயக்கம் தலைநிமிர்ந்து நிற்கவேண்டும் என்கிற அம்மாவின் கூற்றை வருங்கால சந்ததியினருக்கு எடுத்துச் செல்லும் பொறுப்பு துணைப் பொதுச்செயலாளர் என்ற முறையில் எனக்கு இருக்கிறது. எனவே எனது முன்னாள் நண்பர்கள் (அமைச்சர்கள்) பயத்திலோ, சுயநலம் காரணமாகவோ சொல்லும் அனைத்துக்கும் நான் பதில் சொல்ல விரும்பவில்லை’ என்றார் தினகரன்.
‘நீட்’ வழக்கில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு இன்று உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, ‘சுகாதாரத்துறை அமைச்சர் டெல்லியில் முகாமிட்டு இதற்காக 100 சதவிகிதம் உழைத்தார்’ என புகழ்ந்தார் டி.டி.வி.!