முதல்வரை மாற்றுவோம், முடியாவிட்டால் ஆட்சியை அகற்றுவோம் என டிடிவி.தினகரன் புதிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதிமுக குழப்பம் உச்சகட்டத்தை எட்டியிருக்கிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது நம்பிக்கை இல்லை என குறிப்பிட்டு டிடிவி.தினகரன் அணியை சேர்ந்த 21 எம்.எல்.ஏ.க்கள் கவர்னர் வித்யாசாகர் ராவிடம் கடிதம் கொடுத்தனர். அப்போதும், ‘இந்த ஆட்சியை கவிழ்க்கும் திட்டம் இல்லை. முதல்வரையும் துணை முதல்வரையும் மாற்றுவது மட்டுமே எங்கள் நோக்கம்’ என டிடிவி.தினகரன் கூறி வந்தார்.
ஆனால் அதிமுக பொதுக்குழுவையொட்டிய க்ளைமாக்ஸ் தருணமான செப்டம்பர் 11-ம் தேதி(இன்று) இந்த விவகாரத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டிருக்கிறார் டிடிவி.தினகரன். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற பெஞ்ச் உத்தரவு எதிர்பார்க்கப்பட்ட சூழலில், இன்று இரவு 8.30 மணிக்கு நிருபர்களை சந்தித்த டிடிவி.தினகரன், ‘நான் செல்கிற இடங்களில் எல்லாம் பொதுமக்கள் மட்டுமல்ல, கட்சித் தொண்டர்களும் ‘இன்னும் இந்த ஆட்சியை ஏன் கவிழ்க்காமல் வைத்திருக்கிறீர்கள்?’ என கேட்கிறார்கள்.
‘இவர்களை முதல்வராக்கிய பொதுச்செயலாளருக்கே நன்றி காட்டாத இவர்கள், மக்களுக்கு எப்படி நன்றியுடன் இருப்பார்கள்?’ என மக்கள் கேட்கிறார்கள். எனவே முதல்வரையும் துணை முதல்வரையும் மாற்ற முயற்சிப்போம். முடியாத பட்சத்தில் இந்த ஆட்சியை அகற்றுவோம்.’ என குறிப்பிட்டார் டிடிவி.தினகரன்.
முதல் முறையாக, ‘ஆட்சியை கவிழ்க்க தயாராகிவிட்டோம்’ என டிடிவி.தினகரன் அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. டிடிவி.தினகரன் அணியில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் 21 பேரும் இந்த முடிவை ஏற்பார்களா? அல்லது மாறுபட்ட முடிவை எடுப்பார்களா? என்கிற கேள்வி எழுந்திருக்கிறது. எனவே தமிழக அரசியல் பரபரப்பான கட்டத்தை நோக்கி நகர்கிறது.