தேர்தல் நேரத்தில் பாஜக-வுடன் கூட்டணி அமைப்பது குறித்து பரிசீலனை செய்யப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக வேலூர் சென்ற முதல்வர் பழனிசாமி, செல்லும் வழியில் காஞ்சிபுரம் மாவட்டம் சின்னையன்சத்திரம் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் உள்ளாட்சித் தேர்தலில் பாஜக-வுடன் அதிமுக கூட்டணி அமைக்குமா என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த முதல்வர், தேர்தல் வரும் போதுதான் கூட்டணி குறித்து பேச முடியும். அப்போது தான் கூட்டணி குறித்து பரிசீலனை செய்வோம் என்றார்.
மேலும், ஆட்சியை அகற்ற வேண்டும் என நான் ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே ஸ்டாலின் கூறி வருகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்ததில் இருந்து, ஜெயலலிதா விட்டு சென்ற பணிகளை, நிறைவேற்ற அவரது வழியில் பணியாற்றி வருகிறோம். அதிமுகவிற்கு 134 எம்எல்ஏக்கள் உள்ளனர். அரசு பெரும்பான்மையுடன் உள்ளது என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, வரும் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.கவுடன் அதிமுக கூட்டணி வைப்பதில் எந்த தவறும் இல்லை என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கருத்து தெரிவித்திருந்தார். பாஜகவுடன் இணைந்து ஏற்கனவே தேர்தலை அதிமுக சந்தித்துள்ளது என்பதை சுட்டிக்காட்டிய அவர் மீண்டும் இணைந்து பாஜகவுடன் தேர்தலை சந்திப்பதில் தவறு இல்லை என்றும் தெரிவித்தார்.
இந்நிலையில், பாஜக-வுடன் கூட்டணி குறித்து தேர்தல் வரும் நேரத்தில் பரிசீலனை செய்யப்படும் என்ற சூசக தகவலை முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
அதிமுக தலைமைக்கு எதிராக பன்னீர்செல்வம் போர்க்கொடி தூக்கியதில் இருந்தே, பாஜக தான் அவரை இயக்குகிறது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல், தினகரன் கட்டுக்குள் இருந்த கட்சி பழனிசாமி கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு அவரையும் பாஜக தான் இயக்குகிறது. இரு அணிகள் இணைந்ததில் பாஜக -வுக்கு முக்கியப் பங்கு உள்ளது என்றும் பரவலாக குற்றம் சாட்டப்பட்டு வருகிறது. அதற்கு ஏற்றாற்போல், மத்திய அரசுக்கு ஆதரவான கருத்துகளை அமைச்சர்கள் தெரிவிப்பதும், மாநில அரசு சிறந்த முறையில் செயல்படுகிறது என பாஜக தலைவர்கள் கூறி வருவதும் குறிப்பிடத்தக்கது.